( மயூரன் )  

வரணி பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிபர்  உட்பட மூன்று ஆசிரியைகளை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார். 

வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவியை கடந்த சில வாரங்களுக்கு முன்  அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அதனையடுத்து பாடசாலைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். 

அவ்வேளை அதிபர் மற்றும் அங்கு இருந்த மூன்று ஆசிரியைகளும் இந்த விடயத்தை இத்துடன் விட்டு விடுங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அச்சுறுத்தும் பாணியில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரதேசவாசி ஒருவர் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார். 

அது தொடர்பில் நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி சம்பவத்தை உறுதிப்படுத்திய பின்னர் , கொடிகாமம் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிசார் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியரை கைது செய்ததுடன் , இந்த சம்பவத்தை மறைக்கும் நோக்குடன் செயற்பட்டார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகளை கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்ட ஐவரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.