கொரோனா வைரஸும் உலக அரசியலும்

17 Mar, 2020 | 11:57 AM
image

அதனை ப்ளெக் டெத் (Black Death) என்­பார்கள். பெரும் கொள்ளை நோய் என்றும் அழைப்பதுண்டு. மனித குல வர­லாற்றில் ஆகவும் தீவி­ர­மான கொள்ளை நோய். இது 14ஆம் நூற்­றாண்டில் ஏற்­பட்­டது. இது ஆகக்­கூ­டு­த­லான உயிர்­களைப் பலி­கொண்­டது.

இங்­கி­லாந்தின் சனத்­தொ­கையில் 30 முதல் 50 சத­வீ­தத்தை ப்ளெக் டெத் பலி­கொண்­ட­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் கூறுகின்றன.

உலக அளவில் பரவும் கொள்ளை நோய்கள் புதி­யவை அல்ல. இவை வர­லாற்றை மாற்றும் அளவு சக்தி வாய்ந்­தவை.

கொள்ளை நோய்கள் எல்லை தாண்டி பர­வலாம். அதனைக் கூட்­டாக சமா­ளிக்க வேண்டும். அதற்­கு­ரிய பொறி­மு­றைகள் இருக்­கலாம்.

இந்த நோய்­களை வைத்து அர­சியல் செய்­வது மனித குலத்தின் துர­திர்ஷ்டம். அது அன்றும் உண்டு. இன்றும் உண்டு.

ப்ளெக் டெத் கொள்ளை நோய் எங்­கி­ருந்து பர­வி­யது என்­பது முதல் அர­சியல். சீனாவில் இருந்­தென ஒரு தரப்பு கூறும்.

இல்லை, இது ரஷ்ய ஆளு­கைக்கு உட்­பட்ட க்ரைமி­யாவில் இருந்து தான் தொற்­றி­யது என மற்­றைய தரப்பு வாதிடும். அது அர­சியல்!

ஆனால், அத்தி­லாந்திக் கடலைக் கடந்து சென்ற ஐரோப்­பி­யர்கள், அதனை அமெ­ரிக்­காவில் பரப்­பி­யதைப் பற்றி பேசு­வ­தில்லை.

கடல் கடந்து வந்த கொள்ளை, அமெரிக்க மண்ணின் பூர்வீகப் பழங்­கு­டி­களை கூட்டம் கூட்­ட­மாக பலி­கொண்­டதை மறைத்து விடு­வார்கள். அதுவும் அர­சியல். தற்­போது கொரோ­னா-­ வைரஸ். மருத்­துவ பாஷையில் சொன்னால் கொவிட்-­நைன்ரீன். முழு உல­கமும் அஞ்சி நடுங்கும் நுண்­ணுயிர்.

இதனை உலக அளவில் பர­வக்­கூ­டிய தொற்­றுநோய் (Global Pandemic) என உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வித்­தி­ருப்­பது உண்­மையே.

இது ப்ளெக் டெத் கொள்ளை நோய் அள­விற்குத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. ஏற்­ப­டுத்தும் சாத்­தியம் பற்றி பேசப்­ப­டா­மலும் இல்லை.

இன்று கொரோனா வைரஸை சுற்றி தீவிர அர­சியல். இந்தத் தொற்றை வைத்து நடத்­தப்­படும் அர­சியல் ஒரு­புறம். இது அர­சி­யலில் ஏற்­ப­டுத்தும் தாக்கம் மறு­புறம்.

உல­க­ளா­விய சுகா­தார நெருக்­கடி, உல­கெங்­கிலும் பொரு­ளா­தார சீர்­கு­லைவை ஏற்­ப­டுத்தும் காரணி. இவை பற்­றி­யெல்லாம் கவ­லை­யில்­லாத அர­சி­யல்­வா­திகள்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வ­ரையில், கொரோனா மர­ணங்­களை விடவும் நவம்பர் மாதத் தேர்தல் முக்­கி­ய­மா­னது.

விழுந்­தாலும் மீசையில் மண் ஒட்­ட­வில்லை என்­பது போல், கொரோனா மர­ணங்­களைப் பற்றி டொனால்ட் ட்ரம்­பிற்குக் கவ­லை­யில்லை.

அமெ­ரிக்க மண்ணில் கொரோ­னா­வைரஸ் கட்­டுப்­பாட்­டிற்குள் இருக்­கி­றது என்பார். இதுவே பங்­கு­களை வாங்க சிறந்த தருணம் என்­றெல்லாம் கூறுவார்.

அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரம் சிறப்­பாக இருக்­கி­றது என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தினால், நவம்பர் தேர்­தலில் வென்று மீண்டும் ஜனா­தி­ப­தி­யா­கலாம் தானே.

டொனால்ட் ட்ரம்­பிற்கு மக்­களைப் பலி­கொள்ளும் தொற்­று­நோய்கள் முக்­கி­ய­மில்லை. தமது வறட்டுப் பிடி­வா­தமே முக்­கியம்.

2014ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் எபோலா நோய் ஏற்­பட்­டது. அதனைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக பராக் ஒபாமா தேசிய பாது­காப்பு பேர­வையை ஸ்தாபித்தார்.

இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர், இந்தப் பிரிவை டொனால்ட் ட்ரம்ப் கலைத்தார். நோய்த் தடுப்பு முயற்­சி­க­ளுக்­கான நிதி­யொ­துக்­கீட்­டையும் குறைத்தார்.

இன்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து வரு­ப­வர்கள் அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க டொனால்ட் ட்ரம்ப் தடை­வி­தித்தார். அந்தத் தடை பிரிட்டன் பிர­ஜை­க­ளுக்கு பொருந்­தாது.

ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்­றி­யி­ருக்­கி­றது என்று வைத்துக் கொள்வோம். அவர் இத்­தாலி நாட்­ட­வரா, பிரிட்டன் பிர­ஜையா என்­பதைப் பார்த்து, அது மற்­ற­வ­ருக்குப் பர­வு­வ­தில்லை.

டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்­த­வ­ரையில், அது­வெல்லாம் முக்­கி­ய­மில்லை. பிரிட்டன் பிர­ஜை­க­ளுடன் நட்பு பேணலாம். மற்­றைய நாடு­களை சேர்ந்தோர் நோயா­ளிகள்.

சீன ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வ­ரையில், கொரோனா வைரஸ் என்­பது மற்­றை­யவை அனைத்­தையும் தாண்­டிய கௌரவப் பிரச்­சினை. கொவிட்-­ நைன்ரீன் தொற்­று­நோயை இயற்கை அனர்த்­த­மாக வர்­ணித்து, இது கம்யூனிஸ ஆட்­சி­யா­ளர்­களின் தவறு அல்ல என்ற தோற்­றப்­பட்டை ஏற்­ப­டுத்­து­வது முக்­கி­ய­மா­னது.

தாம் வைரஸைக் கட்­டுப்­ப­டுத்தி விட்­ட­தாக உல­கெங்­கிலும் தண்­டோரா போட்டுச் சொல்­வ­தற்­காக சீனத் தலைவர்கள் பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களில் ஈடு­ப­டு­வார்கள்.

இந்த நெருக்­க­டி­யான சந்­தர்ப்­பத்தை சீன மக்கள் கூட்­டாக சமா­ளிப்­பார்கள் என்ற செய்­தியை உல­க­றியச் செய்ய பாடு­ப­டு­வார்கள்.

கம்யூனிஸ ஆட்­சி­யா­ளர்கள் வழங்கும் தக­வல்­க­ளுக்கு அப்பால், உண்­மையில் எத்­தனை பேர் பலி­யா­னார்கள் என்ற கேள்­வி­க­ளுக்கு சீனத் தலை­வர்கள் பதில் அளிப்­ப­தில்லை.

15 கோடி மக்கள் வீடு­களில் முடங்கிக் கிடந்து, நட­மாடும் சுதந்­தி­ரத்தை இழந்து நிற்­பது பற்றி சொல்­வ­தெல்லாம் சீனத் தலை­வர்­க­ளுக்கு மானக்­கேடு.

கொரோ­னா-­ வைரஸ் பெரும் நெருக்­க­டி­யாக மாறப் போகி­றது என டிசம்பர் மாதத்தில் எச்­ச­ரித்த வுஹான் நகர மருத்­து­வரை பொலிஸை விட்டு விசா­ரித்­த­வர்கள், சீனத் தலை­வர்கள்.

லி வென்­லியாங் என்ற மருத்­துவர். கொரோ­னா­விற்கு பலி­யா­னவர். இவர் தீவிரத்தை கொடு­மையை உல­க­றியச் செய்­த­போது, பொய் சொல்ல வேண்­டா­மென பொலிஸார் எச்­ச­ரித்­தனர்.

இந்த நோய் தொடர்­பிலும், நோயின் விளை­வுகள் தொடர்­பிலும் மற்­றவர் மீது விரல் நீட்டும் போக்கு. இது உலக அர­சி­ய­லாக நீடிக்­கி­றது. நாடு­க­ளுக்கு மத்­தி­யி­லான பதற்­றத்தை அதி­க­ரித்­துள்­ளது.

நோயின் உரு­வாக்கம் பற்றி குற்­றச்­சாட்­டுக்­களை ஆரா­யலாம். சீனர்­களைப் பொறுத்­த­வ­ரையில், இது அமெ­ரிக்கா உருவாக்கி, தமது நாட்டை அழிப்­ப­தற்­காக அனுப்­பிய ஆயுதம்.

அமெ­ரிக்க அர­சி­யல்­வா­திகள் மாற்றிச் சொல்­வார்கள். வுஹான் நகர ஆய்­வு­கூ­ட­மொன்றில் பயங்­கர உயி­ரியல் ஆயு­த­மொன்றை உரு­வாக்க முனைந்­த­போது, அதன் விளை­வாக உரு­வா­னதே கொரோ­னா-­ வை­ர­ஸென அமெ­ரிக்க அர­சியல்வாதிகள் சாடு­வார்கள்.

ஈரானில் சுகா­தார அமைச்­ச­ருக்கு கொரோ­னா-­ வைரஸ் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து, அந்­நாட்டுக்கு எதி­ராக காழ்ப்­பு­ணர்ச்­சி­யுடன் விஷமப் பிர­சா­ரங்கள். நோயைக் கட்­டுப்­ப­டுத்­தாமல், ஈரா­னியத் தலை­வர்கள் தேர்­தலை வைத்­த­தாக குற்றச்­சாட்­டுக்கள்.

கொரோனா வைரஸ் பற்றி வீணான அச்சம் பரப்­பப்­ப­டு­வ­தாக ஒரு சந்­தர்ப்­பத்தில் ஈரா­னிய ஜனா­தி­பதி ஹசன் ரௌஹானி குற்­றஞ்­சாட்­டினார். இது ஈரானின் பகை­யா­ளிகள் கட்­ட­விழ்த்து விடும் சதி­யென்று கூட அவர் குறிப்­பிட்டார்.

சீனர்­களின் உணவுக் கலா­சா­ரத்தை விமர்­சித்­த­வர்கள், மதத்தை முன்­னி­றுத்­தி­னார்கள். கண்­ட­தையும் உண்­பதால் இது சீனர்­க­ளுக்கு இறைவன் கொடுத்த தண்­டனை என்­றார்கள். கேலி செய்­தார்கள். இதில் சில முஸ்­லிம்கள் முன்­னின்­றார்கள்.

எனினும், கொரோனா குடும்­பத்தைச் சேர்ந்த மெர்ஸ் வைரஸ் ஒட்­டக இறைச்சி மற்றும் ஒட்­டகப் பாலின் மூலம் பர­வி­யதை மறந்­தி­ருந்­தார்கள். அத்­துடன், வைரஸ் அச்­சத்தால் புனித ஸ்தலங்கள் வெறிச்­சோ­டிய சந்­தர்ப்­பத்தில் இறைவன் ஞாப­கத்­திற்கு வர­வில்லை.

கொரோ­னா-­ வைரஸ் உன்னில் தான் உரு­வா­னது, உன்னால் தான் பர­வி­யது என்று நேர­டி­யாக குற்­றஞ்­சாட்­டு­வதை விடவும், இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களைக் காரணம் காட்டி உலக நாடுகள் சண்டை பிடித்துக் கொண்ட சந்­தர்ப்­பங்கள் ஏராளம்.

எவ­ரேனும் 14 நாட்­க­ளுக்குள் சீனா­விற்கு சென்­றி­ருக்­கி­றீர்­களா, அப்­ப­டி­யானால் எமது நாட்­டிற்குள் வரக்­கூடாது என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடையை சுட்­டிக்­காட்­டலாம்.

தமது நாட்டின் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்ச்­சியால் டொனால்ட் ட்ரம்ப் வீணான பீதியைக் கிளப்­பு­கிறார் என்று சீன வெளி­வி­வ­கார அமைச்சு சாடி­யது. அமெ­ரிக்க இராஜாங்க செய­லா­ளரோ தக­வல்­களை மறைக்­கி­ற­தென சீனாவின் மீது விரல் நீட்­டினார்.

இலங்­கை­யையும் உதா­ரணம் காட்­டலாம். இத்­தாலி, ஈரான், தென்­கொ­ரியா ஆகிய நாடு­களில் இருந்து, எவரும் இலங்­கைக்கு வர முடி­யாமல் இலங்கை அர­சாங்கம் இரு­வார கால தடையை விதித்­தது.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நாடு­களை விடவும், சீனாவில் தானே கொரோ­னா-­வைரஸ் தொற்று அதிகம்? சீனர்­க­ளுக்கு தடை­வி­திக்­கா­தது ஏன்? ராஜ­பக் ஷ குடும்பம் சீனா­விற்கு விசு­வா­சத்தைக் காட்ட மக்­களை பணயம் வைக்­கி­றதா என்ற விமர்­ச­னங்கள் எழுந்­தன.

இதே பிரச்­சினை தென்­கொ­ரி­யா­விலும் தலை­தூக்­கி­யது. இங்கு கொரோனா மர­ணங்கள் அதிகம். இதற்கு சீனா தான் காரணம் என்ற உணர்வும் தான். ஆனால், தென்­கொ­ரிய அரசு சீன விருந்­தா­ளி­களைத் தடை செய்ய தயங்­கி­யதால் மக்கள் ஆத்­திரம் அடைந்­தனர்

ஜப்­பானை நோக்­கலாம். அந்­நாட்டு அரசு நிதா­ன­மாக நடந்து கொண்டு சீனாவின் மீது விரல் நீட்­டாமல் பார்த்துக் கொண்­டது. ஆனால், ஜப்­பா­னிய மக்கள் கொந்­த­ளித்­தார்கள். கடை­களில், ‘சீனர்­க­ளுக்கு இட­மில்லை’ என்று எழுதி, ஜென்மப்­ப­கையை காட்­டி­னார்கள்.

ஐரோப்­பாவை ஆரா­யலாம். இங்கு ஷெங்கன் என்று வரை­ய­றுக்­கப்­படும் பிர­தேசம் உள்­ளது. இதில் 26 நாடுகள் உள்­ளன. இந்த நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் விசா இன்றி பரஸ்­பரம் அடுத்த நாட்­டுக்கு செல்ல முடியும்.

இன்று சீனா­விற்கு அடுத்­த­ப­டி­யாக இத்­தா­லியில் கொரோ­னா-­ வை­ரஸின் தாக்கம் அதி­க­மாக இருக்­கி­றது. ஷெங்கன் ஏற்­பாடு கார­ண­மாக ஏனைய நாடு­க­ளிலும் கொரோனா வைரஸ் தீவி­ர­மாக பரவி விடுமோ என்று ஐரோப்­பிய நாடுகள் அஞ்­சு­கின்­றன.

அடுத்து அக­திகள் நெருக்­கடி. இன்று மத்­திய கிழக்கு நெருக்­க­டி­களால் இடம்­பெ­யர்ந்த கோடிக்­க­ணக்­கான மக்கள், பல நாடு­களில் அக­தி­க­ளாக வாழ்­கி­றார்கள். சிரி­யாவின் இத்லிப் நகரில் இடம்­பெ­யர்ந்த மக்கள், துருக்­கி­யு­ட­னான எல்­லையில் முகா­மிட்­டுள்­ளனர்.

இந்த அக­திகள் மத்­தியில் வைரஸ் பரவும் பட்­சத்தில், இவர்கள் ஐரோப்பா நோக்கி நகர்­வதைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­தென துருக்கி அரசாங்கம் அறிவித்தது. இது ஐரோப்பிய தலைவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இத்தகைய நெருக்கடிகள் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில், அவற்றைக் கையாளக்கூடிய அமைப்புக்கள் இருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இன்றைய உலக ஒழுங்கில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விடவும், யார் வல்லாதிக்கம் செலுத்துவது என்பதில் வல்லரசு நாடுகள் அக்கறை காட்டுகின்றன.  இன்று உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவக் கூடிய தொற்றுநோயாக பிரகடனம் செய்திருப்பதன் காரணமாக, மிகத் தீவிரமான சுகாதார நெருக்கடியைத் தவிர்க்கக்கூடிய நிலைமை சாத்தியப்பட்டிருக்கலாம்.

இந்த நோயின் அரசியல் விளைவுகளைக் கட்டுப்படுத்துதல் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது.

- சதீஷ் கிருஷ்ணபிள்ளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22