ஆளுமைகொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா ?

17 Mar, 2020 | 11:36 AM
image

வேட்புமனுத் தாக்கல் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வடக்கு, கிழக்கில் மாத்திரம் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டது. புளொட்டும் கிட்டத்தட்ட வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது.

கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நியமனக் குழு கொழும்பில் கூடி தமது வேட்பாளர்களை கிட்டத்தட்ட தீர்மானித்து விட்ட நிலையில், அந்தக் கட்சிக்குள் உள்ளக மோதல்கள் உருவாகியிருக்கின்றன.

குறிப்பாக, யாழ்ப்பாண தேர்தல் களத்தில் தான், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கு மத்தியில் பனிப்போர் மூண்டிருக்கிறது.

கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிப்பது என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ. சரவணபவன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து 7 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், 10 பேர் கொண்ட வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 5 பேர் தவிர, 5 புதிய வேட்பாளர்களை மாத்திரம், தெரிவு செய்ய வேண்டியிருந்தது.

இந்தமுறை யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட்டுக்கு இரண்டு இடங்களும், ரெலோவுக்கு ஒரு இடமும் ஒதுக்க முடிவாகியிருந்தது.

புளொட் தமது தரப்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜதீபனை களமிறக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டது. அதுபோலவே, ரெலோவும், சுரேந்திரன் குருசாமியை அறிவித்து விட்டது.

எஞ்சிய மூன்று இடங்களுக்குத் தான் புதிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு உள்ளது.

இந்த நிலையில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், கூட்டமைப்பு சார்பில் போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியது. அதையடுத்து, அவருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியினரே போர்க்கொடி எழுப்பியிருந்தனர்.

இறக்குமதி வேட்பாளர்கள் தமிழர்களுக்குத் தேவையில்லை என்றும், சொந்த மண்ணில் இருந்தே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

சுரேன் ராகவனுக்கு  வாய்ப்பளிக்க, தமிழரசுக் கட்சி மறுத்து விட்டதாகவே செய்திகள் வெளியான போதும், இறக்குமதி வேட்பாளர்கள் தேவையில்லை என்ற பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஏற்கனவே, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனைக் களமிறக்கி எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டியே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இறக்குமதி வேட்பாளர்கள் குறித்து, ஏற்கனவே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று விட்டவர்களுக்கு தொற்றிய அச்சமும் இந்தப் பிரசாரத்துக்கு ஒரு காரணம்.

இம்முறை வேட்புமனுக்களில் பெண் வேட்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விடயம், வலியுறுத்தப்படும் நிலையில், இதில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தவர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தான்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில்,  போட்டியில் இறக்க முயற்சித்திருந்தது கூட்டமைப்பு. அவர் அப்போது அதற்கு இணங்கவில்லை.  இப்போது தான் அதற்குப் பச்சைக் கொடி காண்பித்திருக்கிறார்.

சசிகலா ரவிராஜ் வேட்பாளராக களமிறங்குவதை,  எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. ஏனென்றால், அவர் தமிழ் மக்களுக்காக  - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக தனது கணவனின் உயிரையே பறிகொடுத்தவர். அவருக்கு இடமளிக்கப்படுவதை யாராலும்  கேள்விக்குட்படுத்த முடியாது.

இன்னொரு பெண் வேட்பாளராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த அம்பிகா சற்குணநாதனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதற்குத் தான் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

அவருக்கான எதிர்ப்பு இரண்டு விதங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

முதலாவது, தமிழரசுக் கட்சியின் மட்டத்தில் இருந்து.

இரண்டாவது, அந்த முடிவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கட்சிக்கு வெளியே இருந்து.

அம்பிகா சற்குணநாதன் யாழ்ப்பாண மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவராயினும், கொழும்பையே தளமாக கொண்டிருந்தவர். அவரை இறக்குமதி வேட்பாளராக அடையாளப்படுத்தி செய்யப்பட்ட பிரசாரங்களுக்கு, கடந்தமுறை தெரிவான எம்.பிக்கள் சிலருக்கு தொற்றிக் கொண்ட தோல்விக் காய்ச்சல் தான் முக்கிய காரணம்.

இந்தமுறை யாழ்ப்பாணத்தில் கடுமையான போட்டிச் சூழல் உள்ளது. கூட்டமைப்புக்கு தொடர்ந்து சவால் விட்டு வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன், புதிய சவாலாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் கிளம்பியிருக்கிறது.

அதைவிட, ஈ.பி.டி.பி., சந்திரகுமாரின் சுயேட்சைக்குழு, ஐ.தே.க, சுதந்திரக் கட்சி போன்றனவும் யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான முழு முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இவ்வாறான நிலையில் ஆசனப் பகிர்வு எவ்வாறு அமையும் என்ற சிக்கலான கேள்வி உள்ளது.

இவற்றுக்கு மத்தியில் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களும் அதற்கு சவாலாகவே இருக்கின்றன.

இந்தநிலையில், ஆளுமையான, பிரபலமான, வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் தமது வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம், தமிழரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளர்களுக்கு வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

கடந்த முறை மயிரிழையில் தப்பிக் கொண்டவர்கள் மாத்திரமின்றி, முக்கிய தலைவர்கள் கூட, தமது வெற்றி வாய்ப்பு குறித்த சந்தேகத்தில் உள்ளனர். இவ்வாறான நிலையில், தான் அம்பிகா சற்குணநாதனுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

அவர் ஒரு பெண் வேட்பாளராகவும், துறைசார் ஆளுமை கொண்டவராகவும், இருப்பது மேலதிக தகைமைகள்.

யாழ்ப்பாணத்தில் 54 வீதமானவர்கள் பெண்கள். இந்த நிலையில் பெண் வேட்பாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க வாக்காளர்கள் முடிவு செய்தால், தமது நிலை கேள்விக்குறியாகி விடும் என்று அவர்களுக்கு கலக்கம் வந்திருக்கிறது.

இந்தநிலையில் தான், அம்பிகா சற்குணநாதனுக்கு எதிராக தமது ஊடகப் பலத்தைக் கொண்டும், சமூக ஊடகங்களைக் கொண்டும், பிரசாரங்கள் முன்னெடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு முனைவதில்லை என்றும், கட்சிக்கான வாக்குகளை வைத்து முக்கிய தலைவர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்றும் பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

கூட்டமைப்புக்கு என ஒரு வாக்கு வங்கி உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில், பரவலாக செல்வாக்குப் பெற்ற வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக, பெயருக்கு – தோல்வியடையக் கூடிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இது முக்கிய தலைவர்களின் வெற்றியைப் பாதிக்காது. அவர்கள் இலகுவாக பாராளுமன்றம் செல்வார்கள்.

இவ்வாறானதொரு பாரம்பரியம் கூட்டமைப்புக்குள் இருப்பதை, அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சாவகச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தமுறை அவ்வாறான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சூழல் தென்பட்டாலும், தமது வெற்றியை உறுதிப்படுத்த முனையும் பழைய முகங்கள் அதற்கு தயாராக இல்லை. அதனால் தான், பெண் வேட்பாளர் என்றும் பாராமல், அம்பிகா சற்குணநாதன் மீது வசைமாரி பொழியப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் வாய்மூடி பிரதிநிதிகளை மாத்திரம் வைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது ஆளுமையான பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடியவர்களை சேர்த்துக் கொண்டு பயணிக்கப் போகிறதா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.

இந்தமுறை தேர்தலில் நிறுத்தப் போகும் வேட்பாளர்கள், டம்மிகளாக இருப்பதற்குப் பதிலாக, ஆளுமை கொண்டவர்களாக இருப்பது முக்கியம்.

அவ்வாறான வாய்ப்பை அவர்கள் தவறவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்காளர்கள், ஆளுமை கொண்டவர்களாக அடையாளப்படுத்தும் ஏனைய தரப்புகள், கட்சிகளையும் கவனத்தில் கொள்ள முனைவார்கள்.

- சத்ரியன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22