அரசும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் துரிதமாக முன்னேற அரச சேவையில் வினைத்திறன் உயர்ந்தாக வேண்டும், ஒரு குறுச்செய்தி மூலம் அரச ஊழியர்கள் தமது வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நடைமுறை வளர வேண்டும் என பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் பத்தும பண்டார தெரிவித்தார்.

கண்டி பல்லேகலையில் இடம்பெற்ற மத்திய மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்களது கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் எமது உரிமைகளை இழந்த நிலையில் இருந்தோம். சர்வ தேசத்தைப் பகைத்துக் கொண்டிருந்தோம். இன்று அந்நிலைமைகள் சீரடைந்துள்ளன. அவ்வாறான ஒரு நிலையில் வெறும் தாபனக் கோவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரச சேவை முடங்கி விட்டால் நாடும் அபிவிருத்தியும் அனைத்து அரசியல் செயற்பாடுகளும் ஸ்தம்பித்து விடும். எனவே ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின் அரச சேவையில் வினைத்திறன் காணப்பட வேண்டும்.

இரண்டாம் உலகமகாயுத்தத்தில் முற்றாக செயல் இழந்த யப்பான் நாடு தனது வினைத்திறன் அதிகரிப்பு காரணமாக இன்று பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அது உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளது. வினைத்திறன் அல்லது உற்பத்தித்திறன் எனும் போது நேரத்தையும், காலத்தையும், வளங்களையும் முகாமை செய்வதாகும். அந்த அடிப்படையில் இலங்கையை விடப் பின் தங்கியிருந்த சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் வினைத்திறனை ஒழுங்கமைத்ததால் எம்மை விட முன்னேற்றமடைந்த நாடுகளாக மாறி விட்டன.

இன்று இலங்கையில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக கண்டியில் பாரிய வாகன நெரிசலைக் காண்கிறோம். ஒருவர் கண்டியிலிருந்து கொழும்பு சென்றுவர போக்குவரத்துக்கே 10 மணித்தியாலங்களை செலவிட வேண்டி வரலாம். 

ஏன் வாகன நெரிசல் எனப்பார்த்ததால் அரச ஊழியர்கள் பயணிப்பதும், அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் செல்வதாலுமே அதிக நெரிசல் ஏற்படுகிறது. ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தமது பிரச்சினையைத் தீர்க்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களாயின் பாரியளவு போக்குவரத்து குறைந்து விடும்.

ஒரு நாட்டின் மிக முக்கியமான முதலீடுதான் கல்வி. இதனை நன்கு தெரிந்து கொண்ட சில சர்வதேச நாடுகள் தமது தேசிய வருமானத்தில் 8 முதல் 10 சதவீதத்தை கல்விக்காகச் செலவிடுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் எமது நாட்டில் என்ன நடந்தது. 1.7 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டு வந்தது. எமது நல்லாட்சிக்குப் பின்னர் அது 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாவை விட எக்காலத்திலாவது சம்பள அதிகரிப்பு வழங்கப் படவில்லை. ஆனால் எமது அரசு சகல அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து கட்டம் கட்டமாக வழங்க முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவும் வாழ்க்கைப்படியாக வழங்கப்பட்ட தொகையும், அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாவும் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் அரச ஊழியர்களது ஆகக் குறைந்த சம்பளமாக 11 ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒன்றாக்கும் போது ஆகக் குறைந்தது ஒரு அரச ஊழியன் 23 500 ரூபாவை மாதாந்தம் பெற முடியும், அதில் 12500 ரூபாவிற்கு மேல் அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பாக கருதலாம்.

அரச சேவை மிக மந்த கதியில் நடப்பதாக அடிக்கடி முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. அதில் உண்மையும் உண்டு. எனவே அரசு துறையில் காலம், மனித வளம், பௌதீக வளம் என்பன முகாமை செய்யப்பட்டு அதன் மூலம் வினைத்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு அதிகாரிகளது தியாகம் தேவை என்றார்.

(வத்துகாமம் நிருபர்)