மனித உரிமைகள் பேர­வையில் இலங்­கையின் நிலை என்ன?

Published By: Digital Desk 3

06 Mar, 2020 | 12:50 PM
image

முன்னாள் மைத்­திரி – ரணில் அரசு 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமைப் பேர­வையில் ஏற்­றுக்­கொண்ட 30/1 ஆம் 34/1 ஆம் 40/1 ஆம் பிரே­ர­ணை­க­ளுக்கு இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து தான் விலகிக்கொள்­வ­தா­கவே இப்­போது கோத்­த­பாய – மஹிந்த அரசு அங்கு கூறி­யி­ருக்­கி­றது. அதற்குப் பின்­வரும் கார­ணங்­க­ளையும் கூறி­யி­ருக்­கி­றது.

30/1ஆம் 34/1ஆம் 40/1ஆம் பிரே­ர­ணைகள் இலங்­கையின் யாப்­புக்கு எதி­ரா­ன­வை­யாகும். அவை இலங்­கையின் இறை­யாண்­மை­யையும் மீறு­கின்­றன. அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­விடம் அனு­மதி பெறாமல் ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­வை­யாகும். அதற்கு அப்­போ­தைய அமைச்­ச­ர­வை­யிடம் ஒப்­புதல் பெறப்­ப­டவும் இல்லை. அதைப் பாரா­ளு­மன்­றத்தில் அறி­விக்­கவும் இல்லை. இவற்றால் ஜன­நா­யக விழு­மி­யங்கள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன.

இதை இலங்­கையின் சார்பில் முன்­வைத்த வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்தன 30/1 ஆம் பிரே­ரணை எந்த வகையில் இலங்­கையின் யாப்­புக்கு முர­ணா­கி­றது. இலங்­கையின் இறை­யாண்­மையை மீறு­கி­றது என்­பதை கூற­வில்லை.

உண்­மையில் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேர­வைக்கும் அர­சுக்கும் தமிழ் தரப்­புக்கும் மட்­டுமே கடந்த 5 ஆண்­டு­க­ளாக 30/1 ஆம் 34/1 ஆம் 40/1 ஆம் பிரே­ர­ணைகள் விரி­வாகத் தெரிந்­தி­ருக்­கின்­றன. சில­ருக்கு அவை பற்றி தெரிந்­தி­ருக்­கின்­ற­போதும் 20 நிபந்­த­னை­களும் துலாம்­ப­ர­மாகத் தெரி­யாது. முன்னாள் அரசு 30/1 ஆம் பிரே­ரணை யாப்­புக்கு முர­ணல்ல எனவும் இறை­யாண்­மைக்கு எதி­ரல்ல எனவும் ஏற்­றி­ருக்­கையில் இந்நாள் அரசு அதற்கு மாறாகக் கூறு­கி­றது.

முன்னாள் அரசு நாட்டின் பெரும்­பான்மைச் சமூ­க­மான சிங்­க­ள­வ­ரிடம் பகி­ரங்­கப்­ப­டுத்­தா­தி­ருக்­கவே மறைத்­தி­ருக்­கலாம் என நினைக்­கிறேன். மத்­திய அரசு பேரின ஆதிக்­கத்தில் இருந்­த­தாலும் இது போர்­குற்ற விவ­காரம் என்­ப­தாலும் நாட்டின் முக்காற் பங்­கினர் சிங்­க­ள­வரே என்­ப­தாலும் பாது­காப்­புத்­து­றையில் 100 வீதம் சிங்­க­ள­வரே என்­ப­தாலும் 30/1 ஆம் பிரே­ரணை கெடு­பி­டி­க­ளின்றி ஐ.நா. மனித உரிமை ஆணையின் இணக்­கப்­பாட்­டு­ட­னேயே அமு­லா­வது தனக்கும் எளிது என்றே அந்த அமைப்பு திரும்பத் திரும்ப இரு­முறை தவ­ணை­களும் வழங்­கி­யி­ருக்­கலாம்.

எனினும் அதன் விட்டுக் கொடுப்­பான இந்த அணு­கு­முறை இப்­போது கோத்­த­பாய– மஹிந்த அரசு இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யதுதான் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. மனித உரிமை ஆணையம் தமிழ் தரப்­புக்கு எதை­யேனும் செய்தே ஆக வேண்டும் என்னும் நிலைப்­பாட்­டுக்கும் கொண்டு வந்­தி­ருக்­கி­றது. காரணம் இதில் அதன் சுய­கெ­ள­ர­வமும் தமிழ் தரப்பின் நம்­பிக்­கையைத் தக்க வைப்­ப­தற்­கான கடப்­பாடும் பொதிந்­தி­ருக்­கி­றது.

அண்­மையில் தான் சமஷ்டி யாப்­புக்கு முர­ணல்ல என உயர் நீதி­மன்றம் பொருட்­கோடல் செய்­தி­ருந்­தது. எனவே பல்­லின ஒற்­றை­யாட்­சிக்குள் சமஷ்டி வழங்­கப்­ப­டு­வதன் மூலம் தேசத்தின் இறைமை பாதிப்­பு­றாது. இதை மத்­தியில் கூட்­டாட்சி மாநில சுயாட்சி என்­பார்கள். பல்­லின நாட்டில் இனங்­க­ளுக்குள் வழங்­கப்­படும் உள்­ளக சுய­நிர்­ணயம் எனவும் இதைக் குறிப்­பி­டலாம்.  

பல்­லின நாட்டில் ஓர் இனம் மட்­டுமே அதி­காரப் பரவல் செய்­யாது முழு சுய நிர்­ண­யத்­தையும் முழு இறை­மை­யையும் உரித்­தாக்கிக்கொள்­வ­தற்கே முனை­கி­றார்கள். இது சர்­வ­தேச சட்­ட­வி­தி­க­ளுக்கு முர­ணா­ன­தாகும்.

தினேஷ் குண­வர்­த்தன சிரேஷ்ட சம­தர்­ம­வா­தி­யான பிலிப் குண­வர்­த­்தனவின் புதல்வர். இவ­ருக்கு இது தெரி­யா­தி­ருக்­காது. 2015 ஆம் ஆண்டு முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் அமைச்­ச­ர­வைக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் அறி­விக்­கா­ம­லேயே அதி­லி­ருந்து வில­கு­வ­தாக இந்நாள் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்தன கூறு­கிறார்.

இதன் மூலம் இவர் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து மட்­டுமே வில­கி­ய­தா­கி­றது. மங்­கள சம­ர­வீர போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூறவும் ஒப்­புக்­கொண்டே 30/1 ஆம் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த இணை­அ­னு­ச­ர­ணையைப் பெற்­றி­ருந்தார். எனவே இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தி­லி­ருந்து வில­கி­னாலும்கூட போர்க்­குற்­றத்தை ஒப்புக்கொண்­டதும் பொறுப்புப் கூறலை ஒப்புக் கொண்­டதும் அப்­ப­டியே இருக்கும் அவற்­றி­லி­ருந்தும் இலங்கை வில­கி­ய­தா­காது.

அதனால்தான் தினேஷ் குண­வர்­த்தன உள்­நாட்டில் ஒரு நீதி­ப­தியை நிய­மித்து விசா­ரிக்­க­வி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார். இதன் வெளிப்­பாடும் என்ன? குற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. அதற்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கிறோம் என்­பது தானே?

ஆக மங்­கள சம­ர­வீ­ர­வைப்போல் தினேஷ் குண­வர்­த­்தனவும் கூட குற்­றத்தை ஏற்றுக் கொண்டு பொறுப்புக் கூறவும் ஒப்­புக்­கொண்­டே­யி­ருக்­கிறார். அவர் 30/1 ஆம் பிரே­ர­ணையை ஏற்று இணை அனு­ச­ர­ணைக்கு இணங்­கி­யி­ருக்­கையில் இவர் 30/1 ஆம் பிரே­ர­ணையை ஏற்­காமல் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கிறார்.

தினேஷ் குண­வர்­த்தன குற்­றத்தை மறுக்­க­வு­மில்லை. பொறுப்புக்கூறலை நிரா­க­ரிக்­க­வு­மில்லை. அப்­படிச் செய்தால் மனித உரிமை ஆணை­யத்தின் பிடி மேலும் இறுகும் என்­ப­தா­லேயே அவற்றைத் தவிர்த்­தி­ருக்­கிறார். குற்றம் புரி­ய­வில்லை; பொறுப்பு கூறத் தேவை­யு­மில்லை என்னும் நிலைப்­பாடு அவ­ரிடம் இருந்­தாலும்கூட அதனால் விளையும் பாதிப்பை எண்­ணியே அவர் அதைத் தவிர்த்­தி­ருக்­கலாம் என நினைக்­கிறேன்.

உள்­நாட்டு விசா­ர­ணையை இவர் முன்­மொ­ழிந்­த­தற்கும் காரணம் குற்ற ஏற்பை மறுக்­க­வில்லை. அதற்­கான பொறுப்­பேற்­றலை நிரா­க­ரிக்­க­வு­மில்லை என்­ப­தற்­கே­யாகும். இதன் மூலம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் கலப்பு விசா­ர­ணைக்கும் உடன்­ப­டப்­போ­வ­தில்லை என்­பதே இவ­ரது நிலைப்­பா­டாகத் தெரி­கி­றது. இணை அனு­ச­ரணை வேண்டாம் என ஏன் கூறு­கிறார்? 30/1 ஆம் பிரே­ர­ணைக்­கு­ரிய 20 விட­யங்­க­ளிலும் மனித உரிமை ஆணை­யத்­தோடு இணைந்து செயற்­ப­ட­வேண்டும். அவற்­றுக்­கான சூழல் இலங்­கையில் இல்லை என்­ப­த­னா­லே­யேயாகும். சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் கலப்பு விசா­ர­ணைக்கும் இலங்கை விருப்­ப­மில்லை. உள்­நாட்டு விசா­ர­ணைக்கு தமிழ் தரப்பு விருப்­ப­மில்லை. தினேஷ் குண­வர்­த்தன உள்­நாட்டு விசா­ர­ணையை மட்­டுமே முன்­வைத்­த­போது மனித உரிமை ஆணை­யாளர் அதை நிரா­க­ரித்துவிட்டார். காரணம் உண்­மை­யான நீதிக் கட்­ட­மைப்பு இலங்­கையில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றே அவர் நம்­பு­கிறார். அதுபோல் சர்­வ­தேச விசா­ரணை மூலமோ கலப்பு விசா­ரணை மூலமோ தீர்ப்பு ஒரு தலைப்­பட்­ச­மா­கி­விடும் என்றே இலங்கை காரணம் கூறு­கி­றது. 30/1 ஆம் பிரே­ர­ணைக்­கான செயற்­பா­டு­களில் மனித உரிமை ஆணை­யத்­தையும் இணைத்துக்கொண்­டாலும்கூட ஒருதலைப்­பட்ச முடிவே கிடைக்கும் என்றே இலங்கை நினைப்­பது போல் தெரி­கி­றது.

தற்­போது இலங்­கைக்கு எதி­ராக மனித உரிமை ஆணை­யத்­துக்குக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இங்­கி­லாந்தே முன்­னணி வகிக்­கி­றது. எனினும் சமீ­பத்தில் அங்கு வெளி­யான கன்­சர்­வேடிங் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இலங்­கையை இரண்­டாகப் பிரித்துக் காட்­டி­யி­ருக்­கி­றது. அதே கட்­சியே அத்­தேர்­தலில் வெற்றி பெற்றும் இருந்­தது. அதன் பிறகு முன்பு முதன் முதலில் இலங்­கைக்கு எதி­ராகப் பிரே­ரணை கொண்டுவந்து முன்­னிலை வகித்­தி­ருந்த அமெ­ரிக்­காவும் கூட சமீ­பத்தில் இலங்கைத் தள­ப­தியும் அவ­ரது குடும்­பமும் தனது நாட்­டுக்கு வரக்­கூ­டாது எனத் தடை விதித்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் மன­மாற்­றத்­துக்கு இவை­களும் கார­ணங்­க­ளாக இருக்­கலாம். இலங்­கையை இரண்­டாகத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வெளி­யிட்டு அமைந்த ஆட்­சியே இங்­கி­லாந்தில் தற்­போது அமைந்­தி­ருக்­கி­றது. இங்­கி­லாந்தின் தலை­மைத்­து­வத்­தி­லேயே தற்­போ­தைய பிரே­ர­ணையும் கொண்டுவரப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் தான் இலங்கை மனித உரிமை ஆணை­யத்­துடன் சேர்ந்து 30/1 ஆம் தீர்­மா­னத்தில் செயற்­பட மறுக்­கி­றதோ? சர்­வ­தேச விசா­ர­ணையோ கலப்பு விசா­ர­ணையோ உள்­நாட்டு விசா­ர­ணையோ இது­வரை நிக­ழா­தி­ருக்­கையில் அமெ­ரிக்கா இலங்கைத் தள­ப­தியைப் போர்க்­குற்­ற­வா­ளி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தி அவரும் அவ­ரது குடும்­பமும் தனது நாட்­டுக்குள் நுழை­யக்­கூ­டாது எனத் தடை செய்­ததால்தான் இலங்கை சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் கலப்பு விசா­ர­ணைக்கும் விருப்­ப­மில்லை என இறு­தி­யாக முடிவு எடுத்­ததோ?

அதனால்தான் 30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்தும் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்தும் இலங்கை வில­கி­ய­தாக நான் நினைக்­கிறேன். அப்­போதும் கூட இலங்கை முன்­வைத்த உள்­நாட்டு விசா­ரணை என்னும் மாற்று யோச­னையை ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் நிரா­க­ரித்­தி­ருந்தார். அவ­ரது கருத்­துக்கள் இப்­படி அமைந்­தி­ருந்­தன.

உள்­ளக செயற்­பா­டு­களில் இலங்கை தொட­ராகத் தோல்­வி­யுற்­றி­ருக்­கி­றது.

இலங்­கையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி மறுக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் சிறு­பான்­மைகள் குறித்து அக்­கறை அவ­சியம்.

இந்­நி­லையில் இன்­னு­மொரு விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நான் இணங்­க­வில்லை. பாதிப்­புற்றோர் நீதி மறுக்­கப்­பட்­டோ­ரா­கவே தொடர்ந்தும் இருக்­கி­றார்கள் என்றார். அத்­தோடு அவர் இலங்கை அரசு நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் மனித உரி­மை­யிலும் முன்பு வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறாக வேறொரு அணு­கு­மு­றையை முன்­வைத்­தி­ருப்­பது பற்றி நான் கவ­லைப்­ப­டு­கிறேன். கடந்த கால மீறல்கள் மீளவும் நிக­ழாது என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை. எனவே, மனித உரிமைப் பேர­வை­யா­னது இலங்­கையின் விட­யத்தில் தொடர்ந்தும் அவ­தா­ன­மா­கவே இருக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்­டி­ருந்தார். பின்­வரும் விட­யங்­களும் அவ­ரது அறிக்­கையில் காணப்­பட்­டன.

இலங்கை அரசு எல்லா மக்­க­ளதும் தேவை­க­ளையும் கருத்­திற்­கொண்டு செயற்­பட வேண்டும்.

முக்­கி­ய­மாக சிறு­பான்­மை­களின் தேவை­களைப் பற்றி சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக செயற்­ப­டுத்­தப்­பட்­ட­வற்றை (30/1 ஆம் தீர்­மா­னத்தில் உள்­ள­வற்றை)ப் பாது­காத்துத் தொட­ரு­மாறு நான் இலங்கை அர­சிடம் வலி­யு­றுத்­து­கிறேன்.

காணா­மற்­போனோர் மற்றும் இழப்­பீடு வழங்கல் அலு­வ­ல­கத்­திற்கு அர­சியல் ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் ஒத்­து­ழைப்பு வழங்கும்படியும் இலங்கை அர­சிடம் வேண்டிக்கொள்­கிறேன். காரணம் அவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு நீதி­யையும் நிவா­ர­ணத்­தையும் பெற உரிமை இருக்­கின்­றது.

19 ஆம் திருத்தச் சட்­டப்­படி இலங்­கையின் சுயா­தீன நிறு­வ­னங்கள் பல­ம­டைந்­தன. இவை ஜன­நா­யகக் கட்­ட­மைப்பின் முக்­கிய விட­யங்­க­ளாகும்.

சிவில் சமூ­கத்தின் சுயா­தீன ஊட­கத்­துக்­கு­ரிய இடை­வெ­ளியும் பாது­காக்­கப்­பட வேண்டும்.

சிவில் செயற்­பா­டுகள் பாது­காப்பு அமைச்­சுக்கு உட்­பட்டு ஓய்வுபெற்ற படை அதி­கா­ரி­க­ளிடம் சென்­றுள்­ளன.

மனித உரிமை காப்­பா­ளர்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றனர்.

தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான வைராக்­கிய பேச்­சுக்கள் அதி­க­மா­வதைக் காணு­கிறோம்.

கடந்த கால மனித உரிமை மீறல்­க­ளுக்­கு­ரிய தண்­ட­னை­யற்ற கலா­சாரம் தொட­ரவே செய்­கி­றது. இதுவே மிக அடிப்­படைப் பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது என்­றெல்லாம் அந்த அறிக்­கையில் காணப்­ப­டு­கின்­றன.

ஆக எல்லா மக்­க­ளது தேவைகள் எனவும் கூறி­விட்டு குறிப்­பாக சிறு­பான்­மை­களின் தேவைகள் எனவும் கூறப்­பட்­டி­ருப்­பதன் மூலம் பெளத்த சிங்­க­ள­வரின் தேவைகள் மட்­டுமே நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன என்­பதே அர்த்­த­மா­கின்­றது. கடந்த சில ஆண்­டு­க­ளாக செயற்­ப­டுத்­தப்­பட்­ட­வற்றைத் தொட­ரு­மாறு கூறப்­பட்­டி­ருப்­பதன் அர்த்தம் என்ன? 30/1 ஆம் பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­யதை ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் ஏற்­க­வில்லை என்­ப­தே­யாகும். அதனால்தான் அவர் உள்­நாட்டு விசா­ர­ணை­யையும் நிரா­க­ரித்­தி­ருக்­கிறார் என்­பது தெளி­வா­கி­றது.

காணா­மற்­போ­னோரின் குடும்­பத்­தி­ன­ருக்கு நீதி­யையும் நிவா­ர­ணத்­தையும் பெற உரிமை இருக்­கி­றது. அதற்­கான இழப்­பீடு வழங்கும் அலு­வ­ல­கத்­துக்கு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ரீதியில் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணை­யாளர் ஏன் குறிப்­பிட்டார்? 30/1 ஆம் பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­மாயின் அவற்­றுக்­கான செயற்­பா­டுகள் முடங்­கி­விடும் என்­ப­தற்­கா­க­வே­யாகும். மிச்செல் பச்லெட் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை இலங்­கையின் விட­யத்தில் தொடர்ந்தும் அவ­தா­ன­மா­கவே இருக்க வேண்டும் எனவும் கூறி­யி­ருக்­கி­றாரே. அதன்­படி தான் இது­வரை அவ­தா­னித்­த­வற்றை பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார் என நினைக்­கிறேன்.

19 ஆம் ஷரத்­துப்­படி சுயா­தீன நிறு­வ­னங்கள் பல­ம­டைந்­தன. இவை ஜன­நா­யகக் கட்­ட­மைப்பின் முக்­கிய விட­யங்கள்.சிவில் சமூக சுயா­தீன ஊடக இடை­வெ­ளியில் பாது­காப்பு இல்லை. சிவில் செயற்­பா­டுகள் பாது­காப்பு அமைச்­சுக்கு உட்­பட்டு ஓய்வு பெற்ற படை அதி­கா­ரி­க­ளிடம் போயுள்­ளன. மனித உரிமை காப்­பா­ளர்­களும் ஊட­க­வி­ய­லா­ளரும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான வைராக்­கிய பேச்­சுக்கள் அதிகம். மனித உரிமை மீறல்­க­ளுக்­கு­ரிய தண்­ட­னை­யற்ற கலா­சாரம் தொடர்­கி­றது.

ஆக இவ்­வாறு 2015 ஆம் ஆண்டு முதல் இலங்­கையை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கும்­போது 2015 ஆம் ஆண்டு குற்­றத்தை ஒப்புக் கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஏற்று 30/1 ஆம் பிரே­ர­ணை­யையும் ஏற்று இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக் கொண்ட இலங்கை முழு­மை­யாக இதில் ஈடு­பாட்டைக் காட்­டா­த­தோடு பல விட­யங்­களில் உதா­சீ­னமும் காட்­டி­யது. கட்சி வேறு­பா­டின்றி எல்­லோரும் இதில் ஒத்­தொ­ரு­மித்­தி­ருக்க வேண்டும். இவ்­வி­ட­யத்தில் ஆளும் கட்சி எதிர்­க்கட்சி உட்­பட எல்­லாமே தவ­றி­ழைத்­தி­ருக்­கின்­றன. அப்­படி 74வீத சிங்­கள மக்­க­ளி­டமும் உரிய விளக்­கத்தை வழங்கி இதை சாதித்­தி­ருக்க வேண்டும்.

ஜனா­தி­ப­திக்குக் கூற­வில்லை, அமைச்­ச­ர­வைக்குத் தெரி­யாது, பாரா­ளு­மன்­றத்தில் சொல்­ல­வில்லை, யாப்­புக்கு முரண் இறைமை மீறல் என்னும் கார­ணங்­களை இப்­போது திடீ­ரெனக் கூறினால் அவற்­றுக்கு இத்­தனை கால விரயம் செய்ய வேண்­டி­ய­தில்லை. தேசிய நிலைப்­பாட்டை எடுத்து உடனே மனித உரிமை ஆணை­யத்­திடம் விளக்­கப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

ஜனாதிபதிக்குக் கூறவில்லை. அமைச்சரவைக்குத் தெரியாது. பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்பனவெல்லாம் உள்நாட்டு விவகாரம் அதற்கு மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பல்ல. இவ்வார்த்தைகளால் இலங்கையே தன்னை சர்வதேசத்திடம் மலினப்படுத்திக் கொள்கிறது. அறையின் ஆட்டத்தை அம்பலத்திலும் காட்டுவதா.

இலங்கையின் யாப்புக்கு முரணாகவும் இறைமைக்கு ஆபத்தாகவுமா ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் 30/1 ஆம் தீர்மானத்தை வழங்கி இணை அனுசரணையைக் கோரியது? அதன் 20 அம்சங்களிலும் எவை யாப்புக்கு முரணானவை, எவை இறைமைக்கு எதிரானவை என்றாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா?

ஒருவேளை யாப்புக்கான இலக்கணமும் இறைமைக்கான விதிமுறையும் பல்வேறுபட்டவை என்பதாலேயே அவை பற்றி விளக்குவதை தினேஷ் குணவர்தன தவிர்த்திருக்கலாம். இலங்கையிடம் இருக்கும் பேரின யாப்பும் பேரின இறைமையும் இந்த பல்லின நாட்டில் பல்லின தனித்துவ சமூகங்கள் மத்தியில் ஏற்புடையதல்ல என்பதே உண்மையாகும்.

நான் சிங்கள மக்களால் ஜனாதிபதியானவன் அவர்கள் விரும்பினால் தான் தமிழருக்கு எதையும் கொடுக்கலாம். அவர்கள் சுயநிர்ணயம், இறைமை, அதிகாரப் பரவல் என்றெல்லாம் கேட்கக்கூடாது. தொழில் வாய்ப்பும் அபிவிருத்தியுமே அவர்களுக்கு வழங்கப்படும். பெளத்த சிங்கள நாட்டைக் காப்பதே நான் பெற்ற மக்களாணை. அதற்காகவே எல்லாளன் என்னும் தமிழ் மன்னனை ருவன்வெலிசாயவில் கொன்ற சிங்கள மன்னனாக துட்டகைமுனுவுக்கு மாலை சூடி பதவியேற்றேன் என கோத்தபாய ராஜபக் ஷ கூறியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தான் இலங்கை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்துக்குப் போயிருக்கிறது.

ஏ.ஜே.எம். நிழாம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13