மஹரகம புற்றுநோய்  வைத்தியசாலைக்கு "ஸ்கேன்" இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு மக்களிடம் பணம் சேகரித்த அரசாங்கம் அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பும் ஜே.வி.பி,

அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் தொகையை பார்க்கும் போது அமைச்சர்களுக்கு தேவையான வாகனங்கள் கையிருப்பில் உள்ளமை  தெளிவாகிறது என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஜே.வி.பி எம்.பி.சுனில் ஹன்துன்னெத்தி மேலும் தெரிவித்திருப்பதாவது,

அமைச்சர்களுக்கு தேவையான வளங்களை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் பலகோடி ரூபாய்களை செலவழித்து சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வது அநியாயச் செலவாகும்.  அமைச்சர்களுக்கு தேவையான அளவு வாகனங்கள் கையிருப்பில் உள்ளன. 

அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் தொகையை பார்த்தால் இது தெளிவாகின்றது.  இச்செயலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களாகும்.  ஏன் இந்த வாகனங்களை அமைச்சர்களால் பயன்படுத்த முடியாமல் உள்ளது.  சொகுசு வாகனங்கள் தொடர்பில் மக்களின் மனநிலையிலும் மாற்றம் தேவை.

பொது நிகழ்ச்சியொன்றுக்கு நாம் (கெப்) வாகனத்தில் போய் இறங்கினால் ஏன் வேறு வாகனம் இல்லையா என மக்கள் கேட்கின்றனர். அரசியல்வாதிகள் சொகுசு வாகனங்களில் வந்திறங்கினால் தான் தமக்கு மதிப்பு என மக்கள் நினைக்கின்றனர். 

எனவே மக்களது சிந்தனையிலும் மாற்றம் தேவை. அதேவேளை 118 கோடி செலவழித்து சொகுசு வாகனக் கொள்வனவு தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டால் மக்கள் எதிர்கின்றனர். 

எனவே மக்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் சுனில் ஹன்துன்னெத்தி எம்.பி தெரிவித்துள்ளார்.