(எம்.எம். மின்ஹாஜ்)

பாராளுமன்றத்திலுள்ள  பொது எதிரணியினரின் ஆதிக்கம் தேய்வடைந்து வருகின்றது. இதன்பிரகாரம் எண்ணி சில நாட்களில் பொது எதிரணியினர் ஆறு பேர் தேசிய அரசாங்கத்துடன்  இணைந்துக் கொள்ளவுள்ளதாக  தொழிற்பயற்சி துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பிட்ட கோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில்  கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிடுகையில், 

தற்போது அரசாங்கத்தின்  அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக பொது எதிரணியினர் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் பிரயோசனமில்லை. 

தற்போது பாராளுமன்றத்தில் பொது எதிரணியின் பலம் தேய்வடைந்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைத் தலைவர் இணைந்தமைக்கே இவ்வளவு கும்மாளம் போடும் மஹிந்த ராஜபக்ஷ பொது எதிரணியிலுள்ள ஆறு பேர் எண்ணி சில நாட்களில் அரசாங்கத்துடன் இணைவுள்ளனர். 

அதன்பின்னர் பொது எதிரணியில் மிச்சம் இருப்பது ஒரு சிலரேயாகும். இதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்தார்.