அர்ஜுன மகேந்திரனின் ஆளுநர் பதவி நீடிக்கப்படமாட்டாது என்றே நான் கருதுகின்றேன்.   அவரின் பதவியை ஜனாதிபதி நீடிக்கமாட்டார்.    எனினும் ஜனாதிபதி  விரைவில் தனது முடிவை அறிவிப்பார். நல்லாட்சி  அரசாங்கம்  நல்லாட்சி முடிவை விரைவில் அறிவிக்கும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்கம் இவ்வாறு பயணித்தால்  விரைவில் கவிழ்ந்துவிடுமே  என்று  ஒரு ஊடகவியலாளர்  அண்மையில் என்னிடம் கேள்வியெழுப்பினார் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கம் கவிழ்வதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்   எனவும் அவர் குறிப்பிட்டார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவியை நீடிக்கும் விவகாரம் தொடர்பில்  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.  ஆனால் இந்த விடயத்தில் ஜனாதிபதி  உரிய நேரத்தில் உரிய தீர்மானத்தை எடுப்பார். 

கேள்வி அப்படியாயின் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஏன்  அர்ஜுன மகேந்திரன்  பதவி வகிப்பார் என்று கூறினார்? 

பதில் அது அவரின் கருத்தாக  இருக்கும். ஒவ்வொருவருக்கும்  நிலைப்பாடு உள்ளது. 

கேள்வி எனினும்   அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில்தானே அமைச்சர் கிரியெல்ல  இந்த விடயங்களை குறிப்பிட்டார்? 

பதில்  நான் எனது கருத்தைக் கூறுவதற்கு கேட்டாலும்  அரசாங்க தகவல் திணைக்களம்  ஏற்பாடு செய்து கொடுக்கும். 

கேள்வி சரி  அர்ஜுன மகேந்திரன் தொடர்பில்  உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதில் எனது நிலைப்பாட்டை நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்.   அவரை ஆரம்பத்தில்  நியமிக்கும்போதே நான் எதிர்ப்பு வெ ளியிட்டேன்.   அமைச்சரவைக்கு இந்த விடயம் வந்தபோதே அதனை எதிர்த்தேன்.  

கேள்வி அப்படியாயின் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ஏன்  இந்த விடயம்  விளங்கவில்லை? 

பதில்   ஒவ்வொருவரும் பார்ககும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கலாம். 

கேள்வி ஜனாதிபதி என்ன செய்வார்? "

பதில் எனது நிலைப்பாட்டின்படி  அர்ஜுன மகேந்திரனின் பதவி நீடிக்கப்படமாட்டாது என்றே கருதுகின்றேன்.   அவரின் பதவியை ஜனாதிபதி நீடிக்கமாட்டார் என்றே கருதுகின்றேன். எனினும் ஜனாதிபதி  விரைவில் தனது முடிவை அறிவிப்பார். நல்லாட்சி  அரசாங்கம்  நல்லாட்சி முடிவை விரைவில் அறிவிக்கும். 

அரசாங்கம் இவ்வாறு பயணித்தால்  கவிழ்ந்துவிடும் என்று  ஒரு ஊடகவியலாளர்  அண்மையில் என்னிடம் கேள்வியெழுப்பினார் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கம் கவிழ்வதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். 

கேள்வி அதிகளவான  கொக்கையின் கைப்பற்றப்பட்டுள்ளதே? 

பதில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே  இவ்வாறு அதிகளவான  போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. மேலும்  கண்டுபிடிப்போம். 

கேள்வி இது   சுங்கப்பிரிவை தாண்டி வெளியில் வந்துள்ளதே? 

பதில் எவ்வாறெனினும் கிடைத்த  தகவலுக்கு அமைய அதனை கண்டுபிடித்துவிட்டோம்.