காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியை சுவீகரித்து யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் இறுதிவரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன . 

இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இருக்கின்றன. தற்போது யாழ் மாவட்டத்தில் 1,109 குடும்பங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றன . 

இந்த 1,109 குடும்பங்களில் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக அறிக்கையிடப்பட்டுள்ளன. நலன்புரி நிலையங்களினூடாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த இடத்தில் யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியும். எனவே குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பாலாவி விமான நிலையம் அபிவிருத்தி சுற்றுலா விடுதியாக தோற்றம் பெற்றுள்ள கல்பிட்டிய பிரதேசத்தில் சுற்றுலா தொழில்முயற்சி மேம்பாட்டிற்காக பாலாவி விமானநிலையம் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றது. எனினும் அதன் தொழிற்பாடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எனவே குறித்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக திறைசேரியினால் 750 ரூபா நிதியினை பெற்று 26 ஹெக்டேயர் தனியார் காணியொன்று விமானநிலைய அபிவிருத்திக்காக மேலதிகமாகவும் பெறப்படவுள்ளது. இது தொடரபில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.