18 மாடிக் கட்டடமொன்றின் கூரைப் பகுதியிலிருந்தவாறு கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த பெண்ணொருவர், தவறுதலாக கீழே வெளிநீட்டிக் கொண்டிருந்த சிறிய சுவர் கட்டமைப்பில் விழுந்து அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. 

தனது காதலருடனான காதல் தொடர்பு முறிவடைந்ததையடுத்து மன விரக்திக்குள்ளான ஸாங் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் அந்தப் பெண் (24 வயது) சம்பவ தினம் அளவுக்கதிகமாக மது அருந்திய நிலையில் சாங்ஷா நகரிலுள்ள குறிப்பிட்ட மாடிக் கட்டடத்தின் விளிம்பில் அமர்ந்தவாறு கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் மீட்புப்பணியாளர்களும் தொடர்ந்து 4 மணித்தியாலங்களாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இந்நிலையிலேயே ஸாங் அந்தக் கூரைப் பகுதி விளிம்பிலிருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார். 

அவர் நிலத்தில் விழுந்து உடல் சிதறி உயிரிழக்கப் போகிறார் என அனைவரும் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் அந்தக் கட்டடத்திலிருந்து வெளிநீட்டிக் கொண்டிருந்த சிறிய சுவர் கட்டமைப்பில் விழுந்துள்ளார். இந்நிலையில் விரைந்து செயற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.