நெற்சந்தை மாபியா

Published By: Digital Desk 3

17 Feb, 2020 | 05:12 PM
image

“வரப்­பு­யர நீரு­யரும், நீரு­யர நெல்­லு­யரும், நெல்­லு­யரக் குடி­யு­யரும், குடியுயரக் கோலு­யரும், கோலு­யரக் கோனு­யர்வான்” நாம் சிறு­வ­யதில் பாடப் புத்­த­கத்தில் படித்துப் பாட­மிட்ட ஒள­வை­யாரின் பாடல் வரிகள் இவை.

ஆனால், ‘விவ­சா­யத்தின் வளர்ச்­சியே ஒட்­டு­மொத்த நாட்டின் உயர்வும்’ என்ற உள்­ளர்த்தம் நிறைந்த இந்த வார்த்­தை­களின் தாற்­ப­ரி­யத்தை அர­சாங்­கமும் அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­களும் உணர்ந்து செயற்­ப­டு­கின்­றார்­களா என்ற வலு­வான சந்­தேகம் அடிக்­கடி எழத்தான் செய்­கின்றது.

‘இலங்கை ஒரு விவ­சாய நாடு’ என்று பெரு­மை­ய­டித்துக் கொள்­கின்றோம். ‘நெல்லும் ஏனைய விவ­சாயப் பயிர்­களும் விளை­கின்ற பூமி’ என்று நூற்­றாண்டு கால­மாக வர்­ணித்துக்  கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால், அடி­மட்ட விவ­சா­யி­களின் வாழ்வும், நெல் மற்றும் அரிசி சந்தை நட­வ­டிக்­கை­களும், எந்­த­ள­வுக்கு மிக மோச­மாக போய்க் கொண்­டி­ருக்­கின்­றன என்று நாம் சிந்­திக்கத் தவறி விடு­கின்றோம். ஒரு­வேளை சிந்­தித்­தாலும் அதற்கு தீர்வு காணும் நோக்கில் ஒழுங்­கான, ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

சுருங்கக் கூறின், பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்க, தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் அன்­றாடம் காய்ச்­சி­க­ளாக எவ்­வாறு பொரு­ளா­தார ரீதி­யாக பின் ­தள்­ளப்­பட்டு இருக்­கின்­றார்­களோ, அது­போ­லவே இலங்­கையின் நெல் விவ­சா­யி­களும் மாபியா வியா­பாரம் செய்யும் நெல் வர்த்­த­கர்­களால் சுரண்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதை தடித்த எழுத்­துக்­களில் குறிப்­பிட விரும்­பு­கின்றோம்.

விவ­சா­யி­களின் நல­னுக்­காக முன் ­மொழி­யப்­படும் சட்­டங்­களும் திட்­டங்­களும் ஏட்டுச் சுரக்­காய்­க­ளாக இருப்­ப­தாலும், விவ­சா­யி­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரிகள் ஒரு சிலர் யாருக்கோ ‘சேவகம்’ செய்­வ­தாலும், நெல் மற்றும் அரிசி முத­லா­ளிமார்,  வியா­பா­ரிகள், தர­கர்கள் கொள்ளை இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். ‘விவ­சா­யமே வாழ்வு’ என்று வாழ்­கின்ற அடி­மட்ட முஸ்லிம், சிங்­கள, தமிழ் விவ­சா­யிகள் இன்னும் ஓட்­டாண்­டி­யா­கவே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்­றனர்.

அன்­றைய நிலைமை

ஒரு காலத்தில் கிராமப் புறங்­களில் ‘போடிமார்’ என்ற ஒரு வகு­தி­யினர் இருந்­தனர். இவர்­களில் அநேகர் பல நூறு ஏக்கர் நெல் வயல்­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருந்­தனர். ஊரில் உள்ள பணக்­காரர்­களுள் இவர்­களும் அங்கம் வகித்­தனர். இந்த நிலைமை 2000ஆம் ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மாறிப் போனது.

விவ­சாயம் செய்­பவன் அல்­லது இரண்டு, மூன்று ஏக்கர் காணி­களை வைத்­தி­ருப்­பவன் கால­கா­ல­மாக ஏழை­யா­கவே இருக்­கின்றான். பெரும் எதிர்பார்ப்­போடு ஒரு போகம் முழுக்க அதா­வது கிட்­டத்­தட்ட 5 மாதங்கள் உழைப்­பவன் கடை­சியில் பெரும்­பாலும் இலா­ப­மின்றி வீடு திரும்­பு­கின்ற நிலை­மை­யையே அண்­மைக்­கா­லங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது.  நெல் ஆலை உரி­மை­யா­ளர்­களும் நெற் கொள்­வ­ன­வா­ளர்­களும் மிகக் குறைந்த, நியா­ய­மற்ற, அடி­மாட்டு விலைக்கு நெல்லை கொள்­வ­னவு செய்­வதால் கணி­ச­மான இலா­பத்தை அவர்­க­ளுக்கு கொடுத்­து­விட்டு, மீத­மி­ருக்­கின்ற சொற்ப பணத்தை கிரு­மி­நா­சினி, பசளை கடைக்­கா­ரர்­களின் கட­னுக்­காக கொடுத்­து­விட்­டு­ வெ­றுங்­கை­யுடன் வீடு திரும்­பு­கின்ற விவ­சா­யிகள் ஏராளம்.  

இந்­தி­யாவைப் போல் கடன் தொல்லையால் நமது நாட்டிலும் விவசாயிகள் தற்­கொலை செய்து கொண்ட சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றதை மறக்கமுடியாது.

எட்­டாத திட்­டங்கள்

ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் நாட்டின் விவ­சா­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பல திட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­ கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. குறிப்­பாக நெற் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு மானிய விலை உரம், நெல்­லுக்கு நிர்­ணய விலை, விவ­சாயக் கடன் என்று எத்தனையோ நல்ல திட்­டங்கள் அறிவிக்கப்­படு­கின்­றன.

ஆயினும், உரிய காலத்தில் நீர்ப்­பா­சனம் கிடைக்­காமை போன்ற இயற்கை சார்ந்த கார­ணங்­க­ளுக்கு புறம்­பாக, மானிய விலையில் உரம் தாம­த­மாக வழங்­கப் ­ப­டு­கின்­றமை, கறுப்புச் சந்­தையில் அதிக விலைக்கு உரம் வாங்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றமை, நிர்­ணய விலைக்கு உரிய காலத்தில் நெற்­சந்­தைப்­ப­டுத்தும் சபை நெற்­கொள்­வ­னவை மேற்­கொள்­ளாமை, நெல் குற்றும் ஆலை உரி­மை­யா­ளர்­களும் நெல் வியா­பா­ரி­களும் தர­கர்­களும் நிர்­ணய விலையை விட குறைந்த விலையில் கொள்­வ­னவை மேற்­கொள்­கின்­றமை, இவற்­றுக்­கெல்லாம் பொறுப்­பு­ வாய்ந்த அதி­கா­ரிகள் சிலர் துணை போகின்­றமை, பலர் கண்டும் காணா­துபோல் இருக்­கின்­றமை ஆகிய கார­ணங்­களால் அர­சாங்கம் எதிர்­பார்த்த நன்­மை­களை அடி­மட்ட விவ­சா­யிகள் அனு­ப­விக்க முடி­யாத நிலை இருக்­கின்றது.

இந்தப் பிரச்­சினை கடந்த பல வரு­டங்­க­ளாக அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்­கின்ற மாவட்­டங்­களில் மட்­டு­மன்றி பெரும்­பான்­மை­யின விவ­சா­யிகள் வாழும் பல இடங்­க­ளிலும் உள்­ளது. கடந்த போகத்­திலும் இந்தப் பிரச்­சினை இருந்­தது. இந்தப் போகத்­திலும் இருக்­கின்­றது. அடுத்த போகத்­திலும் இருக்­கலாம் என்ற அச்சம் இப்­போதே விவ­சா­யி­க­ளுக்கு ஏற்படத் தொடங்கிவிட்­டது.

இங்கு விவ­சா­யிகள் எனப்­ப­டுவோர் விவ­சா­யிகள் என்று சொல்லிக் கொண்டு நெல், உரம் வியா­பாரம் செய்­வோரோ, வயற்­கா­ரர்­க­ளிடம் நாட்சம்­பளம் பேசி பணி­பு­ரியும் அடி­மட்ட கூலித் தொழி­லா­ளி­களோ அல்லர். அத்­துடன், நிலச் சுவேந்­தர்கள் போல நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் வயல் நிலங்­களை வைத்துக் கொண்டு ஒவ்­வொரு பிர­தே­சத்தின் நெற்­சந்­தை­யிலும் ஆதிக்கம் செலுத்­து­வோ­ரையும் உள்­ள­டக்க முடி­யாது.  அதன்­படி, ஒரு சில ஏக்கர் நெல் வயல்­களை வைத்­துக் ­கொண்டு  அல்­லது குத்­த­கைக்குப் பெற்றுக் கொண்டு அதில் தமது வாழ்­வா­தா­ரத்தை நம்­பி­யி­ருக்கும் கீழ் ­ந­டுத்­தர வர்க்­கத்தைச் சேர்ந்த விவ­சா­யி­க­ளையே உண்­மை­யான விவ­சா­யிகள் என்ற வகை­ய­றா­வுக்குள் உள்­ள­டக்க வேண்­டி­யுள்­ளது. அதா­வது, உண்­மை­யி­லேயே இந்த நெற் சந்தை மாபி­யா­வினால் தமது முத­லீட்டை இழக்­கின்ற, வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­ப­டு­கின்ற தரப்­பி­ன­ராவார். மாறாக, இலாபம் பாதிக்­கப்­ப­டு­கின்ற கூட்­டத்­தினர் அல்லர்.

தொடர் பிரச்­சி­னைகள்

கடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையில் மொத்த நெல் உற்­பத்­தியில் ஏற்ற இறக்­கங்கள் ஏற்­பட்­டி­ருந்­தாலும் விவ­சா­யி­களின் வாழ்­வா­தா­ரத்தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை. இதற்கு அவர்­க­ளது நெற்­செய்கை முறைமை, கால­நி­லைசார் கார­ணி­களை விடவும் நெற் கொள்­வ­னவு சந்­தையில் நிலவும் மாபியா வர்த்­தகம் முக்­கி­ய­மான கார­ணி­யாக இருக்­கின்­றது எனலாம்.

ஒரு போகத்தில் நெற்­செய்­கைக்­காக நெல்லை விதைப்­ப­தற்கு முளை நெல் வாங்­கு­வதில் தொடங்கி, மானிய உரம் வாங்­குதல், நியாய விலைக்கு கிரு­மி­ நா­சினி வாங்­குதல் தொட்டு அறு­வடை செய்து, நிர்­ணய விலைக்கு விற்­பது வரை பல்­வேறு சவால்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் விவ­சா­யிகள் முகம் கொடுக்­கின்­றனர் என்று சமூக நலன் விரும்பி ஒருவர் கூறு­கின்றார்.

மானிய விலையில் அர­சாங்கம் உர விநி­யோகம் செய்­வ­தாக அறி­விக்­கின்ற போதும் ஒரு சில பகு­தி­களை தவிர மற்­றைய இடங்­களில் இந்­ந­ட­வ­டிக்கை உரிய நேரத்தில் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. இதற்­கி­டையில் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு உரம் வந்து விடு­கின்­றது. காலம் பிந்­தி­விடக் கூடாது என்று அதிக விலை கொடுத்து விவ­சா­யிகள் கறுப்புச் சந்­தையில் கொள்­வ­னவு செய்­வ­து­முண்டு. இவ்­வா­றான சட்ட ரீதி­யற்ற வியா­பா­ரத்­திற்கும் உர விநி­யோக முறை­கே­டு­க­ளுக்கும் சில அதி­கா­ரி­களே துணை போவ­தா­கவும் விவ­சா­யிகள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

ஏக­போக வியா­பா­ரிகள்

நெல் அறு­வடை தொடங்­கி­யதும் ஆரம்­பிக்­கின்ற நெற்சந்தை மாபி­யாதான் விவ­சா­யி­க­ளுக்கு பெரும் பாதிப்­பையும் பின்­ன­டை­வையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது. முன்­னைய காலங்­களில் நெல் அறு­வடை தொடங்­கி­யதும் பொல­ன்ன­றுவை போன்ற இடங்­களிலிருந்து நெற் கொள்­வ­ன­வா­ளர்­களின் லொறிகள் அதி­க­ளவில் வரும். அவர்கள் விவ­சா­யி­க­ளிடம் சென்று நெற்­கொள்­வ­னவு செய்­வார்கள். ஓர­ளவுக்­ கேனும் பேரம் பேசி விற்கும் நிலை அப்­போது இருந்­தது. இந்த போட்டிச் சந்தை கார­ண­மாக உள்ளூர் வியா­பா­ரி­களும் நல்ல விலைக்கே நெல்லை வாங்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், இப்­போது அம்­பாறை மாவட்டம் உட்­பட பல பிர­தே­சங்­க­ளுக்கு அவ்­வா­றான லொறிகள் வரு­வது மிகவும் குறைந்து விட்­டது. உள்ளூர் நெல் வியா­பா­ரிகள் ஏக­போக சந்­தையை வைத்­தி­ருக்க முனை­கின்­றனர். வெளியூர் வியா­பா­ரி­க­ளுக்கும் அநே­க­மான உள்ளூர் நெல் வியா­பா­ரிகள் மற்றும் நெல் ஆலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையில் ஒரு “ஜென்­டில்மேன் டீல்” இருக்­கின்­றது என்­கின்றார் விட­ய­ம­றிந்த ஒருவர்.

இதன்­படி, வெளியூர் நெற் கொள்­வ­ன­ வா­ளர்கள் உள்ளூர் வியா­பா­ரி­க­ளி­ட­மி­ருந்தே நெல்லை கொள்­வ­னவு செய்­கின்­றனர். உள்ளூர் வியா­பா­ரிகள் நினைப்­ப­துதான் விலை என்­றா­கின்­றது. நீண்­ட­காலம் நெல்லை வைத்­தி­ருக்­கவும் முடி­யாது பணமும் தேவை என்ற நிலையில் இருக்கும் விவ­சா­யிகள் குறைந்த விலைக்கு நெல்லை உள்ளூர் முக­வர்­க­ளுக்கு விற்­ப­தாக அவர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். இதன்­மூலம் திறந்த சந்தை தொழிற்­பா­டு­க­ளின்றி, ஒரு­வித மாபியா வர்த்­தகம் நடக்­கின்­றது எனலாம்.  இங்கு விவ­சா­யிகள் தரப்பில் கூறப்­படும் குற்­றச்­சாட்டு நெல் வியா­பா­ரிகள் சந்­தையை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பது மட்­டு­மன்றி, அர­சாங்­கத்தின் நிர்­ணய விலையை விட குறைந்த விலைக்கு கொள்­வ­னவு செய்­கின்­றனர் என்­ப­தாகும். இந்த போகத்­திலும் பல இடங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. அர­சாங்கம் நிர்­ணய விலையை மீள­றி­விப்பு செய்து, நெற்­சந்­தைப்­ப­டுத்தும் சபை நெற் கொள்­வ­னவை ஆரம்­பித்த பிற­குதான் அம்­பாறை மாவட்­டத்தில் சில தனியார் நெல் தர­கர்கள் விலையை கொஞ்சம் அதிக­ரித்த­தாக அறிய முடி­கின்­றது.

மறு­த­ரப்பில், நெற் கொள்­வ­னவு செய்யும் வர்த்­த­கர்கள் இதற்கு ஒரு கார­ணத்தை கூறு­கின்­றனர். அதா­வது, நெல் ஈர­லிப்­பா­கவும் கல், மண் கலந்­த­தா­கவும் இருக்­கின்­றது. எனவே காய்ந்த நெல் என்றால் நல்ல விலை கொடுக்­கலாம். இவ்­வா­றான ஈர நெல்­க­ளுக்கு குறைந்த விலையே கொடுக்க முடியும்’ என்று கூறுவ­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது.

நியா­ய­மற்ற விலை

முன்­னைய காலங்­களில் நெல் அறு­வடை என்­பது நீண்­ட­தொரு செயன்­மு­றை­யாக காணப்­பட்­டது. அறு­வ­டைக்­காக நெற்­க­திர்­களை கூலி­யாட்கள் அறுப்­பார்கள். அது கட்­டுக்­கட்­டாக கிடந்து காயும். பின்னர் சூடு வைக்­கப்­பட்டு, உழவு இயந்­தி­ரத்தால் சூடு மிதிக்­கப்­படும் வரை காய்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இருந்­தன. அத்­துடன் கல்லும், மண்ணும் குறைவா­கவே காணப்­படும்.

ஆனால் இப்­போது நெல் அறு­வடை இயந்­திரம் வந்து விட்­டது. இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அறு­வடை முடிந்து விடும். ஏழை விவ­சா­யி­க­ளுக்கு அந்த நெல்லை கொண்டுபோய் காய வைக்கும் வச­தியும் இல்லை. அதற்­கான அவ­கா­சமும் இல்லை. அத்­துடன் நெற் சந்தைப்­ப­டுத்தும் சபை நெல்லை சற்று தாம­தித்தே கொள்­வ­னவு செய்யும். அதற்கு சில வரை­ய­றைகள் கட்­டுப்­பா­டுகள் உள்­ளன. என­வேதான் வர்த்­த­கர்கள் கேட்­கின்ற விலைக்கு விற்று விட்டுப் போக வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கின்­றது. எவ்­வா­றி­ருப்­பினும், நெல் ஈரம் என்ற உப்­புக்­குச் ­சப்­பான கார­ணத்தைக் கூறி நெல் முத­லா­ளிமார் மேற்­கொள்­கின்ற விலைக் குறைப்பு நியா­ய­மற்­ற­தாகும்.

நெல் வியா­பா­ரிகள் இவ்­வாறு கொள்­வ­னவு செய்­கின்ற நெல்லை காய­வைத்து, வெளிமாவட்ட கொள்­வ­ன­வா­ளர்­க­ளுக்கு நல்ல விலைக்கு விற்று இலாபம் உழைக்­கின்­றனர். சிலர் பதுக்கி வைத்து செயற்கை தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்தி கொள்ளை இலாபம் உழைக்­கின்ற செயற்­பா­டு­களும் இடம்­பெ­றா­ம­லில்லை. எனவே பாடு­ப­டாத இவர்கள்  இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்க, விவ­சா­யிகள் வங்­கு­ரோத்து நிலைக்கு செல்­வதை பர­வ­லாக காண முடி­கின்­றது.

ஆனால், பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரிகள் இது விட­யத்தில் தமது பொறுப்பை வினைத்­தி­ற­னாக நிறை­வேற்­ற­வில்லை என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதிக விலைக்கு உரம் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என்றால், திறந்த சந்தை தொழிற்­பாட்டை தடை­செய்து ஒவ்­வொரு பிர­தே­சத்தின் சந்­தை­யையும் அப்­பி­ர­தேச நெல்­வி­யா­பா­ரிகள், அரி­சி ­ஆலை உரி­மை­யா­ளர்கள் மற்றும் தர­கர்கள் ஆட்­டிப் ­ப­டைக்­கின்­றனர் என்றால், நியாயம் எது­வு­மின்றி நிர்­ணய விலையை விட மிகக் குறைந்த விலைக்கு நெற்­கொள்­வ­னவு நடை­பெ­று­கின்­றது என்றால்… அதை அதி­கா­ரி­களும் சட்­டமும் கண்­டு­கொள்­ள ­வில்லை என்றால் இந்த சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு அதி­கா­ரி­களும் மறை­மு­க­மாக துணை போகின்­றனர் என்­பது தானே அர்த்தம்.

இதே­வேளை, இவ்­வ­ளவு பிரச்­சினை இருந்­தாலும் கூட முஸ்லிம், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் விவ­சா­யி­க­ளுக்­காக பேசு­வதை காண முடி­யா­துள்­ளது. மாபியா பற்றிப் பேசினால் முத­லா­ளி­களை பகைத்துக் கொள்ள நேரிடும் என்று அவர்கள் நினைக்­கலாம். அல்­லது இது­வெல்லாம் பெரிய பிரச்­சி­னையா என்று நினைத்­தி­ருக்­கலாம்

அர­சாங்­கத்­திடம் கோரிக்கை

ஆனால், அர­சாங்கம் விரைந்து, தீவிர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்சினையை போல, அரச மற்றும் தனியார் துறை­யி­னரின் சம்­பளம் பற்றி சிந்­திப்­பதைப் போல நெற்­சா­கு­படி மேற்­கொள்­கின்ற உண்­மை­யான விவ­சா­யி­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

அந்த வகையில் கடந்த இரு வாரங்­க­ளுக்குள் நெல் கொள்­வ­னவு விடயத்தில் இரா­ணு­வத்­தி­னரை ஈடு­படுத்­தி­யது போல காத்­தி­ர­மான, இறுக்­க­ மான அணு­கு­மு­றை­யையும் பொறி­ மு­றை­யையும் இது விட­யத்தில் கையாள வேண்டியிருக்கின்றது.

குறிப்­பாக, விவ­சா­யி­க­ளுக்கு உரிய காலத்தில் உர மானியம் வழங்­கப்­பட வேண்டும். அத்­துடன் பின் ­க­தவால் அதிக விலைக்கு எப்­ப­கு­தி­யிலும் உரம் விற்­கப்­ப­டு­மாயின் அவர்­களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

கால­தா­ம­த­மின்றி, நெற்­சந்­தைப் ­ப­டுத்தும் சபை­யினர் நெற் கொள்­வ­னவை மேற்­கொள்­வதை அர­சாங்கம் உறுதி செய்­வ­துடன், உயர்ந்­த­பட்ச நெல் கொள்­வ­னவு செய்யும் எல்­லையை (அளவை) மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும்.

நாட்டின் ஒவ்­வொரு பிர­தே­சத்­திலும் நெல் மற்றும் அரிசிச் சந்­தையை திறந்து விட வேண்டும். வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரும் நெற் கொள்­வ­ன­வா­ளர்­களை தடை­செய்­கின்ற இடைத் தர­கர்கள், அதற்கு இட­ம­ளிக்கும் அதி­கா­ரிகள் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள்.

குறிப்­பாக, ஒவ்­வொரு பகு­தி­யிலும் மிகக் கஷ்­டப்­பட்டு உற்­பத்தி செய்­யப்­படும் நெல்லை நிர்­ணய விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வாங்­கு­வ­துடன் அதிக விலைக்கு வெளியூர் வியா­பா­ரி­க­ளுக்கு விற்­பனை செய்து மாபியா ரக வர்த்­தகம் நடத்­து­கின்ற நெல் ஆலை உரி­மை­யா­ளர்கள், நெல் வர்த்­த­கர்கள், இடைத்­த­ர­கர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அர­சாங்­கத்தின் விலைக் கட்­டுப்­பா­டு­களை மதித்து, முறை­யாக செயற்­ப­டு­கின்ற நெல் ஆலை உரிமை­யா­ளர்கள், நெல் வியாபாரிகள் ஊக்குவிக்கப்படுகின்ற சமகாலத்தில், உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்யாமல், குறைந்த விலைக்கு வாங்கி, சந்தையில் கிராக்கியிருந்தும் கூட விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்து பின்னர் விற்பனை செய்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அதற்காக அவர்களது அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்து ஏனையோருக்கு பாடம் படிப்பிக்க வேண்டும்.  அரச அலுவலங்களுக்கு தற்போது விசேட புலனாய்வு அதிகாரிகள் திடீர் விஜயம் செய்வதைப் போல, நெற் கொள்வனவு செயன்முறையை இரகசியமாக கண்காணிப்பதற்கும், தொடர்புபட்ட அரச நிறுவனங்கள் மற்றும் நெல் ஆலைகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் விவசாய துறைக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மேல் மட்ட அதிகாரிகள் தொடக்கம் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இதன்படி, சட்ட விரோத நடவடிக்கைக்கு துணைபோகின்ற இலஞ்சப் பேர்வழிகள் மற்றும் கண்டும் காணாதது போல் இருக்கின்ற அதிகாரிகள் போன்றோருக்கும் எதிராக சட்ட, ஒழுக்காற்று விசாரணை நடத்துவது கட்டாயமானது.

இலங்கை விவசாய வளமிக்க நாடு என்று சொல்லிக் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காக திட்டங்களை வகுத்துக் கொண்டும் இருந்தால் மட்டும் போதாது. அந்த நலன்கள் விவசாயிகளை சென்றடைவதையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையியல், நெற் கொள்வனவுச் சந்தையில் நிலவும் ‘மாபியா’ தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எல்.நிப்றாஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04