சீனாவிடமிருந்து பெருமளவு விடயங்களை உலகம் கற்றுக்கொள்ள முடியும் : உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி கூறுகிறார்

Published By: Priyatharshan

16 Feb, 2020 | 09:14 PM
image

பெய்ஜிங், (சின்ஹூவா) ; சீனாவில் கொரோனோ வைரஸ் தொற்றின் மையமான ஹூபீ மாகாணத்துக்கு வெளியே அந்த வைரஸின் தொற்றுக்கு புதிதாக இலக்காவோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து சில நாட்களாக வீழ்ச்சி காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்படும் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் ஓரளவுக்கு பயனைத் தந்திருக்கின்றன.

ஹூபேய் மாகாணத்துக்கு வெளியே மொத்தம் 312 பேருக்கு வைரஸ் தொற்றிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு புதன்கிழமை அறிவித்தது. பெப்ரவரி 3 ஆம் திகதி 890 பேருக்கு புதிதாக பரவியதாக வெளியிடப்பட்ட அறிவிப்புடன் ஒப்பிடும் போது இது கணிசமான வீழ்ச்சியாக நோக்கப்படுகிறது.

சீனாவில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் நம்ப முடியாதவையாகவும் முன்னென்றும் இல்லாவகையிலானவையாகவும் இருக்கின்றன. இந்த வகையான வைரஸ் பரவலை கையாளுவது என்பது தொடர்பில் பெருமளவு விடயங்களை நாம் சீனாவின் இந்த நடவடிக்கைகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின்  ( World Health Organization - WHO )பிரதம விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

இறுக்கமான எதிர்ச்செயல்

கொரோனோ வைரஸ் ( உலக சுகாதார ஸ்தாபனம் இந்த புதிய வகை வைரஸுக்கு கொவிட் - 19 என்று பெயரிட்டுள்ளது.) தொற்று சீனா சந்திர புதுவருட விடுமுறை தினத்துக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக ஜனவரியில் பரவத் தொடங்கியது. அந்த நேரத்தில் சீனா பூராகவுமுள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிலர் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர்.

ஒரு கோடிக்கும் அதிகமான சனத் தொகையைக் கொண்ட சீனாவின் மத்திய ஹூபேய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் கொரோனோ வைரஸ் பரவலின் மைய நிலையமாக விரைவாகவே மாறியது. அந்த நகரம் ஜனவரி 23 இல் மூடப்பட்டது. வெளியில் இருந்து எவரும் வர முடியாது. நகரில் உள்ளவர்களுக்கும் வெளியில் செல்ல முடியாது. நகர பஸ் சேவைகள் , சுரங்கப்பாதை ரயில் சேவைகள் , படகு போக்குவரத்துக்கள் மற்றும் நீண்ட தூர ஆடம்பர பஸ் போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டது. அதேவேளை விமான நிலையங்களில் விமானங்கள் வெளிக்கிளம்பும் முனையங்களும் ரயில்வே நிலையங்களும் மூடப்பட்டன.

வைரஸ் தொற்று நாடு தழுவிய ரீதியில் பரவத் தொடங்கியதையடுத்து சீனாவின் சகல 31 மாகாண மட்ட பிராந்தியங்களும் இந்தக் கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்ட பதில் நடவடிக்கைகளை செயற்படுத்தின. அரசாங்கசபை என்று அழைக்கப்படுகின்ற சீனாவின் அமைச்சரவை ஜனவரி 30 ஆம் திகதி முடிவடைந்த 7 நாட்கள் வசந்த கால விடுமுறையை பெப்ரவரி 2 ஆம் திகதிக்கு நீடித்தது. கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கான 2020 வசந்த கால தவணையின் ஆரம்பத்தை ஒத்திவைத்தது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானங்களை எடுப்பதில் மிகவும் உறுதியான முறையில் சீனா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது என்று நம்புவதாக மலாயா உலர்வலய தொற்று நோய்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையத்தின் பல்கலைகழகத்தின் பணிப்பாளரான பேராசிரியர் சாசாலின் அபூபக்கர் கூறுகிறார்.

சீன மக்கள் பெரும் தியாகங்களை செய்வதற்கான தங்களது விருப்பம் மற்றும் பற்றுறுதியின் ஊடாக வைரஸ் மேலும் விரைவாக பரவுவதில் இருந்து முழு உலகத்தையுமே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வாணிபத்துக்கான ஜேர்மன் சமஷ்டி சங்கத்தின் தலைவரான மைக்கேல் ஹீமன் கூறினார். சீன மக்கள் எமது பெருமதிப்புக்கும் உற்சாகமான ஆதரவுக்கும் உரித்துடையவர்கள் என்றும் அவர் கூறினார்.

வைரஸ் பரவலை தடுப்பதிலும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதிலும் சிறப்பான முறையில் எவ்வாறு செயற்படுவது என்பதை உலகம் உங்களது முயற்சிகளில் ( சீன மக்கள் ) கண்டறிகிறது. அதற்காக உங்களுக்கு உலகம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கேபிரியேசஸ் கூறினார்.

பயனுறுதியுடைய அணிதிரட்டல் , ஒருங்கிணைப்பு

கொரோனோ வைரஸ் தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பான தலைமைத்துவ கூட்டம் ஒன்றுக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி தலைமை தாங்கி உரையாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் பொதுச் செயலாளரும் சீன ஜனாதிபதியுமான சீ ஜிங்பிங் கட்சி கமிட்டிகளும் சகல மட்டத்திலான அரசாங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் ஒன்றுபட்ட கட்டளையை, ஒருங்கிணைப்பை, ஏற்பாடுகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

சீனர்கள் அடிக்கடி வர்ணிப்பதைப் போன்று ' முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மூல வளங்களை ஒருமுகப்படுத்துவது ' சீனாவின் சோசலிச முறைமையின் ஒரு குறிப்பிடத்தக்க அனுகூலமாகும். கடந்த தசாப்தங்களில் பாரிய சவால்களை சீனா வெற்றிக் கொள்வதற்கு இது உதவி வந்திருக்கிறது. கொரோனோ வைரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

சீன சுகாதார அதிகாரிகள் , நாட்டின் சிறந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் உட்பட வுஹான் நகருக்கு இது வரையில் பதினோராயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்களை அனுப்பியிருக்கின்றனர். இராணுவத்திலிருந்து நான்காயிரத்துக்கும் அதிகமான மருத்துவ அதிகாரிகளும் களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட பன்றி இறைச்சி கையிருப்புக்களும் புதிய மரக்கறி வகைகளும் சீனா பூராகவும் இருந்து ஹூபீ மாகாணத்துக்கு லொறிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே வேளை முகமூடி மற்றும் மருத்துவ மேலங்கி தயாரிப்பு தொழிற்சாலைகளின் பணியாளர்கள் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு உடனடியாக தயாரிப்பை தொடங்க விடுமுறையிலிருந்து முன்கூட்டியே வேலைக்கு திரும்புமாறு கேட்க்கப்பட்டார்கள்.

லீஷென்ஷான் மற்றும் ஹூவோஷென்ஷான் ஆகிய பகுதிகளில் குறுகிய நாட்களுக்குள் இரு தற்காலிக வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. மொத்தமாக 2600 கட்டில்களைக் கொண்ட இந்த வைத்தியசாலைகளை துரிதமாக நிர்மாணிப்பதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்ற இயந்திரங்களின் உதவியுடன் மாற்று நேர வேலை அடிப்படையில் பணியாற்றினார்கள். வைரஸ் தொற்றின் மென்மையான அறிகுறிகள் கொண்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வுஹான் நகரின் சில உடற்பயிற்சி நிலையங்களும் விளையாட்டு நிலையங்களும் கூட தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டன. இதன் மூலமாக வைத்தியசாலைக் கட்டில்கள் இன்னுமொரு பத்தாயிரத்தால் அதிகரித்தன.

' இத்தகைய மூல வள ஒருமுகப்படுத்தலையும் அணி திரட்டலையும் எனது வாழ்வில் நான் ஒரு போதும் கண்டதில்லை ' என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் கூறினார். இது உண்மையில் வைரஸ் பரவலுக்கு எதிரான மக்கள் போரே ஆகும். அது பெருமளவில் அணி திரட்டல்களைச் செய்வதில் சீனாவுக்கு இருக்கின்ற ஆற்றலையும் தேசிய வல்லமையையும் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி சீ ஜிங்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் வைரஸ் தொற்றுக் கொள்ளை நோய்க்கு முகங்கொடுப்பதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் தலை சிறந்த தலைமைத்துவத்தை வெளிக்காட்டியிருக்கின்றன. அது ஒரு சோசலிச முறையின் அனுகூலங்களை பிரதிபலித்து நிற்கிறது என்று தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது பிரதி பொதுச் செயலாளர் சொலி மாபைலா கூறினார்.

சர்வதேச ஒத்துழைப்பு

வைரஸ் பரவலின் தொடக்க கட்டத்திலேயே இந்த புதிய வகையான கொரோனோ வைரஸை கண்டுபிடித்த சீன நிபுணர்கள் அதன் மரபணுத்தொடரை ( Genetic Sequence ) உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பகிர்ந்து கொண்டனர். அதை ஆராய்ந்த பிறகு இந்த வைரசின் தொற்றைக் கண்டறியக் கூடிய கருவிகளை தயாரிக்க வேண்டியது ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையும் கூட பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியது.

புதிய வைரஸ் தொற்று நோயையும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆராய்வது தொடர்பில் சீனாவுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் இடையிலான கூட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கடந்த வாரம் பெய்ஜிங் வந்திறங்கிய உலக சுகாதார ஸ்தாபனக் குழு வைரஸ் பரவல் தொடர்பிலான சீனாவின் ஆராய்ச்சி குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான கூட்டம் ஒன்றில் விளக்கமளிப்பதற்காக சீனப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். ' எமக்கு சர்வதேச ஒருமைப்பாடு தேவை. இந்த வைரஸ் தொற்று நெருக்கடியை சமாளிக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்தே நிற்கின்றோம். நாங்கள் அவ்வாறு ஒன்றிணைந்து நின்று இந்த சவால்களை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்று ஐக்கிய நாடுகள்சபையின் இணைச் செயலாளர் நாயகம் பப்ரிசியோ ஹொச் சைல்ட் வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் முயற்சிக்கான தனது மெச்சுதல்களை வெளிப்படுத்திய போது கூறினார்.

ஜனவரி பிற்பகுதியில் இருந்து சீனத் தலைவர்கள் உலக நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வைரஸ் பற்றிய பிந்திய நிலைவரங்களை விளக்கிக் கூறினார். நோய்த்தடுப்பில் சீனா எடுக்கின்ற பயனுறுதி வாய்ந்த நடவடிக்கைகளுக்கு தங்களது அங்கீகாரங்களை வழங்கிய உலக தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் வெளிக்காட்டினர்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பொருத்தமான ரஷ்ய திணைக்களங்கள் இந்த பொது அச்சுறுத்தலை ஒழித்துக்கட்டுவதற்கு சீனாவிலுள்ள திணைக்களங்களுடன் நெருக்கமாக பணியாற்றும் என்று கூறினர். அதே வேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவுக்கு உதவுவதற்கு தனது மருத்துவ விநியோகங்களை ஒன்று திரட்டி வழங்க தயாராகவிருக்கிறது என்று கூறினார்.

குறைந்தது 30 நாடுகளிடம் இருந்தும் பல்வேறு சர்வதேச அமைப்புக்களிடம் இருந்தும் இது வரையில் சீனா விநியோகங்களையும் ஏனைய உதவிகளையும் பெற்றிருக்கிறது. சீனாவினால் முதலில் முன்வைக்கப்பட்ட ' பொதுவான ஒரு எதிர்காலத்துடனான ஒரு சமூகம் ' என்ற கோட்பாடு வைரஸ் பரவலுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது. இந்த வகையான ஒத்துழைப்பு இந்த நோயைப் பற்றியும் அதைக் குணப்படுத்துவது பற்றியும் கற்றுக் கொள்வதற்கு உலகிற்கு கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுக்கிறது.

சர்வதேச சமூகத்துடனான சீனாவின் தீவிர ஒத்துழைப்பு உலகளாவிய நலன்களில் சீனா கொண்டிருக்கும் உயர்ந்த பொறுப்புணர்வை வெளிக்காட்டுகிறது என்று இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.

சீனாவுடன் ஒப்பிடும் போது வேறு எந்த நாடும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பரந்தளவிலான செயற்பாடுகளையும் வேகத்தையும் வெளிப்படைத் தன்மையையும், திறந்த போக்கினையும் கொண்டிருக்கவில்லை என்கின்ற அதேவேளை வைரஸ் தொற்றை தடுத்து கட்டுப்படுத்துவதற்கு சீனா ஏனைய நாடுகளுக்கு புதியதொரு தராதரத்தை வகுத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22