"பொதுத் தேர்தலுக்கு பின்னர் தெரிவாகும் தமிழர்  பிரதிநிதிகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்"

Published By: Digital Desk 4

09 Feb, 2020 | 10:11 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதானால் தமிழர்களுக்காக பேசக் கூடிய பொறுப்புள்ள பிரதிநிதிகள் எமக்குத் தேவை.

 அதனால் பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் தமிழர்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய பிரதிநிதிகளுடன் எதிர்காலம் குறித்து பேச வருமாறு கேட்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது சனியன்று டில்லியில் வைத்து ' த இந்து ' பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். 

பிரதமர் ராஜபக்ஷவை அந்த பத்திரிகையின் இராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர் நேர்காணல் செய்தார். 

இலங்கை தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பான தங்களது அக்கறையை புதுடில்லியில் பிரதமர் மோடியும் கொழும்புக்கு விஜயம் செய்த வேலையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் வெளிக்காட்டியிருந்தார்கள். உங்களது அரசாங்கத்திடமிருந்து பிரதிபலிப்பையும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள் என்று பிரதமர் ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்ட போது அவர், ' இந்தியாவின் இந்த அக்கறைகளை நாம் எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கின்றோம். போர் முடிவுக்கு வந்த பின்னர் நாம் தேர்தல்களை நடத்தினோம். வட பகுதி மக்கள் தங்களது சொந்த முதலமைச்சரை தெரிவு செய்யவும் அனுமதித்தோம். எமக்கு தோல்வியே கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் கூட நாம் அங்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினோம். ஆனால் எதுவுமே முன்னோக்கி நகரவில்லை. எதிர்வரும் ஏப்ரலில் எமது பாராளுமன்றத் தேர்தலையும் பிறகு மாகாணசபையையும் நடத்தவிருக்கின்றோம். யாழ்ப்பாணத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ழுவொன்றை நாம் நியமிப்போம். ' என்று கூறினார். 

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அதிகாரப் பரவலாக்கத்துக்கு மேலாக அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். முன்னோக்கிச் செல்வதற்கான வழி இது என்பதே அவரது நம்பிக்கை. உங்கள் இருவரினதும் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் , ' இல்லை. இல்லை. மக்களுக்கு அபிவிருத்தி தேவைப்படுகிறது. 30 வருடங்களாக அபிவிருத்தி இன்றி அவர்கள் கவலைப்படுகின்றார்கள். அதனால் அந்த பகுதிகளை முதலில் அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கிறது. ' என்றார். 

இலங்கையின் தேசிய தின வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக சர்ச்சை நிலவியது. இது தமிழர்களுக்கு கூறப்பட்ட ஒரு செய்தியாக இருந்தால் அவர்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு செயற்படுவீர்கள் என்று சுஹாசினி ஹைதர் கேட்ட போது , ' உலகம் பூராகவும் பார்த்திருப்பீர்கள். தேசிய கீதம் பிரதானமாக ஒரு மொழியிலேயே இசைக்கப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. என்றாலும் உங்களது தேசிய தினங்களில் நீங்கள் ஒரு மொழியில் தான் தேசிய கீதத்தை இசைக்கின்றீர்கள். இதே முறை தான் இலங்கையிலும். நான் யாழ்ப்பாணம் போகும் போது பாடசாலையொன்றில் அவர்கள் தமிழில் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். தேசிய கீதத்தை தங்களது விருப்பப்படி இசைப்பதற்கு மக்கள் விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. சில அரசியல்வாதிகளே இது குறித்து பிரச்சினையை கிளப்புகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து பொது மக்களுக்கு அக்கறை இல்லை. 

19 ஆவது திருத்தம்

கேள்வி : அண்மைய ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் நோக்கினால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறீர்கள். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றி பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திடம் இருந்து பழையபடி ஜனாதிபதிக்கே முழுமையாக அதிகாரங்களை ஒப்படைப்பபீர்களா ? 

பதில் : எல்லாவற்றுக்கும் மேலாக 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பிறகு என்ன செய்வது என்று சிந்திப்போம். முன்னாள் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இது குறித்து ஏற்கனவே ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்வோம். தற்சமயம் ஜனாதிபதிக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெளிவான அதிகாரங்கள் இல்லை. அதனால் அதிகார வேறாக்கல் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருக்கிறார்கள். நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஆட்சி முறையில் அவர் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என்பதே இதன் அர்த்தமாகும். நாம் அதனை மதிக்க வேண்டும். 

கேள்வி : உங்களது சகோதரரே ஜனாதிபதியாகவும் இருப்பதால் 19 ஆவது திருத்தம் தொடர்பான சச்சரவு உங்களுக்கு இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்குமா ? 

பதில் : இல்லை. இல்லை. இல்லை. தற்போது அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்டிருகின்ற விதத்தையும் , 19 ஆவது திருத்தத்தின் குழப்ப நிலையையும்அடிப்படையாகக்கொண்டு பார்க்கும் போது கோத்தாபயவையும் என்னையும் போன்று இரு சகோதரர்களால் மாத்திரமே விவகாரங்களை இணக்கமாகக் கையாள முடியும். மற்றும்படி வேறு எந்த ஜனாதிபதியோ பிரதமரோ இந்த பிரச்சனையில் இணங்கி போக மாட்டார்கள். 

கடனுதவி

கேள்வி : பிரதமர் நரேந்திர மோடியுடன் நீங்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறீர்கள். ஆனால் எந்தவொரு உடன்பாடும் ( குறிப்பாக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்தியா வழங்க முன்வந்த 40 கோடி கடனுதவி ) ஏற்படவில்லை. உங்கள் பேச்சுவார்த்தை பற்றி கூறுங்கள் ? 

பதில் : பல உடன்படிக்கைகள் பற்றி நாம் பேசினோம். இந்திய தரப்பினர் அக்கறை கொண்டிருந்த சில செயற்திட்டங்கள் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளோம். இரு தரப்பினரையும் பொறுத்தவரையில் பயனுடைய சந்திப்பாகவே அது அமைந்தது. எம்மை பொறுத்தவரையில் வீடமைப்பு திட்டமே முன்னுரிமைக்குரியதாக இருக்கிறது. அதற்காக மேலும் கூடுதல் நிதி உதவியை இந்தியாவிடம் இருந்து கேட்டிருக்கிறோம். நாடு பூராகவும் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கான யோசனை எமக்கிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அவ்வாறு செய்ய விரும்புகின்றோம். வீடமைப்புக்கு அப்பால் வேறு சில திட்டங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினோம். 

பெரிய சவால்

கேள்வி : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவதே உங்களுக்கு இவ்வருடம் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. மொத்த கடன் சுமார் 6000 கோடி அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. இந்த பிரச்சினையை கையாள்வதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள் ? 

பதில் : ஆம். அது பெரும் சவாலுக்குரியதே. இந்திய அரசாங்கத்துடனும் இது பற்றி நாம் கலந்துரையாடினோம். சகல கடன் கொடுப்பனவுகளையும் 3 வருடங்களுக்குள் காலம் தாழ்த்தி செலுத்தக் கூடியதாக இந்தியா ஒரு ஏற்பாட்டுக்கு இணங்க முடியுமா என்று நாம் கேட்டிருக்கின்றோம். எமது பொருளாதாரத்தை நாம் மீள்விக்கும் வரை இந்த உதவியைக் கேட்கின்றோம். இது தொடர்பில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் சீனா உட்பட ஏனைய அரசாங்கங்களையும் இணங்கச் செய்யக் கூடியதாக இருக்கும். முன்னைய அரசாங்கம் பெருமளவு கடன்களைப் பெற்றிருக்கிறது. அவர்கள் பொருளாதாரத்தை இரவல் நிலைக்கு கொண்டு சென்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இந்தியா எடுக்கக் கூடிய நிலைப்பாட்டிலேயே இது விடயத்தில் சகலதும்  தங்கியிருக்கின்றன. 

கேள்வி : கடன் மீளச் செலுத்துவதற்கு இவ்வருடம் மாத்திரம் உங்களுக்கு 500 கோடி டொலர்கள் தேவைப்படுகின்றன. இதைச் செய்யக்கூடியதாக இருக்குமா ? 

பதில் : நாம் அதை செய்யத்தான் வேண்டும். எவ்வாறேனும் இதனை சமாளிப்போம். என்னதான் நடந்தாலும் எமது கடன்களை மீளச் செலுத்துவதில் தவணை தவற நாம் விரும்பவில்லை. 

- த இந்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49