ஏனைய துறைகளிலான ஒத்துழைப்பை தமிழர் பிரச்சினை பாதிக்க  இந்தியாவும் இலங்கையும் அனுமதிக்கும் சாத்தியமில்லை

Published By: Digital Desk 4

09 Feb, 2020 | 10:17 PM
image

டில்லி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பிரதமர் மோடியின் அறிக்கையில் தமிழரின் பிரச்சினை பற்றி குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ,  மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கை அந்தவிடயத்தில் மௌனம் சாதித்தது.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நேற்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கியப்பட்ட இலங்கை ஒன்றிற்குள் சமத்துவம் , நீதி , சமாதானம் மற்றும் மதிப்பு ஆகியவற்றிற்காக தமிழ் மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும்  அபிலாசைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் , இலங்கை பிரதமர் தனது ஊடக அறிக்கையில் தமிழர் பிரச்சினை குறித்து எதையும் குறிப்பிடவில்லை. பதிலாக பொருளாதாரம் , கல்வி , செயற்திறன் விருத்தி , பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல் பரிமாற்றம் ஆகிய துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியே அவர் கூறியிருந்தார்.இருதரப்பு உறவுகளின் முழுமையான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடிய இரு பிரதமர்களும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வாணிபம் , முதலீடு,  மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க உறுதிப்பூண்டனர்.

'இலங்கையின் உறுதிப்பாடு ,பாதுகாப்பு ,சபீட்சம் ஆகியவை இந்தியாவின் நலன்களுக்கு மாத்திரமல்ல இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதினதும் நலன்களுக்கும் அவசியமானது என்று மோடி கூறினார்.இலங்கையின் அபிவிருத்தியில் நம்பிக்கையான பங்காளியாக விளங்கிவரும் இந்தியா சமாதானம் மற்றும் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை குறித்து அறிக்கையில் பிரஸ்தாபித்த மோடி அந்த பிரச்சினையை கையாள்வதில் மனிதாபிமான அணுகுமுறை ஒன்றை கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் தீர்மானித்திருப்பதாகவும் , பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை ஆழமாக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ஊடக அறிக்கையில் 'நானும் பிரதமர் மோடியும் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தோம். கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருந்த மிகவும் வெற்றி;கரமான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது , அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவையாகவே எமது பேச்சுவார்த்தைகள் அமைந்தன என்று கூறியிருந்தார்'. 'அயலகம் முதலில் என்ற மோடி அரசாங்கத்தின் கொள்கைக்காகவும் இலங்கையுடனான உறவுகளுக்கு அவர் கொடுக்கின்ற முன்னுரிமைக்காகவும் அவருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். பாதுகாப்பு , பொருளாதாரம் , கலாசாரம் மற்றும் சமூக துறைகள் உட்பட பெருவாரியான துறைகளுக்கு முன்னுரிமையை கொடுக்கின்ற வகையிலான பல்பரிமாணத்தை கொண்டதே எங்களது ஒத்துழைப்பு என்பதை நாம் ஒத்துக்கொண்டோம்.'

பாதுகாப்பு  / பயங்கரவாதம்

' எமது இரு நாடுகளினதும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மையமாக கொண்டதாக எம்மிருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி அமைந்தது. புலனாய்வுத் துறையிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அதன் ஆற்றலை மேம்படுத்துவதற்கு இந்தியா எப்போதுமே உதவி வந்திருக்கின்றது. இந்த விடயத்தில் இந்தியாவின் ஆதரவு தொடரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.'

' கடந்த ஏப்ரலில் எமது அனுபவம் காரணமாக எமது தேசிய பாதுகாப்பு தந்திராபாயங்களை நாம் மீள் சிந்தனைக்குட்படுத்த வேண்டியிருந்தது.இந்த விடயத்தில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உதவி பெரிதும் மதிக்கத்தக்கது , போற்றத்தக்கது என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கான தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கூறியிருந்ததை இங்கே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதல்களுக்கு பின்னரான உடனடி நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினேன். அவரது அந்த விஜயம் அந்த அனர்த்தத்தின் விளைவான பாதிப்புகளிலிருந்து நாம் விடுபடுவதற்கு பாரிய பலத்தை எமக்கு வழங்கியது.'

'இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு 40 கோடி டொலர்களையும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது முயற்சிகளுக்கு 5 கோடி டொலர்களையும் கடனுதவியாக வழங்க முன்வந்த பிரதமர் மோடியை நான் மெச்சுகிறேன். நவம்பரில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்த கடன் உதவிகள் தொடர்பில் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

வீடமைப்பு மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய செயற்திட்டங்கள் உட்பட இந்தியாவின் உதவியுடன் தற்போது நடைமுறைப் படுத்தப்படுகின்ற  செயற்திட்டங்களின் முன்னேற்றம் எமது பேச்சு வார்த்தைகளின் இன்னொரு அம்சமாக அமைந்தது இலங்கையின் சகல பாகங்களுக்கும் வீடமைப்பு திட்டத்தை விஸ்தரிப்பதற்கு மேலும் உதவிகளை தருவது குறித்து பரிசீலனை செய்யுமாறு நான் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவ்வாறு செய்வது எமது நாட்டின் கிராமப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பலருக்கு பெரும் பயன்களைத்தரும்.'

'பொருளாதார ரீதியில் முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களில் இலங்கையும் இந்தியாவும் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்தும்  நானும் மோடியும் ஆராய்ந்தோம்.உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மத்தியில் முக்கியமானதாக வெளிக்கிளம்பும் நாடாக இந்தியா விளங்கும் நிலையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் குறிப்பிட்ட சில பொருளாதார துறைகளிலிருந்து இலங்கை எவ்வாறு பயனடைய முடியும் என்பது குறித்தும் பிரதமர் மோடியுடன் நான் கலந்து பேசினேன். சிவில் சேவைகளில் திறன் அபிவிருத்தி மற்றும் ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் உதவிக்கு நான் வேண்டுகோள் விடுத்தேன். அண்மைய எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மோடிக்கு ஏற்கனவே எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அவரது அந்த விஜயத்தை இலங்கையிலுள்ள நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.'

'இந்தியா எமது நெருக்கமான அயல்நாடாகவும் , நீண்டகால நட்புநாடாகவும் இருப்பது குறித்து நான் உண்மையில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.2000 வருடங்களுக்கும் அதிகமான காலம் பழமை வாய்ந்த இலங்கைக்கும் , இந்தியாவுக்கும்  இடையிலான வரலாற்று , மத மற்றும் கலாசார பிணைப்புக்கள் எமது தோழமைக்கு கெட்டியான ஒரு அத்திவாரமாக அமைந்திருக்கின்றன.இறுதியாக இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது எனக்கும் , எனது தூதுகுழுவினருக்கும் வழங்கப்பட்ட பண்பமைதியான விருந்தோம்பலுக்காகவும் சிறந்த ஏற்பாடுகளுக்காகவும் பிரதமர் மோடிக்கும் , இந்திய அரசாங்கத்திற்கும் எனது ஆழமான நன்றி அறிதலையும் , மெச்சுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்'.

ஜெய்சங்கர் - மஹிந்த ராஜபக்ஷ

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சனிக்கிழமை காலை இலங்கை பிரதமரை சந்தித்து பேசினார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான பாதையை வகுப்பதற்கு எங்களுக்கு உங்களது விஜயம் மிகவும் முக்கியமான சந்தரப்பமாக அமைகின்றது என்று அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார்.கடந்த சில வருடங்களில் பெருமளவு முன்னேற்றம் காணப்படாமல் இருக்கும் பல செயற்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர்.

சுற்றுலாத்துறைப்போன்ற துறைகளில் இலங்கையில் பெருமளவு அக்கறை காட்டப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய ஜெயசங்கர் சிறந்த ஒரு சுற்றுலா தலமாக இலங்கையை இந்தியர்கள் மத்தியில் பிரசாரப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் குழுவொன்றை இந்தியாவுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று யோசனை முன்வைத்தார்.இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஆகக் கூடுதல் எண்ணிக்கையில் உல்லாசப் பயணிகள் வருகின்றார்கள். 2018 இல் 424887 உல்லாசப் பயணிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றிருந்தார்கள்.ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் விளைவாக 2019 இல் அந்த வருகை குறைந்து போனது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலுக்கு பிறகு குறுகிய காலத்துக்குள் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட விஜயம் மிகவும் நன்நோக்கத்துடனானது. இலங்கை பாதுகாப்பான நாடாக இருக்கின்றது என்ற செய்தியை இந்தியாவிற்கும் உலகத்திற்கும் சொல்வதை நோக்கமாக கொண்டதே அவரது விஜயம் என்று ஜெயசங்கர் மேலும் சொன்னார்.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதல் உலகத்தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அண்மையில் தொடங்கப்பட்ட நாடுதழுவிய புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னைய வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்ததைப் போன்ற உதவியை மீண்டும் வழங்குவது குறித்து இ;ந்தியா பரிசீலிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இரு தூதுக்குழுக்களும் இரு நாடுகளினதும் மீனவசமூகங்களின் நீண்டகால கவலைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.மீனவர்கள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினை எந்தவொரு தரப்புக்கும் பயனில்லாதது  என்று ஒத்துக் கொண்ட இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட சகல மீனவர்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் , நடைமுறை சாத்தியமான தீர்வொன்றை காண்பதற்கு மேலும் கூடுதலாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இணங்கி கொண்டனர்.

சனிக்கிழமை மாலை இந்திய ஜனாதிபதி; ராம்நாத் கோவிந்தை இலங்கை பிரதமர் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த அவரின் ஐந்து நாள் விஜயம் கடந்த வருடம் நவம்பரில் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு அவர் மேற்கொள்கின்ற முதலாவது வெளிநாட்டு விஜயமாகும்.புதுடில்லியில் அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்கிலம் , சிங்களம் மொழியில் மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்கும் செய்திகளும் அவரது படங்களையும் கொண்ட பிரமாண்டமான பதாதைகள் டில்லி முக்கிய வீதிகளில் காணப்பட்டன. விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும் அவரை மகிழ்விக்க நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு பிணைக்கும் சக்தியாக இந்து மதமும் பௌத்தமும் இருப்பதால் கௌதம புத்தர் அவர் முதலாவது போதனையை செய்த உத்தர பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள தலத்திற்கும் விஸ்வநாத் கோயிலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சென்று வழிபட இருக்கின்றார். புத்தர் ஞானம் பெற்ற தலமான பீஹாரிலுள்ள புத்தகாயாவிற்கும் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்திற்கும் அவர் செல்ல இருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த 2010 - 2014 கால கட்டத்தில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்திருந்ததையடுத்து இந்தியா பெரும் கவலை வெளியிட்டது. அதன் பின்புலத்தில் நோக்குகையில் தற்போது பிரதமர் என்ற வகையில் அவர் புதுடில்லிக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் - முக்கியத்துவம் பெறுகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா மீது ராஜபக்ஷ கடுமையான கசப்புணர்வைக் கொண்டிருந்தார்.மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் வரை இந்த கசப்புணர்வு தொடர்ந்தது. மோடி மேற்கொண்ட அந்த விஜயத்தின் போது இந்தியாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் , மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது இந்தியா அவரை ஆதரிக்கவில்லை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு ஆதரவானவர் என்றும் கோதாபய சீனாவுக்கு ஆதரவானவர் என்றும் கருதப்பட்டதால் இந்தியா பிரேமதாசவையே ஆதரித்தது.

ஆனால் தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றியை அடுத்து இந்தியா உடனடியாக அவருடன் நெருக்கமான உறவை வளர்க்கத் தொடங்கியது. உடனடியாகவே கொழும்புக்கு விரைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கோதாபய ராஜபக்ஷவை சந்தித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த விஜயத்துக்கான பிரத்தியேக திகதியொன்றுக்கும் இலங்கை ஜனாதிபதியை ஜெயசங்கர் இணங்க வைத்தார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த சந்திப்பு பெரும் வெற்றிகரமாக அமைந்து இருவரும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் இருவரையும் பிரிக்கின்ற ஒரேயொரு பிரச்சினையென்றால் அது இலங்கைத் தமிழர் பிரச்சினையே ஆகும். டில்லியில் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மோடி தமிழருடனான நல்லிணக்கம் பற்றி குறிப்பிட்ட போதிலும் கோத்தாபய அதுபற்றி எதுவும் கூறவில்லை. அதேபோன்றே கடந்த சனிக்கிழமை டில்லியில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் 'இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் 'என்று மோடி நம்பிக்கை வெளியிட்ட போதிலும் , மஹிந்த ராஜபக்ஷ அதுபற்றி எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எவ்வாறெனினும் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார அபிவிருத்தி , பாதுகாப்பு போன்ற ஏனைய விவகாரங்களில் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை தமிழர் பிரச்சினை பாதிப்பதற்கு இரு தரப்பினரும் அனுமதிக்கக்கூடிய  சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இந்த துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்பட இலங்கையும் விரும்புகின்றது.

கோதாபயவின் விஜயத்தையடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்து ஆற்றல் மேம்;பாடு எனும் புதிய தொழிற்துறை அபிவிருத்திற்கு இந்தியாவின் உதவியை பெறுவது குறித்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கைத் தலைவர்கள் டில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தினால் பலப்படுத்தப்பட்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோடி இலங்கைக்கு மேற்கொள்ளக்கூடிய அடுத்த விஜயத்தினால் மேலும் கெட்டியாகும்.

புதுடில்லி (நியூஸ் இன் ஏசியா ) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41