வுஹான் நகரில் 10 நாட்களுக்குள் சீனா நிர்மாணித்த 1000 கட்டில்களைக் கொண்ட பிரம்மாண்டமான வைத்தியசாலை

Published By: Digital Desk 3

04 Feb, 2020 | 04:15 PM
image

புதிதாக 2,829 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்க ஜனாதிபதி சீ ஜின்பிங் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் புதிதாக 2,829 பேர் இலக்காகியிருப்பதையும், ஞாயிற்றுக்கிழமை 57 பேர் மரணமடைந்ததையும் உறுதிசெய்யும் அறிக்கைகள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை கூறினர். மரணமடைந்தவர்களில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக விளங்கும் வுஹான் நகரை உள்ளடக்கிய மத்திய சீன மாகாணமான ஹூபேயைச் சேர்ந்தவர்களென்றும், ஒருவுர் தென்மேற்குச் சீனாவின் ஷொன்கிங்கைச் சேர்ந்தவர் என்றும் சீன தேசிய சுகாதாரசேவை ஆணைக்குழு அந்நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா அறிவித்திருக்கிறது. 

ஞாயிறன்று மேலும் 5,173 பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும், 186 நோயாளிகள் கடும் சுகவீனமுற்றதாகவும், 147 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் ஆணைக்குழு கூறியது. ஞாயிற்றுக்கிழமை வரை சீனப்பெருநிலப்பரப்பில் ஒட்டுமொத்தமாக 17,205 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 361 பேர் இந்தத் தொற்றினால் மரணமடைந்திருக்கிறார்கள்.

2,296 நோயாளிகளின் நிலை கடுமையானதாகத் தொடர்ந்து இருந்துவருவதாகவும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,558 என்றும் தெரிவித்த ஆணைக்குழு, தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்கள் என்று 189,583 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 10,055 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து ஞாயிறன்று விடுவிக்கப்பட்டனர். அதேவேளை 152,700 பேர் இன்னமும் மருத்துவக் கண்காணிப்பிற்குள் இருக்கின்றனர் என்றும் கூறியது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையளவில் ஹொங்கொங் விசேட நிர்வாகப் பிராந்தியத்தில் 15 பேருக்கும், மெக்காவூ விசேட நிர்வாகப் பிராந்தியத்தில் 8 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

10 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வைத்தியசாலை

கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் 10 நாட்களுக்குள் துரிதமாக நிர்மாணிக்கப்பட்ட பிரம்மாண்டமான புதிய வைத்தியசாலை விரைவில் இயங்கவிருக்கிறது. வுஹானின் ஹூவோஷென்ஷான் (அக்கினிக்கடவுள் மலை) பகுதியில் 1000 படுக்கைகளுடன் இந்த வைத்தியசாலை சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியுமான சீ ஜின்பிங்கின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நிறுவப்பட்டது. நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு ஆயுதப்படைகளைச் சேர்ந்த 1400 மருத்துவ ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள். 

கொரோனா வைரஸிற்கு எதிரான சீனமக்களின் கடுமையான போராட்டத்தில் இந்தப் புதிய வைத்தியசாலை நிர்மாணம் ஒரு முக்கியமான நிகழ்வுப்போக்காகும். சீ ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா முன்னென்றுமில்லாத வகையிலான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தேசிய அளவில் மருத்துவ ஊழியர்களையும், அதிகாரிகளையும் அணி திரட்டுதல், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மருத்துவ விநியோகங்க்ளைத் துரிதமாக அனுப்புதல். புதிய வைத்தியசாலைகளை நிர்மாணித்தல், சீன சந்திரப்புதுவருட விடுமுறையை நீடித்தல், பாடசாலைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் திறக்கும் தினங்களைப் பிற்போடுதல் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

சர்வதேச ஒத்துழைப்பு

சீனாவின் நடவடிக்கைகள் அதன் மக்களை மாத்திரமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள மக்களையும் பாதுகாக்கின்றன என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானொம் கெப்ரிஜீசஸ் கூறியிருக்கிறார். இந்த வைரஸ் விரைவாகப் பெரியளவில் தொற்றக்கூடியது என்பதால் சீனாவின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை முழு உலகமும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. நேரகாலத்துடன் கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் பற்றிய தகவல்களை வெளியிடவேண்டும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சீ ஜின்பிங் வலியுறுத்தியிருக்கிறார். சீனா உலக சுகாதார ஸ்தாபனத்துடனான ஒத்துழைப்பிற்குப் பாரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்று ரெட்றோஸிடம் அவர் கூறியிருக்கிறார். பிராந்திய மற்றும் உலகலாவிய பொதுச்சுகாதாரப் பாதுகாப்பைப் பேணுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் ஒத்துழைத்துப் பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

வெளிநாட்டவர்கள் நம்பிக்கை

இது இவ்வாறிருக்க கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோய்க்கு மத்தியில் சீனாவிலுள்ள வெளிநாட்டவர்கள் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னென்றும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று சின்ஹூவா கூறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பறவைக்காய்ச்சல்

இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் விரைவாகத் தொற்றக்கூடியதும், மனிதர்களுக்குப் பரவக்கூடியதுமான எச்5என்1 கிருமி (பறவைக்காய்ச்சல்) வுஹான் நகருக்குத் தெற்கேயுள்ள ஒரு பண்ணையில் 4,500 கோழிக்குஞ்சுகளைப் பலியெடுத்திருக்கிறது. இந்தப் பண்ணை தென்மாகாணமான ஹூனானின் ஷாவோயாங் நகரில் அமைந்திருக்கிறது என்று வாரஇறுதியில் லண்டன் டெய்லிமெயில் பத்திரிகையின் இணையப்பதிப்பு அறிவித்திருக்கிறது. 

பறவைக்காய்ச்சல் பரவுவதாக அறியப்பட்ட உடனடியாகவே சீன அதிகாரிகள் ஏற்கனவே 17,828 பறவைகளைக் கொன்றொழித்து விட்டார்கள். அந்தப் பகுதி தடை செய்யப்பட்டு, பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான தொற்றுநீக்கத்திற்கான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்குத் தொற்றுவது மிகச் சுலபமல்ல. அது மனிதர்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவுவது கடினம். முன்னர் இது பரவியபோது உலகம் பூராகவும் பலபேர் கொல்லப்பட்டனர். பறவைக்காய்ச்சலின் தொற்றுக்கு மக்கள் இலக்காகும் போது அதன் விளைவான மரணவீதம் சுமார் 60 சதவீதமாக இருக்குமென்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது என்றும் டெய்லிமெயிலின் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவின் மூன்றாவது நபர்

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மூன்றாவது நபரொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் திங்கட்கிழமை இந்திய ஊடகங்கள் அறிவித்தன.

இந்த நோயாளி சீனாவின் வுஹான் நகருக்குப் பயணஞ்செய்து வந்தவராவார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸ் அவருக்குத் தொற்றியிருப்பது அறியப்பட்டது. வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருக்கும் அவரது நிலை உறுதியாக இருப்பதாகவும், மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை சீனாவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. எவரேனும் சீனாவிற்குப் பயணஞ்செய்தால் நாட்டிற்குத் திரும்பிவரும்போது தடுத்துவைக்கப்படலாம்.

சீனர்களுக்கும், சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் ஈ-வீசா வசதியை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கிறது. 

சீனாவிற்கு வெளியே உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று விபரம்

ஜப்பான் 20

தாய்லாந்து 19

சிங்கப்பூர் 18

தென்கொரியா 15

ஐக்கிய இராச்சியம் 11

ஜேர்மனி 10

ஹொங்கொங் - 1 - இறப்பு, 17 - தொற்று

தாய்வான் 10

மலேசியா 8

அவுஸ்திரேலியா 7

வியட்நாம் 8

பிரான்ஸ் 6

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் 5

கனடா 4

இந்தியா 3

பிலிப்பைன்ஸ் 1 - இறப்பு, 1 - தொற்று

ரஷ்யா 2

இத்தாலி 2

பிரிட்டன் 2

நேபாளம் 1

இலங்கை 1

ஸ்வீடன் 1

ஸ்பெய்ன் 1

கம்போடியா 1

பின்லாந்து 1

மொத்தம் 158

சீனாவில் பலியானோர் தொகை - 427

பிலிப்பைன்ஸில் மற்றும் ஹொங்கொங்கில் ஒருவர் பலி

சீனாவில் தொற்றுக்கு இலக்கானதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை - 17,238 (தாய்வான், ஹொங்கொங், மெக்காவூ உட்பட)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54