பங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த  பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ  ஸ்ரீ  தாகுர் அனுகுல்சந்திர ஆசிரமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பண்டே (62  வயது)  என்ற மேற்படி பணியாளர் காலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற போது தாக்குதல்தாரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளார்.

அவர்  தனக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் பொருட்டு மருத்துவர்களின் ஆலோசனைப் பிரகாரம் தினசரி நடைப் பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை சூழ்ந்து கொண்ட தாக்குதல்தாரிகள் குழுவொன்று அவரது கழத்தை கத்தியால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமைகோரவில்லை.

இது தொடர்பில் மேற்படி ஆசிரமம்  அமைந்துள்ள   வட மேற்கு மாவட்டமான பப்னாவை சேர்ந்த  பொலிஸ் தலைமை அதிகாரி அலம்கிர் கபீர் தெரிவிக்கையில்,  மத பிரிவினைவாதிகளே இந்தத் தாக்குதலுக்கு காரணமென நம்புவதாக கூறினார்.