தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் மாறினால் இணைவது குறித்து பரிசீலிப்பேன் – விக்கி 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 04:09 PM
image

தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் பூ. லஷ்மன் அல்லது மருத்துவ நிபுணர் சிவன் சுதன் போன்றவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வாரத்துக்கொரு கேள்வி 23.01.2020

தமிழ் மக்கள் கூட்டணியின் அங்கத்தவர் ஒருவர் என்னுடன் கலந்துரையாடியவற்றை இவ்வாரத்திற்கொரு கேள்வியாக தருகின்றேன்.

கேள்வி:-  நாங்கள் உங்களை சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவைக்கும் ஒரு மாற்றுத் தலைவராக நினைத்திருக்கும் போது, நீங்கள் எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட்டால் அக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் பயணிப்பதை பரிசீலிக்க முடியும் என்று கூறலாம்? போதாக்குறைக்கு செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் இது பற்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள். எங்களை எல்லாம் விட்டுச் செல்ல துணிந்து விட்டீர்களா?

பதில்:- இல்லை. நான் உங்களுடனேதான் இருப்பேன். நீங்கள் என்னுடனேதான் இருப்பீர்கள். பல விடயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் தமது தலைமைத்துவத்தை விட்டுக் கொடுக்க முன்வருவார்களா? அதை முதலில் சிந்தியுங்கள்.

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் தானே என்ற முறையில் சுமந்திரன் காய்களை உருட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? அவர் தமது கனவுகளைச் சிதைக்க ஒத்துக்கொள்வாரா? எஸ்ஜேவி க்கும் அவருக்கும் இடையில் குணஅளவில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேற்றுமை இருப்பினும் அடுத்த எஸ்ஜே செல்வநாயகம் தானே என்று முழுமையாக நம்புகின்ற அவர் எவ்வாறு தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பார்?

அவர் மாவையையும் சம்பந்தனையும் இன்னும் பலரையும் ஓரங்கட்டி தலைமைத்துவத்தைத் தானே பெற முயல்கின்றார் என்பதை அறியமாட்டீர்களா?

“எங்கள் கட்சியையே தேசியத்தலைவர் அடையாளம் காட்டினார்; நாங்களே உண்மையான வாரிசுகள்” என்று தேர்தலின் போது ஆனல்டும், சயந்தனும் சுமந்திரனுடன் சேர்ந்து மார்தட்டப் போவதை உங்களால் யூகிக்க முடியாதிருக்கின்றதா?

சென்ற முறை நடந்த தேர்தலில் நேர்ந்த அதே தவறுகள் மேலும் இன்னும் பெரிய விதத்தில் இம்முறை நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ரணில் இல்லாவிட்டால் சிலரால் இயங்க முடியாது என்று எண்ணுகின்றீர்களா?

தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும்.

மக்கள் தம்பியின் பெயரைக் கேட்டு மயங்கி தம்பி தொடக்கிய பழைய கட்சியான த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள். பதவிக்கு வந்ததும் இவ்வாறானவர்கள் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பொருளாதார விருத்தி பற்றிப் பேசுவார்கள்.

இதுவரை எமது 15 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள். பொது மன்னிப்பு எமது சிறைக் கைதிகளுக்கு அளிக்காவிட்டால் ரணிலுடன் சேர்ந்து பயணிக்க மாட்டோம் என்று ஒருமுறை கூறியிருந்தால் அவர்கள் விடுதலை அடைந்திருப்பார்கள்.

எமது மக்கள் (முக்கியமாக என் வயதினர் அல்லது வயதில் மூத்தவர்கள்) த.தே.கூட்டமைப்புடன் ஒரு உணர்வுபூர்வமான உறவை இது காறும் வைத்திருந்து வந்துள்ளார்கள். அந்தப் பலவீனத்தைப் பாவிப்பார்கள் எமது வின்ணாதி விண்ணர்கள்! மக்கள் சார்பான கொள்கைகளை மலையேற்றி விட்டு மத்தியின் மதியூகிகளாக மாறி விடுவார்கள் எமது புதிய தலைவர்கள்.

“பாருங்கள்! ஆலைகளைத் தந்தோம், பாதைகளைத் தந்தோம், பல் தொழில்கள செழிக்கச் செய்தோம்! வேறு என்ன வேண்டியிருக்கின்றது?” என்று டக்ளஸ் பாணியில் பல்லவி பாடத் தொடங்கி விடுவார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் வட கிழக்கை இணைக்க முடியாது: சமஷ்டி கிடையாது: எமது தேசியம் வெறும் கூக்குரலேயன்றி இறைமையை வேண்டுவது முட்டாள்த்தனம். ஒற்றையாட்சிக்குள் கிடைப்பதை சுருட்டிக் கொள்வோம். நாம் பதவியில் இருக்கும் அரசுடன் சேர்ந்து எமது தனிப்பட்ட நலன்களையும் பெற்று பொருளாதார சலுகைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்ற மனோநிலையிலேயே பயணஞ் செய்வார்கள்.

கொள்கைப் பற்றுறுதியுடன் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் அதன் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் இன்று இந்த கேவலமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

அதற்குத்தானே மாற்றுத்தலைமை வேண்டுகின்றோம் என்பது உங்கள் வாதம். ஆனால் நடக்கப்போவது என்ன? மக்கள் குழம்பிவிடப் போகின்றார்கள். பல்முனைப் போட்டியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே கூடிய வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். பொருத்தமற்ற, தமிழ் இதயத்தைப் புரிந்து கொள்ளாத தலைவர்கள், சுயநலமே வாழ்க்கை என்ற கொள்கையுடைய தமிழ்த் தலைமைகளே தமிழர்களின் வருங்காலத்தைத் தீர்மானிப்பார்கள். எமது கோரிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிடும்.

மாற்றணிக்குள் ஒற்றுமை ஏற்பட்டால் நிலமை சீராகுமல்லவா என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால் எல்லாக் கட்சிகளிலும் நாம் காண்பது என்ன? எவ்வகையிலேனும் தமது கட்சியைப் பலப்படுத்த வேண்டும், தாங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட வேண்டும், அதிகாரம் தமது கைகளுக்கு வர வேண்டும், நாடாளுமன்ற அங்கத்துவத்தின் நன்மைகளை ஐந்து வருடங்களுக்கேனும் சுகிக்க வேண்டும் என்றே எண்ணுகின்றார்கள்.

ஆணவத்தையும் சுயநலத்தையும் தான் எல்லாரிடத்திலும் காண்கின்றேன். மக்களைப் பற்றிய கரிசனையை நான் அவர்களிடம் காணவில்லை. ஒருவருக்கொருவர் தமது அறிவுக் கூர்மையை வெளிக்காட்டி மற்றவர்களுக்கு எதிராக புள்ளிகள் பெறவே முயல்கின்றார்கள். ஒருவருக்கொருவர் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சந்தி சிரிக்க வைக்கின்றார்கள். இணையத்தில் சிலவற்றை ஓடவிடுகின்றார்கள். ஒவ்வொருவருந் தான் நல்லொழுக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் மற்றவர்கள் கேவலமானவர்கள் என்றும் உலகத்திற்கு எடுத்துக் காட்ட முயல்கின்றார்கள்.

அதுவும் சட்டத்தரணிகள் தமது புத்திக்கூர்மையொன்றே தமிழர்களுக்கு விடிவு காலத்தை தரும் என்று எண்ணுகின்றார்கள். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரை தமிழர் தலைவர்கள் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளனர். அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் பிரயாணம் செய்யவிடுவார்களோ என்பது சந்தேகமே. அரசியல் பேச்சுக்களுக்கு எங்கள் மக்கள் எடுபடுகின்றார்கள்: அரசியல்வாதிகள் தரும் “சம்திங்”க்கு எடுபடுகின்றார்கள். வெகுவிரையில் இலங்கை முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை இவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.

இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் எமது அரசியல்வாதிகள் நடமாடுவது எமக்கு வேதனையை அளிக்கின்றது. எம்முள் இருக்கும் முரண்பாடுகளை ஒற்றுமையின்மையை இதுவரை மத்திய அரசாங்கங்கள் தமக்குச் சார்பாக பயன்படுத்தி வந்துள்ளன.

உதாரணமாகப் பார்த்தால்; இனப்பிரச்சனைக்கான பேச்சில் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாமாகத் தனித்தே மத்திய அரசுடன் பேசுகின்றார்கள். மற்றவர்களைப் பங்கு கொள்ள விடுவதில்லை. சில நேரங்களில் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுவார்கள். இந்தத் தெரியாதவர்களை தேர்ந்தெடுப்பதும் இவர்கள் தான்.

தம்முடன் முரண்படாமல் செல்லக்கூடியவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவது தம்மை அதிகாரத்தில் வைத்துக்கொள்ளவே. அதிகாரத்தைத் தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற இவர்களின் பலவீனத்தை வைத்து மத்திய அரசு இவர்களை தம்வசப்படுத்துகின்றது.

எனவே இனப்பிரச்சினைக்கான பேச்சாக இருந்தாலும் சர்வதேச நடுநிலை இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

எது எவ்வாறெனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்று நான் கூறினேனே ஒளிய அத்தலைமைத்துவத்தை எனக்குத் தாருங்கள் என்று எப்போதுமே கூறவில்லை.

மருத்துவ நிபுணர் பூ. லஷ்மன் அல்லது மருத்துவ நிபுணர் சிவன் சுதன் போன்றவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடியும். அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சேர்ந்து செல்ல முடியும். ஆனால்; அவ்வாறானவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்றார்கள்.

சிலர் நான் மாற்று அரச தலைமைக்காக அலைகின்றேன் என்கின்றார்கள். மாற்று அரசியல் தலைமை எனக்குக் கிடைத்து நான் என்ன செய்யப் போகின்றேன்? எனக்கு வேண்டுவது ஒன்றே ஒன்று மட்டுமே! எமது தமிழ் மக்களின் வருங்காலம். அவர்கள் மாண்புடனும், மதிப்புடனும் வாழ வேண்டும். அவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அது மேம்பட வேண்டும். அதனை மனதில் வைத்தே நான் அவ்வாறு கூறினேன்.எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18