(ஆர்.யசி)

கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்துள்ள தமது  வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை விரைவில் புனரமைத்து தருமாறு கோரி மக்கள் இரண்டாவது நாளாகவும் இன்றும் பிரதேசத்தில்  ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக  இன்று  கொழும்பு- அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டது.   

கொஸ்கம- சாலாவ  இராணுவமுகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்று அதனால் அப்பகுதி மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் இடம்பெற்று வீதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று   மீண்டும் பாதைகள் திறக்கப்பட்டன. 

எனினும் மக்கள் மீது இன்னும் அரசாங்கம் கவனம் செலுத்தாது பாதுகாப்பு முகாம் தொடர்பில் மாத்திரம் சிந்திப்பதாகக் கூறி மக்கள் நேற்று   வீதிகளை மறைத்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். தமது இருப்பிடங்களை முதலில் புனரமைத்து கொடுத்த பின்னர் இராணுவம் தமது கடமைகளை செய்துகொள்ளட்டும். முதலில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்று வலியுறுத்தியே   மக்கள் ஆரப்பட்டங்களை மேற்கொண்டனர். 

இந்நிலையில் இன்றும் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. இராணுவம் இன்னும் தமது நிலைமைகள் விளங்கிக்கொள்ளாது செயற்படுவதாக கூறியும், வீதிகள் திறக்க முன்னர் தமது வீடுகளையும், கடைகளையும் புனரமைத்து தருமாறும் கோரியுமே  மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.