அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு  இனவாதியே அமைச்சர் விமல் வீரவன்ச - மனோ  ஆவேசம்

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 12:49 PM
image

வட மாகாணத்தின் மன்னார் செல்வாரியில் அமைந்துள்ள பனை உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பலகையில் முதலில் இருந்த தமிழ் மொழி எழுத்துகளை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதன்படி இப்போது தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பெயர்பலகை மாற்றப்பட்டு, தற்போது சிங்களத்தில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னை அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என அடையாளம் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பல இன, மொழி, மத பன்மைத்துவத்தை சிதைத்து, இந்நாட்டை மீண்டும் பின்னோக்கி 1950களின் 'சிங்களம் மட்டும்' என்ற இருண்ட யுகத்துக்கு அழைத்து செல்வதில் விமல் வீரவன்ச முன்னணி வகிக்கின்றார்.

இந்நாட்டில் சமூக, பொருளாதார சீரமைப்பு மற்றும் ஒழுக்கம் என்று பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ காட்டிக்கொண்டாலும், இந்நாட்டின் பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இவை அனைத்தும் எந்தவித பயனையும் தராது.

இந்த அரசாங்கத்தில் இடம்பெறும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு, இது தெரியவில்லையா? தமது அமைச்சரவை சகா விமல் வீரவன்சவின் இனவாத நடவடிக்கைகள் பற்றி விளங்கவில்லையா?

நான் எனது அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த வேளையில், எமது அரசு தவறு விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசுக்குள் இருந்தபடி அமைச்சரவையிலும், கட்சி தலைவர்கள் கூட்டங்களிலும் உரக்க குரல் எழுப்பி, ஜனநாயகரீதியாக மோதி என்னால் இயன்றதை செய்திருக்கிறேன் என்பதை இந்நாட்டு தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இதுவும் இந்த அரசில் வடக்கையும், மலையகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த தமிழ் அமைச்சர்களுக்கு தெரியாதா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் வினா எழுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்ட செல்வாரியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை நிறுவனம் ஒன்றின் மும்மொழி பெயர்பலகையில் தமிழ் மொழியை தரவிறக்கம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி தனது முகநூல் மற்றும் டுவீட்டர் தளங்களில் கருத்து கூறியுள்ள முன்னாள், தேசிய ஒருமைப்பாடு, மொழி விவகார, சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

விமல் வீரவன்ச, தனது இந்த நடவடிக்கை மூலம் தமிழர்களை இலங்கை தேசிய வாழ்வில் இருந்து ஒதுக்கி வைக்கிறார். தாம் சிங்கள மேலாண்மை ஆக்கிரமிப்பின் கீழேயே வாழ்கிறோம் என்ற எண்ணப்பாட்டை தமிழர்களுக்கு இவர் தருகிறார்.

நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டுக்கு மேல் தமிழ் பேசும் இலங்கையர்கள் வாழும் மன்னாரில், அரச நிறுவன பெயர் பலகையில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்பது ஆக்கிரமிப்பு, மேலாண்மை சிந்தனை என்பதை தவிர வேறு என்ன?

மறுபுறம் விமல் வீரவன்ச என்ற இந்த அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை. அரசியலமைப்பின் 18ம் 19ம் விதிகளின் படி சிங்களமும், தமிழும் இந்நாட்டின் அரசகரும மற்றும் தேசிய மொழிகள் என கூறப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் சிங்களம், தமிழை விட உயர்ந்தது என கூறப்படவில்லை.

அதேவேளை 22ம் விதியின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக பதிவேடுகள் தமிழிலும், ஏனைய மாகாணங்களில் சிங்களத்திலும் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பெயர்பலகைகளில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் எங்கே இருக்கிறது? அப்படி ஒரு சட்டம் இல்லை. இந்த துறைசார்ந்த முன்னாள் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இது நன்கு தெரியும்.

இப்படி பெயர் பலகைகளில் சிங்கள மொழியை முன்னிலை படுத்தும் ஒரு சட்டம் இருப்பதாக, விமல் வீரவன்சவோ அல்லது அவரது அரசாங்கத்தில் இடம்பெறும், தமிழ் தெரிந்த அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உட்பட எந்தவொரு அமைச்சரோ எனக்கு சுட்டிக்காட்டுவார்களாயின், அரசியலில் இருந்து நான் ஒதுங்கி விடுகிறேன்.

உண்மையில் அரசியலமைப்பு முன்வைக்கும் சட்ட உள்ளார்த்தத்தை மீறியதன் மூலம், அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னை நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என அடையாளம் காட்டியுள்ளார்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08