தலை­மைக்கு குறி­வைக்கும் தலைகள்

Published By: Digital Desk 3

20 Jan, 2020 | 03:23 PM
image

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக தலைமை தாங்கும் ஆசை பல பேருக்கு இருந்­தாலும், அடுத்­த­தாக அந்த வாய்ப்பை பெறப் போகி­றவர் யார் என்ற கேள்­விக்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும் போலவே தெரி­கி­றது.

ஜி.ஜி. பொன்­னம்­பலம், எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம், அப்­பாப்­பிள்ளை அமிர்தலிங்கம் போன்­ற­வர்கள் தலைமைத் தாங்கி வந்த தமிழர் அரசியல், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்­பட்ட பின்னர் விடு­தலைப் புலி­களின் கைக்கு சென்றது.

முள்­ளி­வாய்க்கால் பேர­ழிவை அடுத்து, விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்குப் பின்னர், அவர்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றது என்ற வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்­பிடம் அந்த தலைமை சென்றது.

கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக இருக்கும் இரா.சம்­பந்தன், தமிழ் மக்­களின் தலை­வ­ராக சர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு­வ­ராக இருக்­கிறார். அவ­ருக்குப் பின்னர், கூட்­ட­மைப்பின் தலைவர் யார் என்ற கேள்விக்கான விடை இன்­னமும் இல்லை.

இரா.சம்­பந்தன் வகிக்கும் கூட்­ட­மைப்பின் தலைமைப் பதவி மீது பல­ருக்கு ஆசை இருப்­பது ஒன்றும் இர­க­சியம் இல்லை. அந்த ஆசையை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு பலரும் பல்­வேறு இர­க­சிய முயற்­சி­களை முன்னெ­டுத்­தனர். அதில் தோல்வி கண்ட­வர்கள் தான் ஏராளம்.

வரும் மார்ச் மாதம்  பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்தப்­ப­ட­வுள்­ளது. இந்த தேர்­தலில் இரா.சம்­பந்தன் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று கூறி­யி­ருப்­ப­தாக தகவல்.

மூப்பும், வயது முதிர்ச்­சியால் வரும் உடல் உபா­தை­களும், ஓய்வின் அவசியத்தை அவ­ருக்கு உணர்த்தியிருக்­கலாம். ஆனால், அவர் அர­சி­யலில் இருந்தே ஓய்வு பெறப்­போ­கி­றாரா,­ தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கப் போகி­றாரா அல்­லது தேர்­தலில் போட்டியி­டு­வதில் இருந்து மாத்­திரம் விலகிக் கொள்ளப் போகி­றாரா என்­பது இன்­னமும் உறு­தி­யா­க­வில்லை.

பொதுத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, தேசியப் பட்­டியல் மூலம் இரா.சம்பந்தன்  பாரா­ளு­மன்றம் செல்வார் என்­றொரு பேச்சும் அடி­ப­டு­கி­றது. அவ்­வாறு நடந்தால், கூட்­ட­மைப்பின் தலைவர் பதவி தொடர்­பாக உடனடி­யாக முடிவு ஏதும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

தேர்தல் அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்கிக் கொண்டால்,  பாரா­ளு­மன்ற பிர­தி­நிதித்­து­வத்தை அவர் பெற்றுக் கொள்­ள­மாட்டார். ஆனால், அர­சியல் ரீதி­யாக அவர் தலைமைத் தாங்க முடியும்.

அர­சி­யலை விட்டே ஓய்­வு­பெறும் முடிவை எடுத்தால், கூட்­ட­மைப்பு இன்­னொரு தலை­வரைத் தேட வேண்டியி­ருக்கும்.

அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால், அடுத்த தலை­மைத்­துவம் யாருக்குச் செல்லும் என்ற கேள்வி உள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்­கான தலை­மையை தன்­னிடம் கொடுக்க வேண்டும் என்றும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தன்னால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் சில நாட்களுக்கு முன்னர், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.ஆனந்­த­சங்கரி பகி­ரங்­க­மா­கவே கோரியி­ருந்தார்.

கூட்­ட­மைப்­பையும் இரா.சம்­பந்தன், சுமந்­திரன், மாவை சேனா­தி­ராசா, சிறிதரன் போன்­ற­வர்­களையும் கடு­மை­யாக விமர்­சனம் செய்து வந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் ஆனந்த ­சங்­கரி, தவ­று­களை உணர்ந்து தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் தம்முடன் இணைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இன்­னொரு பக்­கத்தில், சிங்­களத் தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்றில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை தனக்கு வழங்­கப்­பட்டால், அதனை ஏற்றுக் கொள்­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாராளுமன்ற உறுப்­பி­ன­ரு­மான சுமந்திரன் கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இப்போ­துள்ள மூத்த அர­சியல் தலை­வர்கள் யாரும் இது­பற்றி வாய் திறக்­க­வில்லை. குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா எந்தக் கருத்­தையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அவர், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாத்­தி­ர­மன்றி, தமிழ் மக்­களின் சார்பில் அந்தக் கட்­சி­யினால் நடத்­தப்­பட்ட அஹிம்சைப் போராட்­டங்­களில் பங்கெடுத்­தவர், அதற்­காக சிறைக்கும் சென்­றவர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்­சி­களை விட தமி­ழ­ரசுக் கட்சி தான் பெரி­யது, பல­மா­னது. ஏனைய கட்­சி­களின் தலை­வர்­களை விட மூத்த தலை­வர்­க­ளையும் கொண்­டது.

எனவே, தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஒருவர் தான், கூட்­ட­மைப்­புக்கு அடுத்த தலை­வ­ராக வேண்டும் என்ற கருத்து உள்­ளது.

அவ்­வாறு நோக்­கினால் அந்தக் கட்­சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் அர­சியல், போராட்ட அனு­ப­வங்கள் குறைத்து மதிப்­பிட முடி­யா­த­வை­யாக இருந்­த­போதும், அவர் தமிழ் மக்­களின் அர­சி­யலை கையா­ளு­வ­தற்குத் தேவை­யான முழு ஆளுமை பெற்­ற­வரா என்ற கேள்­விகள் எழுப்­பப்­படு­வதும் உண்மை.

குறிப்­பாக, இரா­ஜ­தந்­திர தொடர்­பா­டல்­களில் அவர் பல­வீ­ன­மா­னவர் என்றும் தனது ஆளு­மையை நிரூ­பிக்­க­வில்லை என்றும் ஒரு கருத்து அர­சியல் வட்டாரங்­களில் இருப்­பது மறுக்க முடியாத விடயம்.

அதற்­காக, அவர் கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்­கான போட்­டி­யி­லி­ருந்து ஒதுக்­கப்­பட வேண்டும் என்­பதோ, ஒதுக்கப்­ப­டுவார் என்­பதோ இந்தப் பத்தியின் கருத்து அல்ல.

அதே­வேளை, கூட்­ட­மைப்பின்  பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக உள்ள வேறு சில­ருக்கும் கூட்­ட­மைப்பின் தலைமைப் பதவி மீது கண் உள்­ளதை மறுக்க முடியாது.

சுமந்­திரன் அதனை வெளிப்­ப­டை­யாக கூறி­யி­ருக்­கிறார். அதனை கூறா­த­வர்­களும் இருக்­கி­றார்கள்.

இந்தக் கட்­டத்தில் மாவை சேனா­தி­ரா­சாவின் பெய­ருக்கு முன்­பாகவே, சுமந்­தி­ரனின் பெயர் அடி­படத் தொடங்கியிருப்பது முக்­கி­ய­மா­னது.

சுமந்­திரன் தான் கூட்­ட­மைப்பின் அடுத்த தலைவர் என்ற பேச்சு உருவாகத் தொடங்­கி­யது இப்­போது அல்ல. பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே அவ்வாறான ஒரு கருத்து இருந்­தது.

இரா.சம்­பந்­தனே, அவரை அர­சி­ய­லுக்கு கொண்டு வந்­தவர், சம்­பந்­த­னுடன் கூட இருந்து அவ­ரது அர­சியல் நெளிவு சுழி­வு­களை கற்­றுக்­கொண்­டவர். கடந்த 10 ஆண்­டு­களில் கூட்டமைப்பின் என்­பதை விட, தமிழர் அரசியல் மற்றும் அத­னுடன் தொடர்­பு­பட்ட சர்­வ­தேச அர­சியல் போக்கை முழுமை­யாக அறிந்து கொண்­டி­ருப்­ப­வரும் அவர் ஒருவர் தான்.

கூட்­ட­மைப்பின் சர்­வ­தேச விவ­காரத் தொடர்­புகள் அனைத்­திலும் சுமந்­திரன் தனி­யா­கவோ, இரா.சம்­பந்­த­னு­டனோ பங்­கேற்­றி­ருக்­கிறார்.

எனவே, அடுத்­த­கட்­டத்­துக்கு தமிழர் போராட்­டத்தை எவ்­வாறு கொண்டு செல்­வது என்ற ஒரு தெளி­வான படம் அவ­ருக்கு இருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

ஆனால், சுமந்­திரன் உள்­ளக அரசியலில் அதிகம் எதி­ரி­களை சம்­பா­தித்து வைத்­தி­ருப்­பவர்-. இதுதான் அவ­ருக்கு உள்ள மிகப்­பெ­ரிய ‘மைனஸ்’.

தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் சுமந்­தி­ரனின் எழுச்சி வேறெ­வ­ரையும் உதா­ர­ண­மாக குறிப்­பிட முடி­யா­த­ள­வுக்கு வலு­வா­னது. அது அவ­ருக்கு அவ­ரது கட்­சிக்குள் எதிர்ப்­பையும் சேர்த்தே வளர்த்­தி­ருக்­கி­றது. மற்­றொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயும், அவ­ருக்கு எதிர்ப்­புகள் இருக்­கின்­றன.

கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த கட்­சிகள் பிரிந்து போன­தற்கு, சுமந்­திரன் தான் காரணம் என்று அண்­மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யி­ருந்தார்.

சுமந்­திரன் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­கிறார் என்றும், அவ­ரது செயற்­பா­டுகள் தான், கூட்­ட­மைப்பை விட்டு தாம் வெளி­யே­று­வ­தற்குக் காரணம் என்றும் பல கட்­சி­களும், தலை­வர்­களும் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் வெளி­யேற்­றத்­துக்குக் கூட, சுமந்­திரன்- சம்­பந்­தனை மீறி நடந்து கொள்ள முடி­யாமல் போனது தான், காரணம் என்ற கருத்தும் பர­வ­லாக உள்­ளது.

அதனால் தான், தமி­ழரின் அர­சியல் தலைமை சுமந்­தி­ர­னுக்கு சென்றால் அது தமிழ் மக்­களின் சாபக்­கேடு என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

இரா.சம்­பந்தன் அர­சியல் ஓய்­வு­பெறும் முடிவை எடுத்தால், கூட்­ட­மைப்பின் அடுத்த தலை­மைத்­துவம் தொடர்­பான தெளி­வான தீர்­மா­னத்­தையும் சேர்த்தே எடுக்க வேண்டும்.

விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால் இரா.சம்­பந்­தனின் தலை­மைத்­து­வத்தை பங்­காளிக் கட்­சிகள் ஏற்று மதித்து செயற்­ப­டு­கின்ற நிலை கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கி­றது. அந்த நிலை அவ­ருக்குப் பின்­னரும் தொடர வேண்டும். கூட்­ட­மைப்பை வலு­வான நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்கு அது அவ­சியம்.

அதே­வேளை மக்­களின் ஆத­ர­வையும் ஆணை­யையும் பெறு­வதும் முக்­கியம்.

தமிழ் மக்­களின் அர­சி­யலை சரி­யான திசைக்கு கொண்டு செல்லும், வலு­வா­ன­தொரு கட்­சி­யாக கூட்­ட­மைப்பு செயற்­பட வேண்­டு­மாயின், ஒற்றைத் தலை­மைத்­துவ நிலை மாற்­றப்­ப­டு­வது முக்­கி­ய­மா­ன­தாக இருக்கும்.

கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெளியேறிய கட்சிகள் அனைத்தும் கூறிய ஒரே குற்றச்சாட்டு, தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்துகிறது.சம்பந்தன், சுமந்திரனே முடிவுகளை எடுக்கிறார்கள், திணிக்கிறார்கள் என்பது தான்.

எனவே, பங்காளிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுத் தலைமைத்துவம் அமைக்க வேண்டும் என்ற யோசனை பல ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைக்கப்பட்ட போதும், அதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்கவில்லை.

இந்தநிலை நீண்டகாலம் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, கூட்டமைப்பு தனது போக்கை மாற்றிக் கொண்டு கூட்டுத் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கும் காலம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

அந்த வாய்ப்பை தவறவிட்டால், தலைமைத்துவ சிக்கல்களே கூட்டமைப்பை சிதறடித்து விடும் ஆபத்து இருக்கிறது. அதனை தலைமைக்கு குறிவைக்கும் தலைகள் உணர்ந்து கொள்ளுமா?  

- கபில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13