யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.  உடலில் குண்டுத்துகள்களுடன்  இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.  

அத்தோடு குண்டுதுகள்களுடன் வாழும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை என்றும்  தெரிவித்த பிரதமர்  உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை தன்னிடத்தில் கையளிக்குமாறு கோரியதோடு உடன் மருத்துவ தேவைகள் காணப்படின் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்தாலோசித்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

சிவசக்தி ஆனந்தன் தனது கேள்வியில்  குறிப்பிடுகையில், 

இறுதி யுத்தத்தின்போது குண்டு தாக்குதல்கள், செல்வீச்சுகள், விமான குண்டுத் தாக்குதல்களால் உடலில் குண்டுத் துகள்கள் புகுந்த நிலையில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் வன்னி மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் குண்டுத்துகள்களில் இரசாயான தாக்கத்திற்கு இலக்காவதோடு அத்துகல்களை வெளியேற்றுவதற்குரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றியும் காணப்படுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையை பிரதமர் அறிவாரா? அது தொடர்பான எவ்விதமான நடவடிக்கைகளை தங்களுடைய அரசாங்கம் எடுத்துள்ளது? எனக் கேள்வி எழுப்பினார்.  

 பிரதமர் தனது பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரிய துன்பங்களை எதிர்கொண்டனர் என்பதை நாம் அறிவோம். தற்போது மத்திய கிழக்கின் சிரியா போன்ற நாடுகளில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையிலான யுத்தத்தில் ஏற்படும் விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்க முடிகின்றது. அதேபோன்று தான் இங்கும் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதல்களை மேற்கொண்டார்கள். மோட்டார் குண்டுகளை பயன்படுத்தினார்கள். இதனால் சாதாரண மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உத்தியோக பூர்வமான அறிக்கை எமக்கு கிடைக்கவில்லை. அதேபோன்று குண்டுத்துகள்களின் இரசாயன தாக்கங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களும் கிடைக்கவில்லை. எனினும் அவ்வாறு பாதிப்புக்கு இலக்கானவர்கள் நாட்டின் எந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சைகள் தேவைப்படுமாயின் தாங்கள் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னவுடன் கலந்தாலோசித்து உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். அவர்களுக்கு  அது தொடர்பாக  தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றோம். அனைவருக்கும் உதவிகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதில் எமது அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றார். 

இதன்போது குண்டுதுகள்கள் உடலில் சுமந்த வண்ணம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணப்படுகின்றார்கள். இதேபோன்று சிறுவர்களும் பொதுமக்களும் காணப்படுகின்றனர். மேலும் பலருடைய உடம்பிலிருந்து குண்டுத்துகள்களை அகற்றுவதற்கு விசேட மருத்துவச் சிகிச்சை அவசியமானதாகவுள்ளது. விசேட நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் அவசியமாகவுள்ளன. இந்தியா போன்ற வெளிநாடுகளில் சிகிச்சைபெற வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. பொருளாதார நிதியாக பலவீனமான நிலையில் குண்டு துகள்களுடன் அனைவரும் காணப்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை பெறுவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அண்மையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உறவினரால் நண்பர்களின் உதவியுடன் சென்னைக்குச் சென்று தனது உடலில் காணப்பட்ட 6 குண்டுத் துகள்களை வெளியேற்றியிருந்தார். இவ்வாறு மாணவர்கள் பலர் காணப்படுகின்ற போதும் அவர்களில் பெருமளவானோர் தந்தையை அல்லது தாயை இழந்தவர்களாக, வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே அது குறித்தும் அரசாங்கம் கவனத்திற் கொள்வது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

 இதன் போது கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடத்தில் உத்தியோக பூர்வமான அறிக்கைகள் எதுவும் கையளிக்கப்படவில்லை. தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிக்கையை என்னிடத்தில் சமர்ப்பியுங்கள். நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன். அதேநேரம் மருத்துவ சிகிச்சைகளை உள்நாட்டில் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களை  வரவழைத்து  சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கோ நாம் தயாராகவிருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது எமது கடமையாகும் என்றார்.