கொஸ்கம பகுதியில்  சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள  குப்பைகளை அகற்றுதல், பாதிக்கப்பட்ட நீரினை சுத்தப்படுத்தல் மற்றும் சேதமடைந்த பொதுமக்களின்  சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவம் உட்பட கடற்படையினர், பொலிஸார்,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இலங்கை பொறியியலாளர் பிரிவு, மின்னியல் பொறியியலாளர் பிரிவு மற்றும் இயந்திரவியல் பிரிவு இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சேதமடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காக இரண்டு இராணுவ  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.