மீண்டும் வெடிப்புக்கள் ஏற்படலாம் : இராணுவ முகாம் வேறு இடத்துக்கு ; மூன்று குழுக்கள் விசாரணை -பாதுகாப்பு செயலாளர்

Published By: Raam

08 Jun, 2016 | 08:19 AM
image

கொஸ்கம- சாலாவ முகாமில் வெடிப்பு சம்பவம் குறைவடைந்துள்ளது. ஆனால் இன்னும் நிலைமைகளை வழமைக்கு கொண்டுவரப்படவில்லை. மீண்டும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மக்களை மீண்டும் அருகில் குடியமர்த்த முடியாதநிலைமை காணப்படுவதாக  பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

சாலாவ இராணுவமுகாம் களஞ்சியசாலையை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருகின்றது. விரைவில் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த காரணிகளை பாதுகாப்பு செயலாளர் முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிலுள்ள இராணுவ களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியிலும், பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியிலும் நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான சம்பவங்கள் வேறு நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான  நிலைமைகளில் எவ்வாறு எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகள் நடக்காது இருக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம். 

 பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஆயுத களஞ்சிய சாலைகளை வைத்திருப்பது அச்சுறுத்தலான ஒன்றாகும். ஆகவே இந்த களஞ்சிய சாலையை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருகின்றது. மேலும் எம்மால் அவசரப்பட்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. மீண்டும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலையில் மக்களை அருகில் குடியமர்த்த முடியாத நிலைமையும் உள்ளது. 

அதேபோல் பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் சில உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் இவற்றில் எந்த உண்மைகளும் இல்லை. இதுவரையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார், 47பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்றவேளையில் முகாமில் இருந்த இராணுவத்தினர்  அதிஷ்டவசமான வகையில் வேறு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவை தொடர்பில் முழுமையான தகவல்களை எம்மால் இப்போது வெளியிட முடியாது. எனினும் அதிஷ்டவசமான இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால் தான் பலர் தப்பவும் வாய்ப்பாக அமைந்தது. 

கேள்வி :- இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு  ஏதேனும் சதித்திட்டங்கள் உள்ளனவா?  

பதில்:- இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இராணுவம், புலனாய்வுப்பிரிவு ஆகிய தரப்புகள் பிரத்தியேகமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன . எவ்வாறு இருப்பினும் இந்த விசாரணைகளில் இராணுவம் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். எனினும் இந்த விசாரணைகளை தடுக்க வேண்டும் எனவும், இராணுவம் தண்டிக்கக்கூடாது எனவும் பாதுகாப்பு செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதற்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தின் முன் இராணுவம், பொதுமக்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைவருக்கும் பொதுவாகவே சட்டம் செயற்படும். குற்றம் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் அதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

கேள்வி:- இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலேனும் அச்சுறுத்தலாக அமையுமா?

பதில:- தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தை மிகவும் பெறுமதியான ஒன்றாகும். அதேபோல் தேசிய பாதுகாப்பு என்ற பதம் நாட்டுக்கு எதிரான சதிகள், பொதுமக்களுக்கு எதிரான வேறு சதிகள் அல்லது சர்வதேச நாடுகளின் ஆக்கிரமிப்பு, பொருளாதார ரீதியிலான தாக்குதல் என்ற விடயங்களுடன் தான் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.  பயங்கரவாத அமைப்புகளின் நாடுகடந்த தாக்குதல்கள், அல்லது அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புகளை அவ்வாறு கூற முடியும், அதேபோல் சைபர் தாக்குதல்கள் நடக்கின்றன, கடல் சார் பிரச்சினைகள் உள்ளன. எனினும் சாதாரண விடயங்களை தேசிய பாதுகாப்புடன் ஒப்பிடக்கூடாது. சிறு சிறு விடையங்களை வைத்து பெரிய அளவில் சிந்திக்க கூடாது. இப்போது ஒரு தவறு நடந்துள்ளது.  இதை சரிசெய்ய முயற்சித்து வருகின்றோம். ஒரு சில பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  ஆனால் இது தேசிய பாதுகாப்பை எந்த வகையிலும் பாதிக்காது. 

கேள்வி:- இப்போது சாலாவ முகாம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?

பதில்:- இந்த முகாம் பல காலமாக இந்த இடத்தில் இருந்தது. அவ்வாறான நிலையில் இதை மாற்ற சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது. எனினும் முன்னாள் ஆட்சிக் காலத்திலும் இது மாற்றப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இந்த விடயங்களை பற்றி பேசி வருகின்றோம். இந்த முகாமை வேறு சூனிய வளையத்தில் அமைக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். எனினும் உத்தியோகபூர்வமாக அகற்ற கட்டளை எமக்கு கிடைக்கவில்லை. எனினும் விரைவில் இது மாற்றப்படும். 

கேள்வி :- மக்கள் இந்த முகாமை அமைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவ்வாறு இருக்கையில் இவ்வாறு ஒரு முகாமை வைத்திருந்தது யாருடைய தவறு?

பதில்:- இந்த விடயத்தில் முன்னைய அரசாங்கத்தையோ அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளரையோ அல்லது அதிகாரிகளையோ நாம் குற்றம் சுமத்த முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கை தான் முக்கியம். ஆகவே பாதுகாப்பான அதேபோல் மக்களுக்கு பிரச்சினையான வகையில் எதையும் செய்ய மாட்டோம். 

கேள்வி:-  வெடிப்பு சம்பவத்தில் எவ்வளவு பெறுமதியான ஆயுதங்கள் சேதமடைந்துள்ளன?

பதில்:- எவ்வளவு ஆயுதங்கள், எவ்வளவு பெறுமதி என்பது தொடர்பில் எம்மால் எந்த காரணிகளையும் முன்வைக்க முடியாது. பொய்யான தகவல்களை நாம் தெரிவிக்க தயாராக இல்லை. எவ்வாறு இருப்பினும் அழிந்துள்ளது. அதேபோல் எத்தனை பேர் இருந்தனர் என்பது தொடர்பிலும் தெரிவிக்க முடியாது. 

கேள்வி:- நிலைமைகள் வழமைக்கு வந்துள்ளதா?

பதில்:- வெடிப்பு சம்பவம் குறைவடைந்துள்ளது.  ஆனால் இன்னும் நிலைமைகளை வழமைக்கு திரும்பவில்லை. மேலும் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தீ முழுமையாக அணைந்துவிட்டது. புகை வெளிவருகின்றது. அவையும் இன்று அணைந்துள்ளது. எனினும் முழுமையாக நிலைமைகளை கட்டுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32