சிலாபம் பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள பன்னிரெண்டு வாகனங்களை தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு மோட்டார் வாகன பரிசோதகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

சிலாபம் நகரில் இச்சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு குறித்த வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபம் நகரில் பாடசாலை சுமார் 73 வாகனங்கள் சேவையில் ஈடுபட்டுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்களினால் பாடசாலை  மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையினை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இவ்வாறு இந்த விசேட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் இந்திக பிரேமலால் தெரிவித்தார். 

இதன் பிரகாரம் இச்சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் ஓரிடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவை மோட்டார் வாகன பரிசோதகரினால் பரீட்சிக்கப்பட்டது. 

இதன் போது குறைபாடுகள் காணப்பட்ட வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அக்குறைபாடுகளை சரிசெய்து கொண்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அதுவரையில் சேவையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிலாபம் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பிரேமலால் உட்பட பொலிஸாரினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.