ஈரான் தளபதியின் கொலை: அமெரிக்காவின் போர் தொடுப்பு

Published By: J.G.Stephan

05 Jan, 2020 | 03:11 PM
image

ஈரானியப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை பக்தாத்தில் கொலை செய்யப்பட்டமை அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்சமான-தறிகெட்ட - ஆத்திரமூட்டும் செயலாகும். அது மேற்காசியாவின் இன்னொரு முழு அளவிலான போரை மூளவைக்கக்கூடும். ஈரானின் குட்ஸ் படைகளுக்கு இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தளபதியாக இருந்துவந்த சுலைமானியும், ஈராக்கிய ஸியா திட்டல் படை உறுப்பினர்கள் பலரும் பக்தாத் விமானநிலையத்தில் இருந்து வாகனத்தில் வெளியேறும்போது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் இவ்வார ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் பக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முற்றுகைக்கான பதிலடியென்று வெளிப்படையாகத் தெரிகிறது.

ஈரானின் இராணுவத் தலைவர்கள் மத்தியில் சுலைமானிக்கு ஒரு ஒப்பற்ற அந்தஸ்த்து இருந்தது. அவர் ஈரானியக் கடும்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கினார். அது மாத்திரமல்ல, ஈரானிய அதியுயர் தலைவரான அயதுல்லா அலி காமெனிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார் என்றும் கூறப்பட்டது. அவரை ஒருதடவை 'புரட்சியின் வாழும் தியாகி" என்று அலி காமெனி அழைத்தார். 

அண்மைக்காலத்தில் ஈரானின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக சிரியாவிலும் ஈராக்கிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதான சிற்பியாகவும் சுலைமானி விளங்கினார். சிரியாவிலும், ஈராக்கிலும் ஈரானால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிரியாவில் பஷார் அல் - அஸாத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்த அதேவேளை, அவ்விரு நாடுகளிலும் இஸ்லாமிய அரசு இயக்கத்தைத் தோற்கடிப்பதிலும் பெரும் பங்களிப்புச் செய்தது. சுலைமானியின் தலைமைத்துவத்தின் கீழ் தான் ஈரான் ஸியா திரட்டல் படைகளை அழைத்துப் பயிற்சியும் வழங்கி சிரியாவிலும், ஈராக்கிலுமுள்ள படைக்களங்களுக்கு அனுப்பிவைத்தது. இந்தத் திரட்டல் படைகள் ஈராக்கின் வடபகுதியில் அமிர்லி தொடக்கம் மொசூல் நகர் வரை குர்திஷ் கிளைப்படைகளுடனும், ஈராக் இராணுவத்துடனும் சேர்ந்து அமெரிக்க விமானப்படையின் வான்வெளித் தாக்குதல் உதவியுடன் இஸ்லாமிய அரசு இயக்கத்திற்கு எதிராக சண்டையிட்டு இஸ்லாமிய அரவைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்காவிற்கும், ஈராக்கிய அரசாங்கத்திற்கும் உதவிய அதே படைவீரர்கள் அமெரிக்காவினால் ஈராக்கிற்கு உள்ளேயே வைத்துக் கொலை செய்யப்பட்டது ஒரு முரண்நகையாகும். 

இந்த நெருக்கடி இடம்பெறும் என்று பலரால் முன்கூட்டியே கூறப்பட்டது. அமெரிக்காவிற்கும், ஈhனுக்கும் இடையிலான இன்றைய மோசமான நிலைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே முற்றிலும் பொறுப்பானவர். 2015 ஈரான் அணு உடன்படிக்கையினால் இரு நாடுகளுக்கு; இடையே ஏற்படுத்தப்பட்ட பதட்டத்தணிவை ட்ரம்ப் தன்னந்தனியாக சீர்குலைத்தார். அந்த உடன்படிக்கையிலிருந்து 2018 இல் ஒருதலைப்பட்சமாக வெளியேறிய அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தது. உலக வல்லரசுகளுக்கு இடையே பல வருடங்களாகப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சஞ்சலமான அமைதியை சீர்குலைத்த ட்ரம்ப் தனது ஒரேயொரு நடவடிக்கையின் மூலமாக அமெரிக்காவையும், ஈரானையும் மிகவும் ஆபத்தான சரிவுப் பாதையில் தள்ளிவிட்டார். 

இப்போது சுலைமானியின் கொலையையடுத்து நெருக்கடியைக் கடந்த காலத்தில் கண்டிராத மட்டங்களுக்கு ட்ரம்ப் தீவிரப்படுத்தியிருக்கிறார். 1979 ஆம் ஆண்டில் ஈரானியப் புரட்சிவாதிகளினால் தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்ட போதுகூட இத்தகைய மட்டத்திற்கு நெருக்கடி உச்சம் பெறவில்லை. தற்போதைய நெருக்கடி அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையினால் பதவிநீக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி அவரது உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்பி தனக்கான ஆதரவைத் திரட்டுவதற்கு உதவக்கூடும். ஆனால் ஏற்கனவே பல ஆயத மோதல்களுக்கும், வெளித்தலையீடுகளுக்கும் முகங்கொடுப்பதில் பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தைப் பொறுத்தவரை இது பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடியதாகும். 

அணு உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் சாத்தியத்தையும் கூட வெள்ளிக்கிழமை தாக்குதல் இல்லாமல் செய்துவிட்டது. எந்தவொரு சுயாதிபத்தியம் கொண்ட நாட்டைப் போன்றே ஈரானும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு போர் தொடுப்பாக நோக்கக்கூடும். ஈரானுடன் மூளக்கூடிய ஒரு முழு அளவிலான போர் அண்மைய வருடங்களில் மேற்காசியாவில் அமெரிக்கா ஈடுபட்ட போர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமையும். அத்தகையதொரு போர் பிராந்தியம் பூராகவும் பல தாக்குதல்களை மூளவைக்கக்கூடும். அத்துடன் பெருமளவு உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும். பிராந்தியம் நிலைகுலைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதேவேளை அல்கைடா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற ஜிஹாதி குழுக்கள் மீண்டும் தலையெடுக்க இந்த சூழ்நிலை உதவும். 18 வருடகாலப் போருக்கும், பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்கா - 17 வருடங்களுக்கு முன்னர் ஈராக்கிய அரசை நிர்மூலம் செய்து அந்த நாட்டின் பகுதிகளை ஜிஹாதிகளுக்கான வளமான விளைநிலமாக மாற்றிய அமெரிக்கா முஸ்லிம் உலகில் இன்னுமொரு மோதலைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13