அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சிய தீ விபத்தால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தையடுத்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  குறித்த பகுதியை பார்வையிடச் சென்றிருந்தார்.

இதன்போது அவிசாவளை செயலகப் பிரிவுக்குட்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக் கருத்தினை முன்வைத்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சம்பவம் இடம்பெற்றதையடுத்து  நானும் ஜனாதிபதியும் கலந்துரையாடி  சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

குறிப்பாக வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்து இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள வீடுகள் மற்றும் கடைகள் என்பன சேதமாகியுள்ளன. 

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில் சிறிதளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய பண உதவிகளையும், முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது எனவும் தீர்மானித்துள்ளோம். 

அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்கும் வகையில் அரசாங்கத்தினாலான சகல உதவிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும். 

ஏற்பட்ட சேத விபரங்களும்  பொது மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரமும் இதுவரை  கணக்கிடப்படவில்லை.    அதற்கான நடவடிக்கைகள்  சில தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.  

அதேபோல உணவு, மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகளை எமது பாதுகாப்பு தரப்பினூடாக உடனடியாக மேற்கொள்வதற்கும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். 

எவ்வாறிருப்பினும் மக்களின் பாதுகாப்பில் நாம் அதிக அக்கறை கொண்டிருப்பதனால் நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் அநாவசியமான செயற்பாடுகளை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மக்கள் எமது முப்படைகளுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி செயற்படுமோறும் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.