யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை 

Published By: Digital Desk 4

25 Dec, 2019 | 11:15 AM
image

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை, வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுப்பார்கள்.

பொது மக்கள் உரிய தகவல்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன குறிப்பிட்டார்.

நேற்றைய சந்திப்பின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் பலராலும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. ரெமிடியஸ் கருத்து தெரிவிக்கையில்

“அரியாலை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்யும் பட்சத்தில் மணல் கடத்தல்காரர்களை இலகுவாக கைது செய்ய முடியும்” என குற்றம் சாட்டினார்.

அத்தோடு தான் இவ்வளவு காலத்தில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலமும் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்திருந்தும் இன்றுவரை போதைப்பொருள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எவையும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்தோடு அங்கு கருத்துரைத்த மாநகரசபை உறுப்பினர் செல்வவடிவேல், பொலிஸாருக்கு நாம் தகவலை வழங்கும் போது அந்தத் தகவல் சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவருக்கு செல்கின்றது. எனவே பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே இவை அனைத்தையும் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்