வெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான்  முதலாவது டெஸ்ட்  போட்டி

15 Dec, 2019 | 06:15 PM
image

(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பத்தரை வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் தனஞ்சய டி சில்வா, பாகிஸ்தானின் அறிமுக வீரர் அபிட் அலி, பாபர் அஸாம் ஆகியோர் குவித்த சதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் டெஸ்ட் கிரிக்pகெட் போட்டியிலும் அறிமுக வீரராக சதங்கள் குவித்த முதலாமவர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் அபிட் அலி உரித்தானமை மற்றொரு விசேட அம்சமாகும்.

துபாய் விளையாட்டரங்கில் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அபிட் அலி 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மேலும், நியூஸிலாந்துக்கு எதிராக டனேடின் விளையாட்டரங்கில் 2009இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உமர் அகமால் அறிமுக வீரராக சதத்தைப் பூர்த்தி செய்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் பாகிஸ்தானியர் ஒருவர்  அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா சதம் குவித்த சொற்ப நேரத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனஞ்சய டி சில்வா மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 166 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். டில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் தனஞ்சயவுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இவர்களைவிட திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்தவீச்சில் ஷஹின் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது தனது முதலாவது விக்கெட்டை (ஷான் மசூத் 0) இழந்தது. எனினும் அபிட் அலியும் அணித் தலைவர் அஸார் அலியும் இரண்டாவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிரந்து பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர். 

அஸார் அலி 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் அபிட் அலியும் பாபர் அஸாமும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதங்களைக் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவினர்.

அபிட் அலி 200 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள் அடங்கலாக 108 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 122 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்ட்றிகள் அடங்கலாக 102 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பாபர் அஸாம் சதம் குவித்த சொற்ப நேரத்தில் மத்தியஸ்தர்களால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

பிண்டி விளையாட்டரங்கில் 15 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மொத்தமாக 166 ஓவர்களே வீசப்பட்டன.

முதலாம் நாளன்று 68.1 ஓவர்கள் வீசப்பட்டதுடன் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பு 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாளன்று 18.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. அன்றைய தினம் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களாக இருந்தது.

தொடரந்து மூன்றாம் நாளன்று 5.2 ஓவர்களே விளையாடப்பட்டதுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

வெள்ளியன்று மாலையில் பெய்த கடும் மழை காரணமாக நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை ஒரு பந்துதானும் வீசப்படாமல் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவின் தாயாரின் மறைவையொட்டி, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் இலங்கை வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்தவாறு இன்று விளையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07