ஈசனுக்கு போட்டியாக இன்னும் ஓர் கைலாசா

Published By: J.G.Stephan

15 Dec, 2019 | 01:19 PM
image

கைலாயம் என்றாலே இந்துக்களின்  முழுமுதற் கடவுளான சிவன்  உறையும் புனித ஸ்தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

தேவாரங்களும் திருப்பதிகங்களும் பாடல் பெற்ற அந்த  ஈசனின் கைலாயத்துக்கு போட்டியாக பூமியில் அதேபெயரில் இன்னும் ஓர் கைலாயத்தை  சர்ச்சைகள் நிறைந்த சாமியார் நித்தியானந்தா உருவாக்கி வருகின்றார் என்பது  மேலும்  அவர் மீது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதோடு,  உலகையே  அவர் பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் இந்திய  ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் இதுவே வலம் வந்துொண்டிருக்கின்றது. 

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளும் சர்ச்சைகள் நிரம்பிய புகார்களும் நிரம்பி வழிகின்ற நிலையில் அவரை சர்வதேச பொலிஸாரின் உதவியோடு கைது செய்யுமாறு குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கின்றார் என்று பொலிஸாருக்கு தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆனால் நித்தம் நித்தியானந்தா சமூக வலைத்தளம் மூலமாக தனது பக்தர்களை சந்தித்து புதிய காணொளிகளை பதிவேற்றி வருகின்றார். அரசியல் தொடர்பில் கூட கருத்து தெரிவித்து வருகின்றார்.

நேரடி ஒலிப்பரப்புகளும் அவரது சமூக வலைத்தளங்களில் ஒலிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் அவர் கைலாயம் என்ற தனி நாட்டை  இந்துக்களுக்காக உருவாக்கி வருவதோடு அதில் குடியேறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை இந்திய மத்திய அரசையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் அறிவித்துள்ள கைலாயம் நாடு ஈக்குவோடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தனித்தீவு என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இதனை ஈக்குவோடார் அரசு மறுத்துள்ளது.

நித்திக்கு முன்பு ஓஷோ கூட இதேபோல அமெரிக்காவில் ரஜ்னீஷ் என்ற பெயரில் குடியேறி ரஜ்னீஷ்புரம் என்ற ஊரை உருவாக்கி பின்னர்  இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனவே தனி நகர் அல்லது ஊரை உருவாக்குவது சாத்தியமே ஆனால் தனி நாடு உருவாக்குவது  என்பது சாத்தியம் குறைந்ததே.  எது  எப்படியோ  இந்திய பொலிஸாரின் கண்களில் மணலை தூவி விட்டு தான் எங்கு இருக்கின்றேன் என்று யாருக்கும் தெரியாமல் இந்துக்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்குகிறேன் என்று  கூறும் நித்திக்கு தைரியம் அதிகம்தான்.

 இன்று அசுர வளர்ச்சியடைந்துள்ள நித்தியானந்தாவின் ஆரம்பத்தை  சற்று  திரும்பி பார்ப்போம். 

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி  பிறந்தவர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன்.

இராமகிருஷ்ண மடத்தில் சிறுவயதில் கல்வி கற்க தொடங்கிய ராஜசேகரன் சிறுவயதில் இருந்தே ஆன்மீக பற்று கொண்டிருந்தமையினால்   திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் தம்பி சாமியார் என இவரை அழைத்துள்ளனர். தன் வயது சிறார்கள் எல்லோரும் ஓடி விளையாடும் போது நித்தியானந்தா கோயில் குளமென சுற்றிக்கொண்டு ஆன்மீக தேடலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில்  தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டிய அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக  அடைந்ததாக  இவர்  தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆன்மீகத்தை அதிகம் நாடிச் சென்றார்.  பொறியியல் கல்லூரியில்  கல்வி கற்ற ராஜசேகரன் தனது 17 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி பல ஆன்மீக தலங்களை நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இக்கால கட்டத்தில் நித்தியானந்தா தியானங்களை கற்க தொடங்கினார். இதன்போது கேதாரனாத் அருகில் உள்ள கெளரிகண்டில் மகா அவதார் பாபா ஜீ நித்தியானந்தாவுக்கு காட்சி தந்ததாகவும் அவரே பரமஹம்ச நித்தியானந்தா என்ற பெயரை இவருக்கு சூட்டியதாகவும் நித்தி கூறுகின்றார். இவ்வாறே ராஜசேகரன்.  நித்தியானந்தாவாக மாறினார். ராம கிருஷ் ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை தனது  மானசீகக் குருவாகக் கூறும் நித்தியானந்தா இந்தியாவில் பல ஆன்மீக தலங்களை  சுற்றி இறுதியில் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு மக்களுக்கு ஆன்மீக அருளாசிகளை வழங்க தொடங்கினார். நோய்கள் தீர  ஆன்மீக தொடு சிகிச்சைகளையும் செய்ய தொடங்கினார். இதன் மூலம்  அவரது புகழ் தென் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 

இதனையடுத்து பெங்களூருக்கு சென்ற இவர் 2003 பிடதியில்.  20 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்தா தியான பீடம்  எனும் ஆச்சிரமத்தையும் நிறுவினார். அதன் மூலம் தனது ஆன்மீக அனுபவத்தை மக்களுக்கு வழங்கியதோடு  பல்வேறு தியான நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இதில் கூட்டம் அலைமோத தொடங்கியது.  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரை நோக்கி பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது. இதன் விளைவு பிடதியில் இருந்து அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் வரை ஆச்சிரமங்கள் உருவாகின.

33 நாடுகளில் கிட்டத்தட்ட 1500 நித்தியானந்தா தியான பீட கிளைகள் தற்போது உள்ளன. சாதாரண மக்கள் தொட்டு பிரபலங்கள் வரை அவரை நோக்கி படையெடுத்தனர். ஆரம்பத்தில் சிறிய தொகை கட்டணத்துக்கு நடத்தப்பட்ட தியான வகுப்புகளின் கட்டணங்கள் பின்னர் இலட்சங்களை தாண்டியதாக கூறப்படுகின்றது. இவர் பல்வேறு ஆன்மீக தொடர்களை குமுதம் உள்ளிட்ட  பிரசித்தி பெற்ற இதழ்களில் எழுதியுள்ளதோடு தொலைக்காட்சிகளிலும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மிக இளம் வயது சாமியாரான  நித்தியானந்தா 35 வயதுக்குள்ளேயே புகழின் உச்சிக்கு சென்றார். மதுரை காஞ்சிபுரம் உள்ளிட்ட பாரம்பரிய மடங்களுக்கு சவாலாக மாறினார். அவரது வெளிநாட்டு பக்தர்களினால் அவரது சொத்துமதிப்புகளும் கோடிகளை தாண்டியுள்ளன.

கிட்டத்தட்ட 2000 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை அவரது புகழோடு சேர்ந்து சர்ச்சைகளும் கூடவே வளர்ந்தது. ஆன்மீக ரீதியில் புகழோடு உச்சியில் இருந்த நித்திக்கு சறுக்கலை ஏற்படுத்திய முதல் சம்பவம் 2010 இல் இடம் பெற்றது. திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் அவர் இருப்பது போன்ற ஆபாசா வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.

இது இந்தியா முழுவதும் ஒரே இரவில் நித்தியின் மொத்த புகழையும் ஆட்டம் காண வைத்தது. அவரது  தியான பீடங்கள் கல் வீச்சுக்கு உள்ளாகின.  இது தொடர்பில் அவருக்கு எதிராக மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால்   அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்று நித்தி மறுத்து குறித்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் பெங்களூரு தடையியல் நிபுணர்களின் ஆய்வில்  வீடியோவில் இருப்பது நித்தியானந்தா என்பது உறுதியானது. இந்த வீடியோவை வெளியிட்டது அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பனே.

ஆனால் இவை அனைத்தும் பொய் என்று நித்தி மறுத்தார் இதனை தொடர்ந்து  293 ஆவது மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா தற்போதைய மதுரை ஆதீனம் அருணகிரினாதரினால் நியமிக்கப்பட்டார். ஆனால் 2500 வருடங்கள் பழமையானதும் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரினால் உருவாக்கப்பட்டதுமான மதுரை ஆதீனத்துக்கு பாலியல் சர்ச்சையில் சிக்கிய நித்தியை ஆதீனமாக்கியமைக்கு எதிராக ஆதீன மீட்பு போராட்டம் தொடங்கியது. இறுதியில் நித்தியானந்தா தன்னை ஏமாற்றி ஆதீனமாக்கியதாக மதுரை ஆதீனம் புகாரளித்து நித்தியை அப்பதவியில் இருந்து தூக்கினார். இதனை தொடர்ந்து  நித்தியானந்தா மீது பக்தை ஒருவர் பாலியல்  குற்றச்சாட்டை முன்வைத்தார். நித்தி மீது பாலியல் துஸ்பிரயோக வழக்குகள் பாய்ந்தன.

ஆனாலும் தன்னால் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது தான் ஆண் பெண் என்பதை கடந்தவர் என்று நித்தியானந்தா கூறினார். அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதனை மறுத்தனர். இறுதியில் நித்தி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வந்தார். ஆனால் அவரது  பக்தர்களின் கூட்டம் பெரியளவில் குறையவில்லை. தொடர்ந்தும் சிறுவர்கள் கடத்தல்,  பாலியல் துஷ்பிரயோகம்  என அவர் மீது புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் நித்தி அனைத்தையும் மறுத்து வருகின்றார். நித்தி மட்டும் அல்ல. அவரது சிறு வயது சிஷ்யைகள் கூட சர்ச்சையில் சிக்குகின்றனர் குறிப்பாக கவிபேரசு  வைரமுத்து ஆண்டால் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியின் சிஷ்யைகள் கடுமையான வார்த்தை பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டனர். இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. ஆயினும் நித்தி இதனை கண்டுகொள்ளவில்லை. 

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புது புது வீடியோக்களை வெளியிட்டு அசத்தினார். மிருகங்களை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தான் பேச வைக்கப்போவதாக கூறினார். ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறு என்று கூறி நிறுவினார். இந்நிலையில் நித்திக்கு எதிரான வழக்குகள் தீவிரமடைந்தன. கொலை குற்றபுகார்களும் எழுந்தன.  

தொடர் பாலியல் குற்றச் சாட்டுகள், திருச்சி சங்கீதா என்கிற பக்தரின் மரணத்தில் சர்ச்சை, அமுலாக்கப் பிரிவு வழக்கு என அடுத்தடுத்த நெருக்கடிகள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் தொடர்ந்து இருந்தால் தனக்கு சிக்கல் வந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார் நித்தியானந்தா.

அப்போது அவரின் வெளிநாட்டு பக்தர்கள் சிலர், ‘தீவு ஒன்றை வாங்கி அதில் குடியேறி விடுங்கள்’ என்று ஐடியா கொடுத்தி ருக்கிறார்கள். இதற்கான வேலைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துள்ளார் நித்தி. இதற்கென வெளிநாட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் நடந்துள்ளது. இந்தியாவில் உள்ள பக்தர்கள்மூலம் நகைகளாகவும் இடங்களாகவும் வசூல் செய்துள்ளார்.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடோர் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, அமெரிக்க பக்தர்கள்மூலம் வேலையை ஆரம்பித்த நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கியதாக கூறப்படுகின்றது. அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டது. கடந்த வருடம் இறுதியில்  பிடதியிலிருந்து  இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் செல்வதாக கூறி சென்ற நித்தியானந்தா  உத்தரப்பிரதேசத்தில் சில நாட்கள் தங்கியுள்ளார். அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார். இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காத்மண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காத்மண்ட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதனை அந்நாடு மறுத்துள்ளது நித்தியானந்தா தங்களிடம் அகதி கோரிக்கை விடுத்ததாகவும் தாங்கள் அதனை மறுத்துவிட்டதால் அவர் வேறு நாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது. இதனால் நித்தி எங்கே உள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. 

ஆனால் சமூக வலைத்தளத்தில் தனது சிஷ்யர்களுக்கு தான் நடத்தும்  சத்சங்கயம்  நிகழ்ச்சி மூலம் அவர் தொடர்பில் உள்ளார். அவர் தனது தனிநாடு தொடர்பிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்.

கைலாயம் தற்போது ஸ்ரீ கைலாயமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளதாகவும் இதுவரை 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதில் குடியேற விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு நாடுகள் தங்களது நாட்டுக்கு வரும்படி அவரை அழைப்பதாகவும் கைலாயம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தான் திருவண்ணாமலையில் சாதாரணமானவனாக சிவ சிந்தனையோடு இருந்ததாகவும் பக்தர்களின் அன்பாலேயே நித்தியானந்தா தியான பீடத்தை மக்களுக்காக தான் உருவாக்கியதாகவும் கூறும் நித்தி தன்னை ஓட, ஒட விரட்டி எல்லோரும் அடித்தாலும் மதுரை மீனாட்சி தன்னை காப்பதாகவும் கூறுகிறார். மீனாட்சியும் பரமேஸ்வரரும் நினைப்பதே நடக்கும் தன் கடவு சீட்டை புதுப்பிக்க அரசு மறுத்ததன் விளைவே கைலாயம் உருவாக காரணம் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்க சட்ட நிறுவனங்கள் மூலம் நித்தியின் தரப்பினால்  ஐ.நா.வில் தனி நாடு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது  இந்து மதம், உலகின் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அந்த மதத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் நித்தியானந்தா. அவருடைய நாட்டில் அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் ஆன்மீகத் தலைவருக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

எனவே, அவரை புலம்பெயர் அகதியாகவே இப்போது கருதவேண்டியுள்ளது. அவரின் மதரீதியான பிரசாரத்துக்கு தலைமையிடம் தேவை என்பதால், புதிய நாட்டுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்து மதத்துக்கு ஆதரவான தற்போதைய இந்திய மத்திய அரசு இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்திய பிரஜை ஒருவர் தனிநாட்டை அறிவித்து ஒரு நாட்டின் தலைவராக பிரகடனம் செய்து தங்களுக்கே சவாலாக வந்துவிடுவார் என்று நினைக்கிறது மத்திய அரசு. இந்து மதத் தலைவருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஐ.நா.-வில் பதிவுசெய்து ஒரு நாட்டை உருவாக்க நித்தியானந்தா முயற்சி செய்தால், அது

 பா.ஜ.க. ஆட்சிமீது உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என கவலைகொள்கிறது மத்திய அரசு. எனவே, நித்தியானந்தாவைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலையில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு. இதனால் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது எதனையும் பொருட்படுத்தாது சிரித்த முகத்துடன் நித்தி எங்கிருந்தோ நித்தம் சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றார். அவரை பொலிஸார் தேடினாலும் இன்னும் அவரது பக்தர்கள் கடவுள் போல அவரைத் தேடிச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். 

சித்தர்களும் ஞானிகளும் மகான்களும்  வாழ்ந்த புனித பூமியில் இன்று தெருவுக்குத் தெரு தான் தான் கடவுள் என கூறிக்கொள்ளும் போலிச்சாமியார்கள் முளைத்துவிட்டனர். கடவுளின் சந்நிதியில்  முறையிட்டு வேண்டுபவர்களை விட அதிகமான கூட்டம் இவர்களது ஆச்சிரமங்களிலேயே அலைமோதுகின்றது. தேச எல்லைகளையும் இன, மத பேதங்களையும்  கடந்து பல கோடி பக்தர்கள் கடவுளிடம்  போல இவர்களிடம் தஞ்சமடைகின்றனர். 

 உருவமாக, அருவுருவமாக, அருவமாக எல்லைகள் அற்று  எல்லாம் கடந்து எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை  'தெய்வம் மனிதரூபமாய்' என்று வேதம் சொல்கின்றது.   இந்த காலத்தில் பாவங்களின் இருப்பிடமாக மாறியுள்ள மனித குலத்தை தெய்வ  ரூபம் என ஒப்பிட முடியாது. ஆயினும்  மனிதம் குறையாத மனிதர்கள் சிலர்  இன்னும் இந்த பூமியில் வாழ்கின்றனர். ஆதலால்தான் நிற்காமல் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றது பூமி.  நமக்கு எல்லையில்லா துன்பங்கள் நேரும் போதும் அல்லது ஏதாவது ஆபத்து வரும் போதும். இறைவனை  வேண்டி நிற்போம்.  அந்த சந்தர்ப்பத்தில் இறைவன் வேலோடும்

 அம்போடும் நம் முன்னே வர மாட்டார். உருவங்களை கடந்த இறைவன் ஏதாவது ஒரு மனித உருவில் நமக்கு உதவி செய்வார். இதைத்தான் சில பேர் சில கடினமான நேரங்களில்  சக மனிதன்  புரியும் உதவியை  நன்றி கூறும் போது' கடவுள் போல்  தக்க சமயத்தில் என்னை காப்பாத்துனீர்கள்'  என்று கூற கேட்டுள்ளோம். முற்காலத்தில் தெய்வ பண்புகள் நிறைந்த மனிதர்களும் சித்தர்களும் முனிகளும் வாழ்ந்துள்ளதை நாம் வரலாறுகளில் காண்கின்றோம். ஆனால் இன்று  இந்த கலிகாலத்தில்    போலிகளும் பொய்களும் நிறைந்தவனாக மனிதன் மாறிவிட்டான். வாய் சொல்ல கூசும் கேவலமான  நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித குலத்தின் இருப்பையே கேள்விக் குறியாக மனிதம் இல்லாத மனிதன்  மாற்றிக்கொண்டிருக்கின்றான். 

இதில் சிலர் வெறும் வணிக நோக்கத்துக்காக கஷ்டங்களில் சுழலும் மனிதர்களை காப்பாற்றுவதாக கூறி தெருவுக்கு தெரு   ஆச்சிரமங்களையும் ஆலயங்களையும் அமைத்து தன்னை தானே கடவுள் எனவும் மகான்கள் எனவும் அறிவித்துக்கொள்கின்றனர். மக்கள் இறைவனை விட அவரின் பிரதிநிதி என்று கூறும் சாமியார்களையே அதிகம் நம்புகின்றனர்.

இதனை மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமம். இதனால் காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நடந்தாலும் மனித மனம் மாறும் வரையில் சாமியார்கள் என்றும் அழியமாட்டார்கள். நேற்று பலர் இருந்தனர். இன்று பல சாமியார்கள் உள்ளனர். நாளையும் பலர் உருவாகுவர் என்பதில் 

மாற்று கருத்து இல்லை. அந்த இமயத்து கையலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனுக்கு போட்டியாக இன்னுமோர் கைலாயம் இந்த பூமியில் உருவாக்கப்பட்டாலும் அது அதிசயம் இல்லை.


- குமார் சுகுணா -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13