விடை காணப்படுமா?

08 Dec, 2019 | 04:37 PM
image

எம்.எம்.எ.ஸமட்

மக்­களை ஒன்­றி­ணைப்­பது சூழ்­நி­லை­கள்தான். சூழ்­நிலைக் கார­ணி­களே மக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட களம் அமைத்துக் கொடுக்­கி­றது. அந்­நிய ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த பிற்­பாடு இந்­நாட்டில் வாழும் இனங்­க­ளுக்­கி­டையே இன­மு­று­கலும், முரண்­பா­டு­களும் விரி­வ­டைய ஆரம்­பித்­தன.

இதன் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும், பேரி­ன­வா­தி­களும் தங்­க­ளது நலன்­களைப் பாது­காத்துக்கொள்­வ­தற்­காகச் செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது உண்மை. இதனால் ஓர் இனத்தின் மீது பிறி­தோர் இனம் திட்­ட­மிட்ட ரீதியில் ஒடுக்­கு­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­டன. 

ஒடுக்­கப்­படும் இனம் தமக்­கி­டையே நிலவும் பொது அடை­யா­ளத்தைக் கொண்டே தம் மீது ஒடுக்­கு­மு­றைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக உணர்ந்­தன. ஒடுக்­கு­மு­றை­க­ளி­லி­ருந்து இனத்தைப் பாது­காப்­ப­தற்­காக அவ்­வினம் ஒன்­றி­ணைய வேண்­டிய தேவை ஏற்­ப­ட­லா­யிற்று. மொழி, மதம், கலா­சாரம், பொரு­ளா­தாரம், நிறம், பிர­தேசம், பாரம்­ப­ரியம், இனம், பொது­வான வர­லாற்று அனு­பவம் என பல்­வே­று­பட்ட கார­ணி­களில் ஒன்று அல்­லது பல மக்­களை தங்­க­ளுக்குள் ஒன்­றி­ணைக்­கின்ற கார­ணி­க­ளாக உள்­ளன.

இலங்கைவாழ் முஸ்­லிம்கள் குறிப்­பாக வடக்கு–கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனக்கட்சித் தலை­மை­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தாலும், காணிப்­ப­றிப்பு, விவ­சா­யத்­து­றைக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதிப்­புக்கள், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் சிங்­கள குடி­யேற்­றத்தின்  விளைவால் ஏற்­பட்ட அர­சியல், சமூக, பொரு­ளா­தாரப் பாதிப்­புக்கள், பேரி­ன­வா­தத்­துக்கு எதி­ராக இளை­ஞர்கள் மத்­தியில் ஏற்­பட்ட உணர்­வுகள் போன்ற கார­ணிகள் வடக்கு கிழக்கு முஸ்­லிம்கள் அர­சியல் ரீதி­யாக தங்­க­ளுக்குள் ஒன்­றி­ணை­யவும் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்­டிய தேவை­யையும்  ஏற்­ப­டுத்­தி­யது.

சமூ­கத்­துக்குள் காணப்­படும் இதர வேறு­ பா­டுகளைக் கடந்து பொது அடை­யா­ளத்தின் கீழ் ஒன்­றி­ணைந்து தமக்­கென தனி­யான அர­சி­யலை முன்­னெ­டுக்கக் கூடிய இயக்­கத்தின் தேவை இக்­கால கட்­டத்தில் சமூ­கத்­துக்­காக சிந்­திக்க கூடி­ய­வர்கள் மத்­தியில் வெகு­வாக உண­ரப்­பட்­டது. அந்த உணர்வா னது 1980களின் பிற்­பாடு வலுப்­பெற்­றது. இதனால் கிழக்கு முஸ்­லிம்கள் மத்­தியில் எழுந்த முஸ்லிம் அர­சியல் எழுச்­சி­யா­னது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் இயக்­கத்தை உரு­வாக்­கி­யது.

இந்த அர­சியல் இயக்கம் உள்­ளூராட்சி மன்ற, மாகா­ண­சபை மற்றும் பாரா­ளு­மன்ற தேர்தல்­களில் பெரும் தேசியக் கட்­சி­க­ளுடன் இணைந்­தும் தனித்தும் போட்­டி­யிட்டு அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றது. இக்­கதை இக்­கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்­ரஃபின் யுகக்கதை. அஷ்ரஃப் யுகத்தின் பின்­ன­ரான முஸ்லிம் அரசில் கதை வித்­தி­யா­ச­மா­னது என்­பதை விட பிள­வு­பட்ட அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­டது. இந்­த­ப்­பின்­ன­ணியில் பல கட்­சிகள் உரு­வாகி தனித்­தனி அர­சியல் பய­ணத்தின் மூலம் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வங்­களை தேர்தல்­களின் ஊடாகப் பெற்­றுக்­கொண்­டன.  இத்­த­னித்­தனி கட்சிப் பயணம் அர­சியல் ரீதி­யாக ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும் என்ற அழைப்­புக்கள் 2015 பாரா­ளு­மன்ற தேர்தலுக்கு முற்­பட்ட காலம் முதல் விடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இருப்­பினும் அவ்­வ­ழைப்­புக்கு இத­ுவரை விடை காணப்­ப­ட­வில்லை.

இச்­சூ­ழ­லில்தான், முஸ்­லிம்­களை நோக்­கிய நெருக்­க­டிகள் அதி­க­ரித்­தன. இந்த நெருக்­க­டி­களின் உச்­ச­கட்ட வெளிப்­பாடு ஏப்ரல் 21 தாக்­கு­த­லுடன் வலுப்­பெற்­றது. நெருக் ­க­டி­களின் உச்­ச­மா­னது முஸ்லிம் அமைச்­சர்­களை ஒன்­றி­ணைந்து தங்­க­ளது பத­வி­களை ரா­ஜ­ினாமா செய்ய வைத்­தது. தற்­போது ஒரு முஸ்லிம் அமைச்­சரைக் கூட பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்தில் நிய­மிக்கச் செய்­யா­மலும் செய்­தி­ருக்­கி­றது. பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான இடம் வழங்­கப்­ப­டா­மைக்­கான காரணம் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்­றாலும் நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தலி­னூ­டாக பல்­வேறு செய்­திகள் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­ன்றன. அச்­செய்­தி­களில் ஒன்­றுதான் பெரும்­பான்மை சமூ­கமே இந்­நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தைத் தீர்­மா­னிக்கும் சக்தி என்­பதே.

இந்­நி­லையில், பொது­ஜன பெர­முன கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஏறக்­கு­றைய 69   லட்சம் வாக்­கு­களை அளித்து அமோக வெற்­றி­பெறச் செய்­தது போன்று அடுத்த 2020 பாரா­ளு­மன்றத் தேர்தலில் பொது­ஜன பெர­முன அறுதிப் பெரும்­பான்­மையைப் பெற்று ஆட்­சி­ய­மைப்­பார்­களா என்ற கேள்வி தற்­போது எழ ஆரம்­பித்­தி­ருக்­கி­றது என்­பதை விட அதற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவே உணர முடி­கி­றது. இச்­சூ­ழலில், எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது கூட்­டத்­தொடர் நிறை­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. புதிய பாரா­ளு­மன்ற அமர்­வுகள் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் இடம்­பெ­று­மென அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

2020 பாரா­ளு­மன்றத் தேர்தல் புதிய வரு­டத்தின் ஏப்ரல் மாத இறு­தியில் அல்­லது மே மாத ஆரம்­பத்தில் நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் நிமித்தம் பாரா­ளு­

மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முன்­ந­கர்­வுகளை கட்­சி­க­ள் முன்­னெ­டுத்து வரு­கின்­றன. 2020இல் உரு­வாக்­கப்­படும் பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் எத்­த­கைய தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் என்ற கேள்­வியும், எதிர்­பார்ப்பும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது. நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தலின் பின்­ன­ரான அர­சியல் சூழல் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் 9ஆவது பாரா­ளு­மன்­றத்தில் அதி­க­ரித்துக் காணப்­பட வேண்டும் என்ற அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தா­கவே உண­ரப்­ப­டு­கி­றது.

ஒரு சமூ­கத்தின் தலை­வி­தியை நிர்­ணயிக் கும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறாக அர­சியல் துறை உள்­ளது. இந்த அர­சியல் பலமே ஒரு சமூ­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்கும் சக்­தி­யாக மாத்­தி­ர­மின்றி அச்­ச­மூ­கத்தின் இருப்­பையும் பாதுகாக்­கக்­ கூ­டிய ஆயு­த­மாக விளங்கும். நகர்ந்து செல்லும் அர­சியல் சூழலில் இந்­நாட்டின் ஒரு தனித்­துவ இனம் என்ற ரீதியில் பாரா­ளு­மன்­றத்தில்

 முஸ்லிம் பிர­தி­நி­தி­த்­து­வத்தின் அதி­க­ரிப்பு இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

இதனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசிமின் நிலைப்­பாடு உறுதி செய்­வ­தா­கவே அமை­கி­றது. நாம் எதிர்­நோக்கும் பெரும் ஆபத்­தி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும், ஆட்­சி­யா­ளர்­களின் கவ­னத்தை சிறு­பான்மை சமூ­கத்தின் மீது மேலோங்கச் செய்­வ­தற்­கு­மான  ஒரே­வழி  எதிர்­வ­ரு­ம் பொதுத் தேர்தலில்  எமக்­கான பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை  அதி­க­ரித்துக் கொள்­வது மட்­டு­மே­யாகும் என்ற அவரின் நிலைப்­பாடு இங்கு உற்று நோக்க வேண்­டி­ய­தொன்­றாகும்.

இலங்­கையின் மக்கள் மன்ற வர­லாற்றை சற்று பின்­நோக்கிப் பார்ப்­போ­மானால் 1833ஆம் ஆண்­டு­களில் நிறை­வேற்று சபை என்றும் 1931ஆம் ஆண்டு இலங்கை ஆட்சி மன்ற சபை என்றும் 1947இல் செனட்­ச­பை­யா­கவும் பின்னர் 1971ஆம் ஆண்டு காலத்தில் தேசிய ஆட்­சி­மன்ற அசம்­பிளி எனவும் அழைக்­கப்­பட்டு வந்த மக்கள் மன்­ற­மா­னது 1977ஆம் ஆண்டு கொண்­டு­வ­ர­ப்பட்ட இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்­புக்­க­மைய பாரா­ளு­மன்­ற­மெ­ன  மாற்­றப்­பட்­டது. 

தற்­போது ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர கோட்­டையின் திய­வன்ன ஓயாவின் மத்­தியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புதிய பாரா­ளு­மன்றம் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தா­சவின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க நிர்­மா­ணிக்­கப்­பட்டு, 1982ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­ன­வினால் திறக்­கப்­பட்­டது. இப்­பு­திய பாரா­ளு­மன்றம் திறக்­க­ப­் பட்டு அதன் முத­லா­வது அமர்­வுக்­கான பாரா­ளு­மன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு நடை­பெற்­றது. அதன் பின்னர் 1994, 2000, 2001, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்­டு­க­ளிலும்  பாரா­ளு­மன்றத் தேர்தல்கள் நடை­பெற்­றன.  

சுதந்­தி­ரத்­துக்கு முற்­பட்ட காலம் முதல் சுதந்­தி­ரத்­துக்கு பிற்­பட்ட இந்நாள் வரை மக்கள் பிர­தி­நி­தி­களை மக்கள் மன்­றுக்கு அனுப்­பு­வ­தற்­கான 3 தெரிவு முறைமை நமது நாட்டில் பேணப்­பட்­டி­ருக்­கி­றது. அதில் 1910 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை இன­வாரிப் பிர­தி­நி­தித்­துவ முறை­மையும், 1931ஆம் ஆண்­டி­லி­ருந்து 1978ஆம் ஆண்டு காலம் வரை பிர­தே­ச­வாரி தொகுதி ரீதி­யான பிர­தி­நி­தித்­துவ தெரிவு முறை­மையும் 1978ஆம் ஆண்டு முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மக்கள் பிர­தி­நி­தி­களை பாரா­ளு­மன்­றத்துக்கு தெரிவு செய்­வ­தற்­காக விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­மையும் நடை­மு­றைப்­ ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்ற வர­லாற்றுப் பின்­ன­ணியில் 2020இல் நடை­பெ­ற­வுள்ள 9ஆவது பரா­ளு­மன்­றத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக ஆச­னங்­களைப் பெறும் என்ற எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் சாணக்­கி­யத்­துடன் பாரா­ளு­மன்ற தேர்தலை கையாள வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஏனெனில், 2020 பாரா­ளு­மன்றத் தேர்தல் அரசியல் பலத்­துக்­கான கள­மாக அமையப் போகி­றது.

ஜன­நா­யகத் தேச­மொன்றின் முது­கெ­லும்­பாக விளங்­கு­வது நீதி மன்றம்,  சட்­ட­வாக்கம் (பாரா­ளு­மன்றம்), நிர்­வா­கத்­துறை மற்றும் ஊடகம் ஆகி­ய­வை­யே. இவ்­வா­றான ஜன­நாயகக் கூறுகள் அர்த்­த­மாக்­கப்­படும்  தேச­மொன்­றி­லி­ருந்து ஒரு பிர­ஞை­ய­டையும் நன்­மை­களில் மிக முக்­கி­ய­மா­னது  மனித உரி­மை­. ஒவ்­வொரு மனி­த­னுக்கும் கிடைக்கப் பெற வேண்­டிய மற்றும் உரித்­தான அடிப்­படை உரி­மை­களும், சுதந்­தி­ரங்­களும்  மனித உரி­மை­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. மனி­தர்கள் மனி­தர்­க­ளாகப் பிறந்த கார­ணத்­தினால் அவர்­க­ளுக்குக் கிடைத்த அடிப்­ப­டை­யான விட்­டுக்­கொ­டுக்க முடி­யாத, மறுக்க இய­லாத  உரி­மை­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற உரி­மை­க­ளுக்கு அப்பால் ஒவ்­வொரு  தனி மனி­த­னுக்கும் இருக்கும் அடிப்­படை உரி­மைகள் மனித சுதந்­தி­ர­மாக, சுமுக­மாக, நல­மாக வாழ அவ­சி­ய­மான உரி­மை­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. 

மனித உரி­மைகள் என்­ப­தனுள் அடங்­கு­வ­தாகக் கரு­தப்­படும் குடிசார் மற்றும் அர­சியல் உரி­மை­களுள் வாழும் உரிமை, சுதந்­திரம், கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், சட்­டத்தின் முன் சம­நிலை. நுகர்வுச் சுதந்­திரம், பண்­பாட்டு உரிமை, உணவு உரிமை, உடை உரிமை கல்வி உரிமை என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. பொது­வாக மனித உரிமை என்­பது அடுத்­த­வர்­களை எந்­த­வொரு வகை­யிலும் பாதிக்­காத வகையில் தனது செயற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வழங்­கப்­படும் அனு­ம­தியே மனித உரி­மை­யாகும். இந்த அனு­ம­தியை சட்­ட­மாக்கும் இட­மே பாராளு­மன்­ற­ம்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை­யி­லான வாழும் காலத்தில் அவ­னால் மேற்­கொள்­ளப்­படும் அத்­தனை செயற்­பா­டு­க­ளுக்கும் உரிமை உள்ள  போதி­லும், அவ்­வு­ரி­மைகள் மற்­ற­வர்­களை எந்த வகை­யிலும் பாதிக்­காத வகையில் இருப்­பதும் அவ­சியம்.  அவை உண்­ப­வை­யாக இருந்­தா­லும், குடிப்­ப­வை­யாக இருந்­தாலும், உடுப்­ப­வை­யாக இருந்­தாலும் சரியே.

ஆனால், இலங்கைவாழ் முஸ்­லிம்கள் மேற் ­படி உரி­மை­க­ளுடன் வாழ்­வி­யலை முன்­கொண்டு செல்­வ­தற்­கான இடை­யூறு­களை அடிக்­கடி அனு­ப­விக்க நேரி­டு­வதை காண முடி­கி­றது. குறிப்­பாக முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பில் இந்த இடை­யூறுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அர­சியல் யாப்பின் பிர­காரம் இந்­நாட்டில் வாழ்கின்ற ஒவ்வோர் இனமும் ஏனைய இனங்­களின் உரி­மை­களை மீறாத வகையில் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான உரி­மைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள போதிலும்  அந்த உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்­கான தடைகள் இல்­லா­ம­லில்லை. இத்­த­டை­களைக் கையாள்வ­தற்கு அர­சியல் அதி­காரம் அவ­சி­மா­கி­றது. இந்த அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டாக அடைய முடியும். அத­னால்தான் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தலை ஒன்­றி­ணைந்து எதிர்­கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்­கப்­ப­டு­கி­றது. இந்த ஒன்­றி­ணைதல் என்­பது பெரும்­பான்மை தேசிய கட்­சி­க­ளுக்கோ அல்­லது தற்­போதைய அர­சாங்­கத்­துக்கோ பாத­க­மான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தாக உண­ராத வகையில் வடக்கு, கிழக்­கிற்கு வெளியே இணக்க அர­சியல் ஊடாக பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெறு­வ­தற்கும், வடக்கு–கிழக்கில் தனித்து நின்று பாரா­ளு­மன்ற ஆச­னங்­களைப் பெறு­வ­தற்­கு­மான சாணக்­கி­யமும் நிதா­ன­மு­மிக்க வியூகங்­க­ளாக அமை­யப்­பெ­று­வது முஸ்லிம் அர­சியல் பய­ணத்­துக்கு ஆரோக்­கி­ய­மாக அமையும் எனவும் ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கி­றது.

அதிக ஆச­னங்ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ­பா­ரா­ளு­மன்றத் தேர்தலை ஒன்­றி­ணைந்து எதிர்­நோக்க வேண்டும் என்ற இந்த அழைப்­புக்­கான பிர­தான கார­ண­மாக இருப்­பது தனித்­துவ இன­மான முஸ்­லிம்­களின்  எதிர்­கால அர­சியல் பயணம் சக்­தி­மிக்­க­தாக முன்­ந­கர்த்திச் செல்­லப்­பட்டு முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­மை­களின் குரல்கள் முஸ்­லிம்­க­ளின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்க பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளியிலும் ஒன்­றாக ஒலிக்க வேண்டும் என்­பதன் அடிப்­ப­டை யி­ல்தான். 

அர­சியல், சமூக,  பொரு­ளா­தார ரீதி­யி­லான அழுத்­தங்­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் விடு­விக்­கப்­பட்டு இந்­நாட்டில் நிம்­ம­தி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாழ வேண்டும். அவ்­வா­றான வாழ்­வுக்­கான உரி­மையை அர­சியல் அதி­கா­ரங்­க­ளி­னூ­டாக உரி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொ­டுப்­பதை இலக்­காகக் கொண்டே முஸ்லிம் சமூ­கம்சார் அர­சியல் கட்­சிகள் தோற்­று­விக்­கப்­பட்­டன. இந்­நாட்டில் இரண்டாம் நிலைச் சிறு­பான்மைச் சமூ­க­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு வாழும் இச்­ச­மூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள பல­ருக்கு சமூகம் சார்ந்த விட­யங்­களில் இறந்த காலம் எதைக் கற்­றுத்­தந்­தது. நிகழ்­காலம் எதைக் கற்­றுத்­தந்து கொண்­டி­ருக்­கி­றது. எதிர்­காலம் எதைக் கற்­றுத்­த­ரப்­போ­கி­றது,  என்­பது குறித்­தான மீள் ­வா­சிப்பு அவ­சி­ய­மா­க­வுள்­ளது. 

இந்­நி­லையில், சம­கால இன­வாதச் சூழல் தொடர்பில் சிந்­திப்­பதும் சாணக்­கி­ய­மாகச் செயற்­பட்டு இன­வா­தத்தின் பரப்­பு­ரை­க­ளையும், செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்­வதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஏனெனில், இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்­த­மா­னது, இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பா­னது நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளும், சமூ­கங்­களும் தங்­க­ளுக்­கு­ரிய உரி­மை­க­ளோடு வாழ முடியும் என்றே கூறி­யி­ருக்­கி­றது. அத­னால், சந்­ததி சந்­த­தி­யாக இந்­நாட்டில் வாழ­வி­ருக்கும் முஸ்­லிம்கள் பொரு­ளா­தா­ரத்தை மாத்­தி­ர­மின்றி அத்­தனை சமூகக்கூறு­க­ளையும் பாது­காக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் வாழ்வுப் பய­ணத்தில் தடங்­க­லா­க­வுள்ள இன­வாதச் சூழலை சாணக்­கி­யத்­துடன் வெற்­றி­கொள்­வ­தாயின் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், சிவில் அமைப்­புக்கள், உலமாப் பெருந்­த­கைகள், புத்­தி­ஜீ­விகள் என அத்­தனை தரப்­புக்­களும் ஒரே கோட்டில் பய­ணிப்­பது காலத்தின் அவ­சி­ய­ம். 

கட்சி அர­சியல் மற்றும் பத­வி­க­ளுக்­கா­கவும், பிர­தேச அதி­கா­ரங்­க­ளுக்­கா­கவும், கொள்கை கோட்­பா­டு­க­ளுக்­கா­கவும் பிரிந்து நின்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவம் காட்­டிக்­கொ­டுக்­கப்­ப­டு­மாயின்,  பிள­வுகள் தொட­ரு­மாயின் எதிர்­கால சந்­த­தி­யினர் பாரி­ய­ளவில் விலை­கொ­டுக்க வேண்டி ஏற்­படும் என்­பதை மறுக்க முடி­யாது,  பொரு­ளா­தார அழி­வு­களை மாத்­தி­ர­மின்றி பல  நெருக்­க­டி­களை எதிர்­கால சந்­ததிகள் எதிர்­நோக்க வேண்­டியும் ஏற்­படும். 

ஆதலால், முஸ்­லிம்கள் தொடர்பில் பிற சமூ­கத்­தினர் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யீனம் கலை­யப்­பட வேண்டும். அதற்­காக அத்­தனை சாத­கமான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­ம். அத்­துடன், செயற் ­பா­டு­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி, மாற்றுச் சமூ­கங்­க­ளினால்  முன்­வைக்­கப்­படும் நியா­ய­மான குற்­றச்­சாட்­டுக்கள் நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும்., குற்­ற­வா­ளிகள் புரி­கின்ற குற்­றங்­க­ளுக்கு விளக்கில் விழும் வண்­டு­க­ளாக செயற்­ப­டா­மல், சிந்­தித்து நிதா­ன­மாகச் செயற்­பட்டு சக­வாழ்­வுக்­கான வழி­களைக் கூர்­மைப்­ப­டுத்தி கடும்­போக்­கு­வா­திகள் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள காழ்ப்­பு­ணர்ச்­சியை இல்­லாமல் செய்­வதும் அவ­சி­ய­ம். அத்­துடன்,  பரம்­பரை பரம்­ப­ரை­யாக இந்­நாட்டில் வாழப்­போகும் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் இருப்பும், உரி­மை­களும் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. ஆதலால், இவற்­றிற்­கான முயற்­சிகள் சாணக்­கி­ய­மாக முன்­ந­கர்த்­தப்­பட்டு சாதிக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே கடும்­போக்­கு­வாதச் சூழ­லி­லிருந்து எதிர்­கால சமூகம்  நிம்­மதி பெறும்.

இந்­நி­லையில், அனை­வரும் ஒற்­று­மைப்­ப­டு­வதன் மூல­மாக எதிர்­வரும் தேர்தலின் பின்பல­மான சக்­தி­யாக உரு­வெ­டுக்க முடி­யு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அழைப்பு விடுத்­துள்ளார். முன்னாள்  ரா­ஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் பாரா­ளு­மன்றத் தேர்தலில் அதிக ஆச­னங்கள் பெற வேண்டும் என்ற நிலைப்­பா­டு­களை பொதுத் தளங்­களில் குறிப்­பிட்டு வரு­கி­றார்கள். அத்­துடன், முஸ்லிம் கட்­சி­களும் தமிழ்க் கட்­சி­களும் இணைந்து எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தலில் இணைந்து கள­மி­றங்க வேண்டும் என்ற அழைப்­புக்­களும் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நாட்டின் மொத்த சனத்­தொ­கையில் ஏறக்­கு­றைய 30 வீத­மா­ன­வர்கள் சிறு­பான்மை சமூ­கங்­க­ளான  தமி­ழர்­களும், முஸ்­லிம்­க­ளு­மாவர். வடக்கு, கிழக்கு மற்றும் மலை­ய­கத்­திலும் அத்­துடன் நாட்டின் ஏனைய பிராந்­தி­யங்­க­ளிலும் வாழும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் பல்­வேறு நீண்ட கால, சம­கால மற்றும் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுடன் அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.  இந்­நாட்டை மாறி, மாறி ஆண்ட அர­சாங்­கங்கள் சிறு­பான்மை சமூ­கங்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தாலும் அப்­பி­ரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. குறிப்­பாக ­நாட்டில் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை. சிறு­பான்மை மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீதான ஆதிக்கம் குறை­ய­வில்லை. 

இந்­நி­லையில், தமிழ்ப் பேசும் சமூ­கங்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் சந்­தர்ப்­பங்கள் முறை­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி ஆகிய அர­சியல் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தமக்கு வாக்­க­ளிக்கும் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களுத் தீர்வைப் பெறவும் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றவும்  சிறு­பான்மை அர­சியல் தலை­மை­களின் ஐக்­கி­யப்­பட்ட அர­சியல் நகர்வு இன்­றி­ய­மை­யா­த­து.

இந்த நகர்­வுக்­கான யோசனையை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டமொன்றில் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் முன்வைத்திருக்கின்றார். எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலை தமிழ்ப்பேசும் சமூகக் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்நோக்க வேண்டுமென்ற அவரது ஆலோசனை கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் கூடியதான முயற்சிகளை, கடந்த காலங்களில் மு.கா.தலைவர் ஹக்கீம் கடந்த காலங்களில் மேற்கொண்ட நிலையில், சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடு குறித்து முன்வைத்திருக்கும் யோசனை வரவேற்கத்தக்கது, நமது அனைத்து நடவடிக் கைகளையும் ஒற்றுமையாக ஓரணியிலிருந்து முன்னெடுப்பது சிறந்தது. அத்தோடு தேசிய ரீதியில் ஒற்றுமையான செயற்பாடுகளே வெற்றியளிக்கும். 

சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்பட வேண்டிய ஒன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்துக்கும் பொதுவான விடயங்களில் இரு சமூகத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின்  நலனை நிறைவேற்றுவதற்காக செயற்படும் மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது. 

சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான சரியான நேரம் தற்போது ஏற்பட்டிருப்பதாகவே பலரதும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்புக்காகவும், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்புக்காகவும் விடுக்கப்படுகின்ற அழைப்புக்களுக்கு விடை காணப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில் இந்த அழைப்புக்களை பெரும்பான்மை சமூக அரசியல் கட்சிகளும், மக்களும் எந்தக் கோணத்தில் நோக்கப் போகிறார்கள்? வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ், மற்றும் முஸ்லிம்கள் அவ்வழைப்பை ஏற்று எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளிப்பார்களா? இணக்க அரசியலில் தனித்துவ தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முயற்சிகள் வெற்றியளிக்குமா? இவை போன்ற கேள்விக்கான விடைகளுக்கு காலமே விடையளிக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13