இனப்பிரச்சினைக்குத் தீர்வாக  மாகாணசபைகளின்  முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட  75 பேர் அடங்கிய செனட் சபையொன்று உருவாக்கப்படவேண்டும். அந்த செனட்  சபையானது  பாராளுமன்றத்தின் எதேச்சதிகார  செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அமையவேண்டும்.  மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் உப ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று   அரசியலமைப்பு  குறித்த யோசனைகள் பெறும்  பொதுமக்கள் கருத்தறி குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

 மாகாணங்களுக்கு சிறியளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கவேண்டும் . ஆனால் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சட்டமா அதிபர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதுடன்   பொலிஸ் ஆணைக்குழுவும் ஸ்தாபிக்கப்படவேண்டும்.  காணி அதிகாரங்களைப் பகிர்வதில் தேசிய  காணி ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும்.  மாகாண ஆளுநர்கள்  ஜனாதிபதி முதலமைச்சர்களின் சம்மதத்துடன் நியமிக்கப்படவேண்டுமெனவும்  இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.  

அத்துடன் தற்போதைய  9 மாகாணசபைகளும் அவ்வாறே நீடிக்கவேண்டும்., வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அவ்வாறு    இணைப்பதற்கு   சந்தர்ப்பம் வழங்குகின்ற   உறுப்புரை 154A (3)  என்ற பிரிவு அகற்றப்படவேண்டும்.  புதிய அரசியலமைப்பில் அவ்வாறானதொரு பிரிவை உள்ளடக்கப்படக்கூடாது எனவும்   பொதுமக்களின் கருத்தறியும் நிபுணர்குழு  பரிந்துரை  செய்துள்ளது. 

நாட்டில் பலமாதங்களாக   மக்களிடையே  கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்று வந்த பொதுமக்கள் கருத்தறி குழு நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது.   340 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில்  47 தொடக்கம் 79ஆம் பக்கம் வரை  இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

அதில்  மேலும்  முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகள் வருமாறு:-

செனட் சபை 

இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் பல்வேறு வகையான யோசனைகள் எமக்கு கிடைத்தன.  அந்தவகையில்  நாங்கள்  பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். குறிப்பாக  75 பேரைக்கொண்ட  செனட் சபை உருவாக்கப்படவேண்டும்.   இதில் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள்    மற்றும் மாகாணசபைகளிலிருந்து தெரிவுசெய்யப்படும் ஆறு பிரதிநிதிகள்  இடம்பெறவேண்டும்.   இந்த மேல்சபையில் தேசிய  சிறுபான்மையினரின் மொத்த பிரதிநிதித்துவம் பெரும்பான்மை மக்கள் சமூக  பிரதிநிதித்துவத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. 

இதில்   மூன்றிலொரு தரப்பினர் பெண்களாக இருக்கவேண்டும்.  அத்துடன் சிறுபான்மை   சமூகத்திலிருந்து   உப ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படவேண்டும்.   

மாகாண சபைகள் 

நாட்டின் 9 மாகாணங்களின் முறைமை தொடரவேண்டும்.    எந்தவொரு மாகாணங்களும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படக்கூடாது.  ஆகவே  அரசியலமைப்பில்  154A  (3) ஆம் பிரிவு அகற்றப்படவேண்டும்.  (எனினும் இந்த உறுப்புரை அகற்றப்படக்கூடாது என்ற கருத்தும் நிபுணர் குழுவின்  சில அங்கத்தவர்களினால் முன்வைக்கப்பட்டது) 

மாகாணமட்டத்தில் அதிகார   பேரளிப்புக்கான   அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன்   ஒன்பது மாகாணங்கள் தொடரவேண்டும்.   மேலும் அருகருகாகவுள்ள  மாகாணங்கள் மக்கள்  கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் ஊடாக இயங்கும் வகையில்  தற்போதைய ஒன்பது மாகாணங்கள் தொடரவேண்டுமென்றும்   நிபுணர்குழுவின் ஒருசில உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஒற்றையாட்சி  

 ஒற்றையாட்சி முறைமையில்   அதிகாரங்கள்  மத்திய அரசாங்கத்திடம் இருத்தல் வேண்டும். மத்திய அரசாங்கம் அதிகாரங்களை   மாகாணங்களுக்கு கையளிக்கலாம். ஆனால்   மாகாணங்களின் சம்பந்தமில்லாமல் அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான உரிமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும்.  

மொழிசார் மாநிலம் வேண்டாம் 

மேலும்  மொழி,  இனம்,  மதம்,  அல்லது இனத்துவ அடிப்படையில்  எந்த அதிகார அளவும் உருவாக்கப்படக்கூடாது. 

ஆளுநர்கள்  

மாகாண  ஆளுநர்கள் முதலமைச்சரின் சம்மதத்துடன் ஜனாதிபதியினால்  நியமிக்கப்படவேண்டும்.ஆளுநர்  முதலமைச்சரின் ஆலோசனையுடன் செயற்படவேண்டும். மாகாணத்தால் நிறைவேற்றப்படும் சட்டமூலங்களுக்கு   ஆளுநர்  இசைவு வழங்கவேண்டுமென்ற  அவசியமில்லை.  

பொலிஸ் அதிகாரங்கள்  

 ஒவ்வொரு மாகாணத்திற்கும்  பிராந்திய வழக்குரைஞர்நாயகம்  நியமிக்கப்படல் வேண்டும்.   முழுநாட்டிற்கும்  ஒரு பொலிஸ்படையே இருக்கவேண்டும். எவ்வாறாயினும் மாகாண பொலிஸ் படை  மாகாணத்தினுள்   சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் முதலமைச்சருக்கும்  அமைச்சர்கள் சபைக்கும்  பொறுப்புள்ளதாக இருக்கவேண்டும்.  தடுப்பு, விசாரணை, மற்றும் வழக்குத் தொடரல் விடயங்களில் மாகாண பொலிஸ் படை  மாகாணத்தின் அரசியல்  செயற்பாட்டாளர்களிலிருந்து  சுயாதீனமாக கருமமாற்றுதல் வேண்டும்.  

வழக்குத் தொடுநர் நாயகம்  

இந்த விடயத்தில்  மாகாணத்திலுள்ள  வழக்குத்தொடுநர்  நாயகம்  தடுப்பு விசாரணை மற்றும்  வழக்குத் தொடுநர்நாயகம் பொறுப்பாக இருப்பார்.  

மாகாண பொலிஸ் ஆணைக்குழு 

மாகாணபொலிஸ்  ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதில் ஆளுநரால் நியமிக்கப்படும்    முதலமைச்சரின் பிரதிநிதியொருவர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படல் வேண்டும். 

தேசிய காணி ஆணைக்குழு  

காணிகள் விடயத்தில் தேசிய  காணி ஆணைக்குழு உருவாக்கப்படவேண்டும்.   தேசிய  காணி ஆணைக்குழுவானது  முதலமைச்சர்கள்,  காணி, நீர்பாசனம், மகாவலி, மற்றும் நகர்புற அபிவிருத்தி போன்றவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்கள்,   சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அரசியலமைப்பு . பேரவையில் விதத்துரைப்பின் பேரில்  ஜனாதிபதியினால்  நியமிக்கப்படும் நான்கு அங்கத்தவர்கள்  ஆகியோரை   உறுப்பினர்களாக கொண்டிருக்கவேண்டும். 

(எவ்வாறெனினும்  நிபுணர் குழுவில் உள்ள  இரண்டு உறுப்பினர்கள் மாகாணத்திலுள்ள அரசகாணிகள், மாகாணத்திலுள்ள சட்டவாக்க   மற்றும் நிறைவேற்ற சபையினால் கையளாப்படவேண்டுமென யோசனை முன்வைத்தனர். )

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கை