(ஆர்.யசி)

நல்லாட்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ரணில்-மைத்திரி ஆட்சி நல்லாட்சி அல்ல. இதுவரை காலம் இருந்த ஆட்சிகளை விடவும் மிகவும் மோசமான நிலைமைக்கு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டணி செல்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. 

கூட்டணி சேர்ந்து குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய மோசடிக்காரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். நாட்டில் நல்லாட்சி  பாதையை பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு நாட்டை சீரழிக்கும் பாதையில் கொண்டு செல்கின்றனர் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை பலப்படுத்துவோம் என்ற பிரதான காரணியை அடிப்படையாக வைத்து மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஏனெனில் நடைமுறையில் இருந்த அரசாங்கம் மோசமாக இருந்த நிலையில்  இவர்கள் நல்லிணக்கம் என்ற கதைகளை கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தனர்.  மோசமான குற்றங்கள், தவறுகள் அனைத்தும் இந்த ஆட்சியில் சரிசெய்யப்படும் என நாம் நம்பினோம். அதேபோல் கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நிலைமைகள், வறுமை என்ற நிலைமையில் இருந்து மாறும் எனவும் நம்பினோம். எனினும் இப்போது நிலைமை இருந்ததை விடவும் மோசமாகியுள்ளது. முன்னைய நிலைமையை விடவும் இருமடங்கு ஊழல் மோசடிகள் இந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இவர் தெரிவித்தார்.