தென்னிந்திய நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில் வைத்துத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் நடந்தது என்னவென சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்  டுவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார். 

நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில்  வைத்து தாக்கி விட்டதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பலரும் கருத்துத் தெரிவித்து வந்திருந்தனர். அதேவேளை, சூர்யாவுக்கு ஆதரவாக எவரும் பேசவில்லை.

இந்நிலையில், நடு வீதியில் வைத்து தன்னை அடித்ததாக நடிகர் சூர்யா மீது பிரேம்குமார் என்னும் இளைஞர் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். 

இதையடுத்து, தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதற்கிடையில் சூர்யா மீது வழக்குத் தொடுத்திருந்த பிரேம்குமார்  அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா கிருஷ்ணஸ்வாமி என்பவர்  இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். 

''என்னை அந்த இரு இளைஞர்களும் மிரட்டியபோது என்மீது கை வைக்க வேண்டாம் என்று அந்த இளைஞர்களிடம் கூறிய சூர்யாவிற்கு நன்றி. 

அந்த இளைஞர்கள் என் கார் கண்ணாடியை உடைத்து விட்டனர். இதனால் என்னுடைய பாதுகாப்புக்காக நான் கார் கதவுகளை மூடிக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் பணம் கேட்டு என்னை மிரட்டினர். அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இடையில் நான் தனியாக மாட்டிக் கொண்டேன். இதுதவிர என்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

உங்கள் காரை நிறுத்தி அந்த இளைஞர்கள் என் மீது கைவைக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதற்கு நன்றி சூர்யா.  சரியான நேரத்தில் உங்களின் தலையீடு இருந்தது'' என்று சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதற்கு நடிகர் சூர்யா ''இவ்வளவு செயல்களுக்குப் பின்னரும் என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறிய உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் அனைவருக்கும் நன்றி'' என குறித்த பெண்ணுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.