ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தமிழ்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் பாடங்கள்

Published By: Digital Desk 3

29 Nov, 2019 | 12:48 PM
image

ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே தமிழ் சமூகத்திற்குமா ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. அண்மைய கடந்த காலத்தில் இந்தத் தேர்தல்கள் தமிழர்கள் வாக்களிப்பைப் பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா என்ற விவாதங்கள் மூள்வதற்கு வழிவகுத்திருந்தன. தீவிர போக்குடைய விளிம்புநிலைக் குழுக்களே பெரும்பாலும் பகிஷ்கரிப்பை நியாயப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் ஒரு விவகாரம். தமிழர்களின் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று கூறியே பகிஷ்கரிப்பை இந்தக் குழுக்கள் நியாயப்படுத்துகின்றன. அவ்வாறு கூறியே விடுதலைப் புலிகள் 2015 ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள். அந்தத் தீர்மானம் இறுதியில் அவர்களின் அழிவுக்கே வழிவகுத்தது. தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பது ஒரு பொது விதியாக இருந்துவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் ஒரு தமிழரினால் வெற்றி பெறமுடியாது என்ற உண்மையும், தங்களுக்கு விருப்பமான தென்னிலங்கை வேட்பாளரின் வாய்ப்புக்களைப் பாதித்துவிடும் என்ற நம்பிக்கையுமே தமிழ் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானித்தமைக்குக் காரணமாகும். 2019 ஜனாதிபதித் தேர்தல்களும் இத்தகைய இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. 

வழமைபோன்றே 2019 ஜனாதிபதித் தேர்தலையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகப் பெறும்பான்மையான தமிழ் வாக்காளர்கள் அதை அலட்சியம் செய்தார்கள். பகிஷ்கரிப்பொன்றை விரும்பியவர்களுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். ஜனாதிபதித் தேர்தல்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று பொன்னம்பலம் யோசனை முன்வைத்தது இதுதான் முதற்தடவையல்ல. 

வழமைபோன்றே பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சிந்திக்கக்கூட இல்லை. அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்திற்கு வாக்களிப்பதா என்பதே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவாக மாறியது. தமிழ் வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பது பல தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரை ஒரு தெரிவாக இருக்கவில்லை. தேசிய ரீதியில் அவர் 0.09 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றார். யாழ்ப்பாண மாவட்டத்திலும் கூட அவர் 6845 வாக்குகளை மாத்திரமே (1.84 சதவீதம்) அவரால் பெறக்கூடியதாக இருந்தது. 

ராஜபக்ஷவிற்கு அல்லது பிரேமதாஸவிற்கு வாக்களிப்பது என்பதும் கூட தமிழர்களுக்கு சுலபமானதாக இருக்கவில்லை. கோத்தபாயவைப் பொறுத்தவரை தமிழருடன் பிரச்சினைக்குரிய வரலாறு ஒன்றை அவர் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திற்கு கோத்தபாயவே தலைமை தாங்கினார். அந்தப் போர் தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் மனிதாபிமான அனர்த்தமாகப் போய்விட்டது. போருக்குப் பின்னரான உடனடிக் காலகட்டமும் தமிழர்களுக்குக் கடுமையான நெருக்கடிக்கு உரியதாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள பலர் தாங்கள் திறந்த சிறைச்சாலையொன்றில் வாழ்வதாகவே உணர்ந்தார்கள். 

ஆனால் தமிழர்கள் பிரேமதாஸவை விரும்பினார்கள் என்றும் இதனை அர்த்தப்படுத்த முடியாது. தமிழர்களின் வாக்குகளைக் கவர்வதில் பிரேமதாஸவிற்கு மூன்று பிரத்யேகமான பிரச்சினைகள் இருந்தன. முதலாவது அவர் சிங்கள பௌத்த தேசியவாத மனநிலை சார்பைக் கொண்டவராவார். அது தமிழர்களை ஈர்ப்பதாக இருக்கவில்லை. அவர்கள் நடுநிலையான மனச்சார்பைக் கொண்ட ஒருவரையே விரும்பினார்கள். ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா குமாரதுங்கவும் அத்தகைய மனநிலையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இரண்டாவது மிகவும் அண்மைக்காலம் வரை பிரேமதாஸ தமிழர்களின் பிரச்சினை பற்றி பெரும்பாலும் அக்கறையற்றவராகவே இருந்துவந்தார். தமிழ் வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவர் முயற்சித்ததில்லை. அவரது செயற்பாடுகள் தெற்கை, பிரத்யேகமாக சிங்கள பௌத்த பகுதிகளை மையமாகக் கொண்டிருந்தன. தமிழ் பகுதிகளில் அவர் அரசியல் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது அபூர்வம். மூன்றாவதாக அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர். 2015 ஆம் ஆண்டில் தமிழ் வாக்காளர்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 5 வருடகாலத்தில் பரிதாபகரமாகத் தோல்விகண்டது. இறுதி நேரத்தில் யாழ்ப்பாண விமானநிலையத்தைத் திறந்தமை போன்ற செயற்பாடுகள் பல தமிழர்களினால் ஒரு அரசியல் ஜாலமாகNவு நோக்கப்பட்டது. 

எனவே பிரேமதாஸ தமிழர்களால் விரும்பப்பட்ட வேட்பாளராக இருக்கவில்லை. என்றாலும் அதிகப் பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கே வாக்களித்தார்கள். ஏனென்றால் கெடுதியான இருவரில் குறைந்தளவு கெடுதி உள்ளவராக அவர் நோக்கப்பட்டார். குறைந்தளவு கெடுதியானவராக கருதப்பட்டவருக்கே வாக்களிக்க வேண்டியிருக்கும் என்ற யதார்த்தத்தைப் பல தமிழர்களும், கூட்டமைப்பும் புரிந்துகொண்டிருந்தனர். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சில மாவட்டங்களில் பிரேமதாஸ 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 83.86 சதவீத வாக்குகளையும், வன்னி மாவட்டத்தில் 82.12 சதவீத வாக்குகளையும் அவர் பெற்றார். 

ராஜபக்ஷவிற்கு எதிரான தமிழ் வாக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலரினால் கூறப்படுவதைப்போன்று இனவாதத்தன்மையானதாக இல்லை. விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதற்கான பதிலடியாகவும் அந்த வாக்குகள் இல்லை. அது பீதியின் காரணமான வாக்குகளாகும். கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கும், அவர்களது நலன்களுக்கும் எதிராக செயற்படும் என்பதே அந்தப் பீதி. தமிழ் மக்களுடனான தனது உறவுகளை சீர்படுத்திக்கொள்வதில் புதிய ஜனாதிபதிக்கு அக்கறை இருக்குமானால் தமிழ் வாக்குகளின் தன்மையைத் தீர்மானிப்பது பீதியே என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

விக்கினேஸ்வரனின் நகர்வு ஒரு அதிர்ச்சி

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததும் வழமைபோன்றே இக்கட்டான நிலையை எதிர்நோக்கிய 5 தமிழ்க்கட்சிகள் தேர்தல் தொடர்பில் பொதுவான அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதற்கு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவையே உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட கட்சிகளாகும். 

இந்த நடவடிக்கையில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது தமிழ் மக்கள் கூட்டணியினதும், அதன் தலைவரான வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் ஈடுபாடேயாகும். மிகவும் அண்மையில்தான் விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனது கட்சியை விக்கினேஸ்வரன் ஆரம்பிப்பதற்கு கூட்டமைப்புடனான கணிசமான கொள்கை வேறுபாடுகளே காரணமாக இருந்திருக்க வேண்டும். அடிப்படையான கொள்கை வேறுபாடுகள் மாத்திரமே புதிய அரசியல் கட்சியொன்றை நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும். அவ்வாறு அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள் அவருக்க இல்லாவிட்டாலும் கூட தனது புதிய அரசியல் கட்சியை நிலைநிறுத்திவைக்கும் முகமாக மாற்றுக்கட்டமைப்பு ஒன்றை அவர் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னதாகவே தனது ஆற்றலை நிரூபிப்பதற்கு விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற மறுத்தார்.

தேர்தல் கோணத்திலிருந்து பார்க்கையில் இது தமிழ் மக்கள் கூட்டணியினால் இழைக்கப்பட்ட பாரதூரமானதொரு தவறாகும். ஒப்பேறக்கூடியதும், பயனுறுதியுடையதுமான ஒரு கட்சியாக இருக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அதன் வேறுபாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்தி, கூட்டமைப்பிற்கு ஒரு மாற்றாக ஏன் இருக்கமுடியும் என்பதற்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளின் 'கூட்டு" நீண்டகாலம் நிலைக்கவில்லை என்பதற்கு விக்கினேஸ்வரன் மீது பழியைப்போட முடியாது. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரையே ஏற்றுக்கௌ;ளும் என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுகள்

எவ்வாறிருந்தாலும் தமிழ்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்ச யோசனையை இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரித்துவிட்டனர். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட போதிலும்கூட இலங்கை தமிழரசுக்கட்சி (அல்லது மெய்யான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) புளொட் மற்றும் ரெலோவுடன் சேர்ந்து பிரேமதாஸவை ஆதரிக்கத் தீர்மானித்து அவருக்காகப் பிரசாரமும் செய்தது. இந்த இடத்தில் தான் தமிழ்க்கட்சிகள் கணிசமானளவிற்குத் தவறிழைத்ததாக நான் நம்புகின்றேன். 

முதலாவதாக தங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை (கோரிக்கைகளை) வெளிப்படையாகவே ஒரு வேட்பாளர் நிராகரித்த பின்னரும் கூட அவரை ஆதரிப்பதென்பது, பேச்சுவார்த்தைக் கருத்துக்கோணத்திலிருந்து பார்க்கையில் பெருமளவிற்குப் பிரச்சினைக்குரியதாகும். இந்த நடவடிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழர்களின் பலவீன நிலையையும் அம்பலப்படுத்தியது. தமிழர்களுக்கு தனக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு தெரிவில்லை என்பதை பிரேமதாஸ பெரும்பாலும் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சாத்தியமுள்ளது. விவேகமும், மிடுக்குமுடைய ஒரு சிறிய அரசியல் கட்சி கூட பிரேமதாஸவை வெளிப்படையாக ஆதரிப்பத்றகு முன்னதாக சில சலுகைகளை, ஒரு அடையாளபூர்வமான சலுகைகளையேனும் கேட்டுப்பெற்றிருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து கவலைப்படவில்லை. ஏனென்றால் அதன் முன்னணித் தலைவர்களில் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான செல்வாக்கின் கீழ் இருந்தார்கள். 

அடுத்த தடவை கூட்டமைப்பு பேச்சுவார்த்தை செய்யும் போது ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையாக எந்தச் சலுகையையும் கொடுக்க மறுக்கலாம். ஏனென்றால் கூட்டமைப்பு இறுதியில் சரணாகதி அடையும் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரியும். எனவே பிரேமதாஸவை ஆதரிப்பதற்குக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் தமிழ்க் கருத்துக் கோணத்தில் பார்க்கையில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. 

இரண்டாவதாக ஒரு தோல்வியடையும் வேட்பாளரை ஆதரிப்பதற்கு இந்தளவு தூரத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்திருக்கத் தேவையில்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரேமதாஸவிற்கு இல்லை என்பது எங்களில் சிலருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பதவியை பெறுவதற்காக சண்டை பிடித்ததன் மூலம் மாபெரும் தவறை பிரேமதாஸ செய்துவிட்டார் என்று நான் நம்புகின்றேன். சந்தோஷமாகத் தோற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பிய சண்டை இது. 

இருந்த போதிலும் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்க முன்னதாக நிலைவரங்கள் குறித்து ஒரு ஆய்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அதன் தலைவர்களோ செய்யவில்லை என்று நான் நம்புகின்றேன். அவர்கள் அவ்வாறு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. எனவே அவர்கள் பிரேமதாஸவை நிபந்தனையின்றி ஆதரித்தது மாத்திரமல்ல, அவருக்காகப் பிரசாரமும் செய்தார்கள். அவ்வாறு செய்ததன் மூலம் தமிழ் மக்கள் எதிர்விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையைக் கூட்டமைப்பு வரவழைத்திருக்கக்கூடும். அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தமிழ் வாக்குகளைச் சிதறடிப்பதற்குத் திட்டமிட்ட வகையிலான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுமானால் அதற்கான குற்றப்பொறுப்பின் ஒருபகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சேரவேண்டும்.

நடுநிலையாய் இருத்தல் அல்லது போட்டியிடுதல்

திறந்த மனதுடன் வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக தமிழ்க்கட்சிகள் 13 அம்ச யோசனைகளை முன்வைத்திருக்கக் கூடாது. அந்த யோசனைகள் வேட்பாளர்களை ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டன. யோசனைகளை ஏற்றுக்கொள்வது வேட்பாளர்களைப் பொறுத்தவரை ஒரு பெரும் பாரமாகப் போய்விடும். எனவே கூட்டமைப்பும், தமிழ்க் குழுக்களும் தங்களது யோசனை நிராகரிக்கப்படும் என்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். பிரேமதாஸவினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்பது தெளிவாகத் தெரியவந்தபோது தமிழர்கள் நடுநிலையாக இருக்கத் தீர்மானித்திருக்க வேண்டும். தங்களுக்குப் பொருத்தமானது என்று தமிழ் மக்கள் கருதுகின்ற விதத்தில் அவர்கள் வாக்களிப்பதற்குக் கூட்டமைப்பு அனுமதித்திருக்க வேண்டும். இதுவே பல தமிழ்க்கட்சிகளின் ஆரம்ப நிலைப்பாடாக இருந்தது. 

இதுவிடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஜனதா விமுக்தி பெரமுனவிடமிருந்து (ஜே.வி.பி) ஓரிரு பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அடுத்த தடவை பிரதான தமிழ்க்கட்சி அதன் வேட்பாளரைக் களமிறக்க வேண்டும். தேவையானால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் உடன்படிக்கைகள் சாத்தியமில்லையானால் அவர்கள் போட்டியிட வேண்டும். ஏனென்றால் இது அவர்களது தேர்தலும் ஆகும். 

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04