ஹம்பாந்தோட்டை  துறைமுக குத்தகை உடன்படிக்கையை  மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா? : பி.கே.பாலச்சந்திரன்

Published By: R. Kalaichelvan

27 Nov, 2019 | 06:30 PM
image

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

அல்லாவிட்டால் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குத்தகைக் காலத்தை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் திட்டம் குறித்து பகிரங்கமாக ஜனாதிபதி கோத்தபாய கூறியிருக்க மாட்டார் என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்திருக்கிறது. 

இந்தியாவின் பாதுகாப்பு விவகார சஞ்சிகையான பாரத் சக்தியின் பிரதம ஆசிரியர் நிதின் கோகலேவிற்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ராஜபக்ஷ 99 வருடக் குத்தகையை இலங்கை மக்கள் விரும்பவில்லை என்றும், அதனால் அதுகுறித்து தான் மீள்பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பெய்ஜிங் ஏற்கனவே அறிந்திருக்கிறது போலும். அதன் காரணத்தினால் தான் புதிய ஜனாதிபதியை முதன்முதலாகச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தவர் கொழும்பிலுள்ள சீனத்தூதுவராக இருக்கவில்லை. 

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக 2018 அக்டோபரில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சதியென்று வர்ணிக்கப்பட்ட அரசியல் மாற்றத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட போது அவரை முதலில் சந்தித்து தனது வாழ்த்துக்களை சீனத்தூதுவர் கூறியிருந்தார்.

இந்தியா உட்பட ஏனைய நாடுகள் அந்தச் சதி முயற்சியை ஏற்றுக்கொள்ளாத அதேவேளை, சீனா மறைமுகமாக அங்கீகரித்தது. 

அண்மையில் ஜனாதிபிதத் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்ற பிறகு முதன்முதலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே வாழ்த்தினார். ஒரு அதிவிசேட நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் அதன் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை கொழும்பிற்கு அனுப்பி கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்க வைத்தது. கோத்தபாயவிற்கான பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி நல்லார்வம் மிக்கதாக இருந்த அதேவேளை, சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் செய்தி சற்று விளக்கமானதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அலுவல்களுடன் சம்பந்தப்பட்டதாகவுமே இருந்தது. 

'எமது இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டிற்கு நான் பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றேன். எமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றேன்.

மண்டலமும், பாதையும் செயற்திட்டத்தின் கட்டமைப்பிற்கு எமது நடைமுறைச் சாத்திய ஒத்துழைப்பை ஆழமாக்கவும், எமது அபிவிருத்தி இலக்கை நோக்கிப் பயணிக்கவும் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றேன். சீன - இலங்கை கேந்திர முக்கியத்துவ ஒத்தழைப்புக் கூட்டுப்பங்காண்மையில் புதியதொரு சகாப்தத்தை ஆரம்பித்து, எமது இரு மக்களுக்கும் கூடுதலானளவிற்குப் பயனுறுதியுடைய நன்மைகளைக் கொண்டுவருவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றேன்" என்று சீன ஜனாதிபதி அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 

'பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தல்", 'அபிவிருத்தி நோக்குகளைச் சாதித்தல்", 'மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் நடைமுறைச் சாத்திய ஒத்துழைப்பை ஆழமாக்குதல்" என்ற குறிப்புக்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கதியுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கின்றன போல் தெரிகிறது. அந்தத் துறைமுகம் சீன ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவரது பெருவிருப்பிற்குரிய மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் பராதீனப்படுத்த முடியாத ஒரு அங்கமாகும். 

முன்னைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நட்டத்தில் இயங்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை 112 கோடி அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவிற்கு சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான சீனா மேர்சன்ட்ஸ் போர்ட்ஸ் ஹோல்டிங் (சி.எம்.போர்ட்) கம்பனிக்கு 99 வருடக் குத்தகைக்கு வழங்கியது.

அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபைக்கும், சிம்.ஏ.போர்ட் கம்பனிக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகவே செயற்படுகின்றது. சீனக் கம்பனிக்கு 80 சதவீதமான பங்கும், துறைமுகங்கள் அதிகாரசபைக்கு 20 சதவீதமான பங்கும் இருக்கிறது. இன்னொரு கணிப்பீட்டின்படி சீனக் கம்பனிக்கு 85 சதவீதமும், துறைமுகங்கள் அதிகாரசபைக்கு 15 சதவீதமும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் துறைமுகம் முற்றிலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கானதேயன்றி இராணுவ நோக்கிலானது அல்ல. துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றிலும் இலங்கையின் கடற்படையின் பொறுப்பிலேயே இருக்கும். 

வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்குப் பணம் அவசரமாகத் தேவைப்பட்டமைக்கு வழமைக்கு மாறாக நீண்டகால குத்தகைக்கு துறைமுகம் கொடுக்கப்பட்டமைக்கான காரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் திடீர் தேசிய மயமாக்கலுக்கு எதிரான அல்லது 2015 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதைப் போன்ற நிலைமைகளுக்கு எதிராக ஒரு உத்தரவாதமாகவே 99 வருடக் குத்தகையை சீனா விரும்பியிருக்கக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. 

முன்னர் இருதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுச் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையொன்றை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த சீனா இணங்குமா என்பது இப்போது எழுகின்ற ஒரு முக்கியமான கேள்வியாகும். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது என்று புதுடில்லிக்கு கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவாதம் அளித்த பிற்பாடே அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை குறித்து மீளப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கை இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிளம்பியிருக்கிறது. இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியா நோக்கி சாய்கிறது என்று சீனா உணர்வதற்கு இது வழிவகுக்கக்கூடும். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரின் ஆயுத விநியோகம் வழங்கி, முழுமையாக ஆதரித்த ஒரே நாடு சீனா என்ற காரணத்தினால் தங்களை இலங்கை அரசாங்கம் இப்போது கைவிடுவதாக பெய்ஜிங் உணரக்கூடும்.

குத்தகைக் காலத்தைக் குறைக்க விரும்புவதற்கு இலங்கைக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன என்றும், அதனால் மீளாய்வு சாத்தியம் என்றும் மிக அண்மைக்காலத்தில் பயிற்சிப் பட்டறைகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்ற சீனர்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நெருக்கமான முக்கியஸ்தர்கள் சிலர் கூறியதாகவும் தெரியவருகின்றது. 

குத்தகைக் காலத்தைக் குறைக்காவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் குத்தகைக் காலத்தைக் குறைப்பதற்குச் சீனாவை இணங்கச் செய்யமுடியுமாக இருக்கமென்று கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. 

'சீனா இப்பொழுது உலகலாவிய ரீதியில் ஒரு கடன்பொறி இராஜதந்திரத்தை முன்னெடுக்கின்ற ஒரு நாடாக நோக்கப்படுகின்றது. அதில் உயர்ந்த வட்டி வீதங்களைக் கொண்ட சீன நிதியைப் பயன்படுத்தி பெருஞ்செலவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சீனாவின் கடன்பொறி இராஜதந்திரத்திற்கு இரையாக விழுந்ததன் விளைவுகளுக்கு ஒரு உதாரணமாக செயற்திறன் குறைந்த அம்பாந்தோட்டை துறைமுகம் உலகம் பூராகவும் உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானின் குவோடார் துறைமுகம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டது. இப்போது அம்பாந்தோட்டைத் துறைமுகமே உதாரணமாகக் காட்டப்படுகின்றது" என்று ஒரு வட்டாரம் விளக்கிக்கூறியது. 

'அவ்வாறு ஒரு எதிர்மறையான உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகம் காட்டப்படுவது பொதுவான சுபீட்சத்தில் மாத்திரம் அக்கறை கொண்ட சுயநலமற்ற முறையில் உலக நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுகின்ற ஒரு நாடு என்ற சீனாவின் தோற்றப்பாட்டிற்குப் பாதகமாக அமைகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை தொடர்பான உடன்படிக்கையில் செய்யப்படக்கூடிய எந்தவொரு திருத்தமும் சீனா மீதான கறையை அகற்றி, உலகில் அதன் பிரதிமையைப் பெருமளவிற்கு மேம்படுத்தும்" என்றும் அந்த வட்டாரம் கூறியது. 

மலேசியா, மியன்மார் மற்றும் பாக்கிஸ்தானில் கிளம்பிய எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அந்த நாடுகளின் அரசாங்கங்களுடன் ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வதற்குச் சீனா இணங்கிய அண்மைய உதாரணங்களையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04