நாங்கள் மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராக வந்துள்ளோம். ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அதனை நினைவுறுத்த வேண்டிய நிலைமை எங்களுக்கு இருக்கின்றது. அதனை அவர்கள் நினைவு கூர்ந்து செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் ,  இன்று சிலர் இதனை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு விளங்காத காரணத்தினால் எனக்கு எதிரான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு  30 வருட அரசியல் அனுபவம் இருந்தும் இதைப் பற்றி இன்னும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை பறித்தெடுக்க வேண்டியது எமக்கிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.

 மாகாண சபையின் ஆட்சிக்கு நாங்கள் வந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களும் 25 நாட்களுமாகின்றன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நான் வந்ததிலிருந்து இரண்டு விடயங்களை அடிக்கடி கூறி வருகின்றேன்.

13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் வழங்கப்படல்  மற்றும் அரசியல் அதிகார பகிர்வு இவ்விரண்டையும் நான் கூறி வருகின்றேன்.

சிறுபான்மை சமூகத்துக்கான அரசியல் விடுதலைப் போராட்டத்தில் இந்த நாடு நடந்து கொண்ட தவறுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அரசியல் உரிமை அரசியல் அதிகார பகிர்வுக்கு குரல் கொடுத்து அதை நிலை நிறுத்த வேண்டிய நிலைப்பாடு கிழக்கு மாகாண முதலமைச்சரான எனக்கு இருக்கின்றது என்றார்.