முதலீடுகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், கொள்கைகள் அவசியம்

Published By: Daya

21 Nov, 2019 | 11:39 AM
image

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டின்  எட்டாவது ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  புதிய ஜனாதிபதியாக கோத்தாபய  ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.  

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதிக்கு தமது மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர்.  இந்நிலையில் புதிய  ஜனாதிபதி மற்றும் அவர்  தலைமையில்  அமையவுள்ள புதிய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம்  தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.   மிகவும் முக்கியமாக வடக்கு– கிழக்கு  மாகாணங்களில்   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முதன்மையாக  முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன.

தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதார குறிகாட்டிகள்  முற்றுமுழுதாக ஆரோக்கிய மானதாக இல்லை. 2018ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 3.2 வீதமாக பதிவாகியது. அதேபோன்று  2017ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது 3.4 வீதமாக பதிவாகியது. கடந்த  2016 ஆம் ஆண்டில் 4.5 வீதமாக பதிவாகியது.

எனவே இவ்வாறு  நிலைமையை பார்க்கும்போது  கடந்த சில வருடங்களாக  நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் குறைவானதாகவே பதிவாகியுள்ளது.  

அதேபோன்று   நாட்டில் தற்போதைய சூழலில்  வறுமை வீதமும வேலையின்மை வீதமும்  சராசரியாக  4 வீதமாக காணப்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  வறுமை வீதமும்  வேலையின்மை வீதமும்  மிகவும் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதனால் அப்பகுதிகளில் புதிய  தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி  தொழிலின்மையை குறைக்கவும்   மக்களின் வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைக்கவும்   நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதேவேளை பொதுவாக நாடளாவிய ரீதியிலும் வறுமையையும் வேலையின்மையையும் குறைக்க வேலைத்திட்டங்கள் அவசியமாகும்.  

அதற்காக  புதிய  முதலீடுகள்   வடக்கு கிழக்கில்  முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.  முதலீடு எனும்போது  உள்நாட்டு மற்றும்  வெ ளிநாட்டு முதலீடுகள்  நாட்டுக்கு தேவைப்படுகின்றன.

காரணம்  நாட்டில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கவும் வறுமையை குறைக்கவும்  முதலீடுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.  முதலீடுகளை பொறுத்தவரையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலம்   நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவடைகின்றது.

இது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த   முன்னாள் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பஷில் ராஜபக் ஷ   வருடாந்தம்  5 பில்லியன் டொலர் முதலீடுகள் இலங்கையில் செய்யப்படுவதன் ஊடாகவே நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

காரணம் அவ்வாறு அதிகரித்த முதலீடுகளை செய்வதன் ஊடாகவே  பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும்.  கடந்த 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2136 மில்லியன் டொலர் முதலீடுகள் கிடைத்துள்ளன. வருடம் ஒன்றில் கிடைக்கப்பெற்ற மிக அதிகளவான  முதலீட்டுத்  தொகையாக இதனை பார்க்க முடியும்.

எனினும் கடந்த சில வருடங்களாகவே  இலங்கைக்கான  வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பார்க்கும்போது அவை   திருப்திகரமானதாக இல்லை என்றே கூறவேண்டும்.

இவ்வருடத்தில் இதுவரை  500 மில்லியன்  டொலர்களே இலங்கைக்கு முதலீடாக கிடைத்துள்ளன.  இது  ஆரோக்கியமானதல்ல.  வருடம் ஒன்றுக்கு  5 பில்லியன்  டொலர் தேவைப்படுகின்ற நிலையில்  2019 ஆம் ஆண்டில் இதுவரை  கிடைத்துள்ள முதலீடு திருப்திகரமானதாக  இல்லை.

கடந்த ஏப்ரல்  மாதம் நாட்டில்  இடம்பெற்ற  குண்டு தாக்குதல்கள்  இலங்கைக்கான  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைவடைவதற்கான  முக்கிய காரணமாகவுள்ளன.   முதலீட்டுத் துறையும் சுற்றுலாத்துறையும்  இந்த தாக்குதல்கள் காரணமாக  கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது சுற்றுலாத்துறை மீண்டு வருகின்றபோதிலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்   இன்னும் குறைவாகவே உள்ளன.  

முக்கியமாக நாட்டில்   அரசியல் ஸ்திரத்தன்மையும்  பாதுகாப்பான சூழலும்  நிலவும்போதுதான் வெ ளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும்.   அதனூடாக    தொழில்வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ள முடியும்  என்பதுடன்  வறுமையை குறைக்கலாம். அரசாங்கத்தின் வருமானமும் அதிகரிப்பதுடன் மொத்தத்  தேசிய உற்பத்தியும்  உயரும்.

எனவே  வெளிநாட்டு நேரடி  முதலீட்டுத்துறையை  பலப்படுத்துவதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இவ்வருடத்தில்        வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைவடைவதற்கு   இடமளிக்கக்கூடாது. உடனடியாக இது  தொடர்பில் ஆராய்ந்து முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தவேண்டும்.  இந்த விடயத்தில்  புதிய ஜனாதிபதியும்    மலரப்போகின்ற புதிய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வெறுமனே மொத்தத்  தேசிய உற்பத்தியை அதிகரிப்பது  மட்டும் பொருளாதார அபிவிருத்தி ஆகிவிடாது. மாறாக   மொத்தத் தேசிய உற்பத்தியுடன் வறுமை, வேலையின்மை என்பன குறைவடைவதுடன்  சமத்துவமின்மையும் குறையவேண்டும். ஏற்றுமதி அதிகரிப்பதுடன் இறக்குமதி குறைவது அவசியம். ஏற்றுமதியை நோக்கிய உற்பத்தி வளர்ச்சியடைவது முக்கியமாகும்.  அதனூடாகவே   உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வறுமையும் வேலையின்மையும்  கோரத்தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் பின்னர் இன்னும் அங்கு  பொருளாதார வளர்ச்சி நல்ல நிலைக்கு வரவில்லை. எனவே அப்பகுதிகளில் வறுமையையும் வேலையின்மையையும்  ஒழித்து  அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு    பொருளாதார ரீதியில் வலுவூட்டவேண்டும். அந்த நிலைமையை ஏற்படுத்த  அங்கு அதிகளவில்  முதலீடுகள் உள்வாங்கப்படவேண்டும். அதற்கேற்ற சூழல் உருவாக்கப்படவேண்டும்.   புதிய அரசாங்கம்  வடக்கு–கிழக்கு நிலை குறித்தும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.

அதனால்  பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எந்தளவு தூரம் முக்கியம் என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.  

2016ஆம் ஆண்டில் 1079 மில்லியன் டொலர்களும் 2015ஆம் ஆண்டில் 1160 மில்லியன் டொலர்களும்  முதலீடுகளாக கிடைத்துள்ளன.  2012ஆம், 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளில் சற்று அதிகரித்த  வெளிநாட்டு முதலீடுகள்  காணப்படுகின்றன.  அந்த ஆண்டுகளில் முறையே  1382, 1437, 1635  மில்லியன் டொலர்கள்   முதலீடுகளாக   கிடைத்துள்ளன.   இதன்மூலம்  வருடா வருடம்  வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து சென்றாலும்   தேவையான அளவுக்கு கிடைக்காமல் உள்ளன என்பதே உண்மையாகும்.  

முதலீடுகளை பொறுத்தவரையில் பாதுகாப்பு காரணிக்கு அப்பாலும்  சில  விடயங்கள்  குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்.  இலங்கையில்  வெளிநாட்டு முதலீட்டாளர்கள்   எதிர்கொள்ளும்   முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக  சட்டரீதியாக  அனுமதி பெறும் விவகாரம் காணப்படுகின்றது.  எனவே  அந்த விடயம் குறித்தும்  அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.  

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததன் பின்னர்  நாட்டில்  வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் திருப்திகரமாக இல்லை.   எனவே  அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான  பொறுப்பு  புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் காணப்படுகின்றது.  குறிப்பாக  வடக்கு–கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  வறுமை வேலையின்மையை  போக்க  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.   அத்துடன் ஏற்றுமதி வருமானத்தை  அதிகரித்து இறக்குமதி செலவை குறைக்கவும்  திட்டங்கள் அவசியமாகும்.  அதனால்  நாட்டின் தற்போதைய  பொருளாதார நெருக்கடிகள் குறித்து   பொருத்தமான ஆய்வுகளை  முன்னெடுத்து பொருளாதாரத்தை பலப்படுத்த  புதிய ஆட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பது இன்றியமையாதது.

- ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57