பழம் பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை நாக் அஷ்வின் என்பவர் திரைப்படமாக எடுக்கவுள்ளார். இவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

1952ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த நடிகை சாவித்திரி தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிதிரைப் படங்களில் நடித்துள்ளார். 1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. திலகம் பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருந்த சாவித்ரி நடிப்பில் அசத்தியமையால் அவர் நடிகையர் திலகம் எனும் பட்டம் பெற்றார்.

முன்னணி நடிகையாக இருந்த சாவித்ரி காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். சென்னையில் நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டிய முதல் நடிகை இவராவார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார்.

நாக் அஷ்வின் என்பவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படமாக்குகிறார். திரைக்கதை எழுதும் வேலையை முடித்துள்ள அஷ்வின், ''இந்த திரைப்படம் இந்திய சினிமா கண்டிறாத திரைப்படமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.