மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டபகுதியில் இன்று விடியற் காலை 07 மணியளவில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அனர்த்ததினால் 47 குடும்பங்களை  சேர்ந்த 200 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

எனவே, இடம்பெயர்ந்துள்ள மக்கள் தோட்டத்திலுள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கபட்டுள்ளனர்.

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

இன்றைய தினமும் பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் திகாம்பரம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை, குறித்த தோட்டத்திற்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காட்மோர் கல்கந்த தோட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்ட போதிலும் குறித்த மக்கள் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 03 மாதங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கபட்டமை குறிப்பிடதக்கது.

இம்முறையாவது எங்களுக்கு சம்பந்தபட்ட அதிகாரிகளின் மூலம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென காட்மோர் கல்கந்த தோட்டமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- பொகவந்தலாவ நிருபர்