(ப.பன்னீர்செல்வம்)

கச்சத்தீவில் பாதுகாப்பு கண்கானிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயம் புனர் நிர்மாணப் பணிகளே மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை அரசு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தமது வலைகளை காயவைப்பதற்கும், படகுகளை திருத்திக் கொள்வதற்கும் 1976 இல் கச்சத்தீவு உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தை புனரமைத்து விஸ்தரிக்கும் பணிகள் அண்மையில் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டது. 

இது தொடர்பில் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவை கண்கானிப்பதற்கான மையமொன்று கச்சத்தீவில் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இந்திய மத்திய அரச இலங்கைக்கான இந்திய உயர்தானிகள் சிலரிடம் இவ்விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்திருப்பதாகவும், இதற்கமைய இந்திய உயர் ஸ்தானிகள் வழங்கிய அறிக்கையில் கச்சத்தீவில் பாதுகாப்பு கண்கானிப்பு மையம் அமைக்கப்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெ ளியுறவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

இந் நிலையில் கச்சத்தீவு தொடர்பான உடன்படிக்கை தொடர்பில் தெ ளிவுபடுத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, 

இந்திராகாந்தி- ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்கு இடையே 1975 இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. பின்னர் 1976 ஆம் ஆண்டில் இவ் உடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதற்கமைய கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தமது வலைகளை காயவைப்பதற்கும், படகுகளை திருத்திக் கொள்ளவும இளைப்பாறவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க முடியம் என அத் திருத்தத்தில் குறிப்பிடவில்லை என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.