விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . 

கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில்,

கோலி ஸ்ட்ரெயிட் பேட் முறையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடுகிறார். ஏனோ தானோவென்று துடுப்பெடுத்தாடாது நுணுக்கமான ஷொட்டுகள் மூலம் கோலி ஓட்டங்களை குவித்து வருகிறார்.

கோலியிடம் விசேட திறமை உள்ளதை மறுக்க முடியாது. தனது ஆட்டத்திறமையை வளர்க்க கோலி நிறையவே முயற்சிகள் செய்துவருகிறார். 

இதேவேளை, ஆட்டத்தின் மீதான அவரது ஈடுபாடு மற்றும் பிரமிப்பு பிரமிக்க வைக்கிறது.

பல்வேறு வகையான ஆட்டங்களிலும் அவர் ஓட்டக்குவிப்பை தொடருகிறார். ஆனால் தனது துடுப்பாட்ட நுணுக்கங்களை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முக்கியமாக, கோலி, மனதளவில் மிகவும் பலமானவர். நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடுகிறார் என சச்சின் டெண்டுல்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில, சச்சினுடன் தன்னை ஒப்பிடுவது தர்ம சங்கடமாக இருப்தாகவும் களத்தில் கோலியாகவே ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாகவும், சச்சினை மனதில் நிறுத்தி ஆடுவது தனது இயல்பான ஆட்டத்தை பாதித்துவிடும் என கோலி ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.