நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா போகீல் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது கெட்டபுலா பாரண்டா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இத்தோட்டத்தில் 18ம் இலக்க குடியிருப்பு தொகுதியின் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய நிலை காணப்படுவதாகவும், ஏற்கனவே பாரியலவிலான கற்பாறைகள் அப்பகுதியை நோக்கி வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இவர்களில் 19 சிறுவர்களும், குழந்தைகளும் அடங்குகின்றனர்.

இவர்களுக்கு நிவாரண உதவிகள் பலராலும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் தங்கி இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதோடு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேலும் அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவிற்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட இவர்கள் அங்கலாகின்றனர்.

தங்களை தற்காலிகமாக இடம்பெயர செய்திருந்தாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீடுகளை அமைத்து கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிகின்றனர்.

(க.கிஷாந்தன்)