தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்

Published By: Robert

25 May, 2016 | 02:30 PM
image

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. இதனால் தமிழ் முற்போக்கு முன்னணியினர் நாளை திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி காலாவதியாகியிருந்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி ஒருவருடமும் 2 மாதங்களும் ஆகின்றபோதிலும் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா கூட சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இயற்கை அனர்த்தம் ஒரு பக்கம் அவர்களை வாட்டிவருகின்றது. மறுபக்கம் விலைவாசி ஏற்றம் அவர்களை படாத பாடுபடுத்துகின்றது. இந்த நிலையில் விலைவாசிக்கு ஏற்ற சம்பள உயர்வு இன்மையினால் அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்த விடயம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தன. 7 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் இணக்கம் தெரிவிக்கவேயில்லை.

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழச்சியடைந்துள்ளதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பள அதிகரிப்பு விவகாரமானது இழுபறி நிலைக்கு சென்றிருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றிருந்தது. இந்தத் தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் இதனை பெற்றுக்கொடுப்போம் என்றும் மலையகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் உறுதிவழங்கியிருந்தன.

தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது சம்பள உயர்வு விடயம் தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிய மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தன. இதனால் தேர்தலின் பின்னர் தமக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னரும் சம்பள உயர்வு என்பது வெறும் கானல்நீராக மாறியிருக்கின்றது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் விரக்திநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் மறுப்பு தெரிவித்ததையடுத்து தொழிலமைச்சர் ஜோன் செனவிரட்ணவின் தலைமையில் தொழிற்சங்கத்தினரும் முதலாளிமார் சம்மேளனத்தினரும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதிலும் எந்தவித இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை. அரசாங்கம் இருதரப்பையும் இணங்கச்செய்வதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சியும் தோல்வியடைந்திருந்தது.

இதனையடுத்து கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் தனியார்துறையினருக்கு வழங்கப்படவேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டுமென்று அரசாங்கம் அறிவித்திருந்தது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இதற்கான பரிந்துரையைச் செய்ததுடன் இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

ஆனாலும் 2500 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாத சம்பளத்துடன் இந்தத் தொகை அதிகரிக்கப்படவேண்டுமென்றும் இல்லையேல் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியநிலை ஏற்படும் என்றும் தொழில் அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்த ஏப்ரல் மாத சம்பளத்துடனாவது 2500 ரூபா அதிகரிப்பு சேர்க்கப்படுமென்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

இந்தப் பின்னணியில் கடந்த 10 ஆம் திகதிக்குள் இந்த சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்றும், இல்லையேல் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு முன்ணணியினர் அறிவித்திருந்தனர். கடந்த மே தினத்தன்று தலவாக்களையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய முன்ணணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உபதலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், ஆகியோர் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் வழங்கிய காலக்கெடுவும் தற்போது முடிவடைந்திருக்கின்றது. இதனாலேயே இன்றைய தினம் தொழிற்சங்க ரீதியிலான போராட்டத்தை தமிழ் முற்போக்கு முன்னணியினர் ஆரம்பிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம் ஆகியோருக்கும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அபிவிருத்தி உபாய முறைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஆகியோருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தே முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டபின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் மாறாக தொழிலாளர்களுக்கு தோட்டங்கள் தோறும் 2 ஏக்கர் நிலமளவில் வழங்கி அதில் உப பயிர்ச்செய்கைகளை தொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு வசதி செய்வதாகவும் இதன் மூலம் தோட்டத்தொழிலாளர்கள் வருவாயை தேட முடியும் என்று முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனை முன்வைத்ததாகவும், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார்.

முதலாளிமார் சம்மேளனத்தினரின் இந்த யோசனையை சாதகமாக பரிசீலிக்க முடியும் என்றும் ஆனால் முதலில் இடைக்கால நிவாரணமாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சாதகமான பதில் கிடைக்காமையினால் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது என்று தமிழ் முற்போக்கு முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.

உண்மையிலேயே 1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தற்போதைய நிலையில் சாத்தியப்படாத ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்குக்கூட தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் பின்னடிப்பதும் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது நழுவல்போக்கை கடைப்பிடிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நா .ௌான்றுக்கு 100 ரூபா வீதம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அழுத்தங்களை மலையக அரசியல் தலைமைகளும் தொழில்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து வழங்கவேண்டும். முதலில் தற்காலிக நிவாரணமாக இந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிக்கவேண்டும். இதனைவிடுத்து அரசியல் போட்டா போட்டிகளில் அரசியல் தலைமைகள் ஈடுபடுமானால் இறுதியில் பாதிக்கப்படப்போவது மலையக தோட்டத் தொழிலாளர்களேயன்றி வேறு யாருமில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04