நிராகரிப்பும் நிர்க்கதியும்

Published By: Daya

23 Oct, 2019 | 11:54 AM
image

மக்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே ஜனநாயகம். சாதாரண நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த உரித்து, தேர்தல் காலத்தில் இன்னும் அதிக வலிமையைக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் அதற்கு முன்னுரிமை அளித்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான தேவை அங்கு நிலவுகின்றது. எனவே, அதற்கு இடமளித்துச் செயற்படுவதே தேர்தல் காலத்தின் உண்மையான ஜனநாயக நடவடிக்கையாகும்.

ஆனால், நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலங்கையில் அந்த ஜனநாயகப் பண்பு குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அத்தகைய கருத்துச் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கப்படுகின்ற ஒரு நிலைமை உருவாகி இருப்பதே இதற்குக் காரணம். சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுகின்ற உரிமையில் பெரும்பான்மை சக்தியைக் கொண்டிருப்பவர்கள் கை வைப்பது ஜனநாயகமாகாது. ஆனால் ஜனநாயகம் கோலோச்சுகின்ற இலங்கையில் காலம் காலமாக பெரும்பான்மை சக்தியைக் கொண்டிருப்பவர்களே மேலாதிக்கம் கொண்டவர்களாகச் செயற்படுகின்ற ஒரு போக்கு நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஜனநாயக வழிமுறையிலான முயற்சிகள் தோல்வி கண்ட நிலையில் ஆயுத மோதல் வழிமுறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நிர்ப்பந்தம் உருவாகியது. இதன் காரணமாகவே 30 வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. ஆயுத முரண்பாட்டையும்கூட பேச்சுவார்த்தை வழிமுறையில் அல்லாமல், அதீத இராணுவ வலிமையைப் பயன்படுத்தியே ஆட்சியாளர்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த அதீத இராணுவ பலப்பிரயோகமே போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு வழி வகுத்திருந்தது. இதன் காரணமாகத்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப் புக் கூற வேண்டிய கடப்பாட்டுக்கு அரசு மீள முடியாத நிலையில் சிக்கித் தவிக்க நேர்ந்துள்ளது.

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற அரசியல் போக்கு

யுத்தத்துக்கு முடிவு கண்ட ஆட்சியாளர்கள் சமாதான வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அதற்காக இதயசுத்தியுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் யுத்தநிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதற்காக நோர்வேயின் அனுசரணையும் பெறப்பட்டிருந்தது என்பது வரலாறு.

ஆனால் யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற  காலச்சூழலில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகவில்லை. மாறாக, ஜனநாயகத்துக்கு முரணான வகையில் சிறுபான்மை இன மக்களுக்குப் பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை என ஆட்சியாளர்கள் மறுத்துரைத்தனர்.

யுத்த மோதல்கள் காரணமாக அழிவடைந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்புகின்ற நடவடிக்கையையே அபிவிருத்தி என திரித்துக்காட்டி, பொருளாதாரப் பிரச்சினையே நாட்டில் பொதுவாக உள்ளது. அதற்கே தீர்வு காண வேண்டியுள்ளது எனக் கூறி நிலைமைகளைத் திசை திருப்புகின்ற கைங்கரியத்தையே ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளனர்.

யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்களில் வாழ்க்கைக்கான அடிப்படை அத்தியாவசிய கட்டமைப்புக்களை அபிவிருத்தி என்று வரையறுக்க முடியாது. அழிவுற்ற பிரதேசங்களில் மக்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டியது கட்டாயத்தேவை. அதனை அபிவிருத்தி என வரையறுக்க முடியாது. அவ்வாறு வரையறுப்பது அரசியல் ரீதியான ஏமாற்று வேலையே அன்றி வேறொன்றில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான கடந்த 10 வருட காலத்தில் இந்த ஏமாற்று அரசியலையே ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

அழிந்துபோன கட்டமைப்புக்களை உருவாக்கி யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னுமே பூர்த்தி செய்யப்படவில்லை. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுகின்ற நடவடிக்கையைக்கூட, கடந்த 10 ஆண்டுகளில் அரசுகளினால் பூரணப்படுத்த முடியவில்லை.  

யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற போக்கில் இராணுவ மயப்படுத்தி பேரினவாதத்தை நிலைபெறச் செய்வதற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையே பல்வேறு வடிவங்களில் அரசுகள் மேற்கொண்டிருக்கின்றன.

அரச இயந்திரமாகிய இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு, பௌத்தர்கள் எவரும் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பது, விகாரைகளைக் கட்டுவது, தமிழர் பிரதேசங்களுக்கே உரித்தான புராதன சின்னங்களை பௌத்த சின்னங்களாக உரிமைகோரி, இராணுவ பாதுகாப்புடன் அங்கு பௌத்த மத அடையாளங்களைப் புதிதாக நிறுவுவது. பௌத்த வழிபாட்டு வசதிகளை ஏற்படுத்துவது, இனவிகிதாசாரம் என்ற போர்வையில் கல்வி, தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பொதுவசதிகளில் பெரும்பான்மை இன மக்களுக்கு அதிக இட ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்பது போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் சிறுபான்மை இன தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம்பிக்கையளிக்காத தேர்தல்

இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த மக்கள் வரலாற்று ரீதியான தமது பிரதேசங்களில் உரிமையோடும், சுதந்திரமாகவும் மீள்குடியேறி வாழ்க்கை நடத்த முடியாத அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் முடிவின்றி தொடர்கின்ற ஓர் அரசியல் சூழலுக்குள் அவர்கள் வலிந்து தள்ளப்பட்டுள்ளார்கள்.  

யுத்தத்தில் வெற்றிகொண்டு, இராணுவ வெற்றி வாதத்தில் திளைத்திருந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மட்டுமல்லாமல், நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கமும் இந்த ஆக்கிரமிப்பு ஆட்சி முறையையே பின்பற்றிச் செயற்பட்டிருந்தது. இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும், அமைதி ஏற்படும், தமது வாழ்க்கையில் விடிவேற்படும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினார்கள்.

இத்தகைய பின்புலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலும்கூட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. இது கவலைக்குரியது. சோகமானது. தேர்தலில் குதித்துள்ள பிரதான வேட்பாளர்களும், அவர்களைக் களமிறக்கியுள்ள பிரதான அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உளப்பூர்வமாக அணுகுவதற்குத் தயாராக இல்லை. அவற்றை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் அவர்களது கட்சிகளைச் சார்ந்தவர்களும்  தேர்தலுக்குப் பின்னர் தாங்கள் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பதை தேர்தல் கால வாக்குறுதிகளாக மக்கள் மத்தியில் முன்வைப்பது வழக்கம். இது தேர்தல் கால நடைமுறை.

அதேபோன்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும், தங்களுடைய தேவைகள் என்ன என்பனவற்றை வெளிப்படுத்தி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதும் வழமை. இது தேர்தல் காலத்தில் இருதரப்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயச் செயற்பாடு என்றே கூற வேண்டும். ஆனால் இதற்கு முரணான வகையில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் செவிசாய்க்காத போக்கையே கடைப்பிடித்துள்ளார்கள்.

செவிசாய்க்காதது மட்டுமல்ல. அவர்களுடைய கோரிக்கைகளும் வேண்டுதல்களும் ஏற்க முடியாதவை. நாட்டின் இறைமைக்கு விரோதமானவை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் மீது சுமத்தியுள்ளார்கள். இந்த நிலைமை மிக மோசமானது, பாரதூரமானது.

நிபந்தனைகளை ஏற்க முடியாது பேச்சுவார்த்தையும் கிடையாது

யுத்த மோதல்களுக்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் நீண்டகால அரசியல் தேவையாகும். அரசியல் தீர்வு காணப்படாத காரணத்தினால் இனப்பிரச்சினை பல்வேறு பரிமாணங்களில் விசுவரூபமெடுத்து நாட்டின் முன்னேற்றத்தைப் பாதித்துள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லை. நல்லுறவு கிடையாது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் நாட்டில் அமைதி நிலவியபோதிலும், உண்மையான அமைதியும் சமாதானமும் நாட்டு மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன. இனங்களுக்கிடையிலான பகைமை உணர்வு யுத்த மோதல்களின் போது தீவிரமடைந்திருந்தன. உண்மையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்தப் பகைமையுணர்வும் சந்தேகப் பார்வையும் மறைந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பகைமையுணர்வையும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகக்கண் கொண்டு அச்சத்துடன் நோக்குவதையும் நீக்கி ஓர் ஐக்கியத்தையும் நல்லுறவையும் உருவாக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை என்பது அவர்களது தாய்நாடாகிய இந்த நாட்டில் அவர்களின் இருப்புடன் சம்பந்தப்பட்டது. அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் அந்நிய தேசமொன்றில் இரண்டாந்தரக் குடிமக்களைப் போல வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் பிறப்புரிமையை மறுத்து,  அவர்களை வேண்டத்தகாதவர்களாகவும் எதிரிகளாகவும் நோக்குகின்றதோர் இனவாத அரசியல் உணர்வை பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் வளர்த்துவிட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய ஆபத்தான அரசியல் போக்கில் தொடர்ந்து பயணிக்கின்ற பேரின அரசியல்வாதிகள், அதிகாரப் போட்டிக்காக தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கின்றபோது சிறுபான்மை இன மக்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் அவர்களை நாடிச் செல்கின்ற அவர்கள் தேர்தல் முடிந்ததும் அவர்களைத் தூக்கி எறிந்து அவர்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளையே முன்னெடுப்பதையே வாடிக்கையான அரசியல் செயற்பாடாகக் கொண்டிருக்கின்றார்கள்.

புரிந்துணர்வு அவசியம்

இலைமறை காயாக இருந்த இத்தகைய அரசியல் போக்கு நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மிகவும் வெளிப்படையாகக் கையாளப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக வருபவர் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே  5 கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர்களுடனும், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன.

ஆனால் இந்தக் கோரிக்கைகள் என்ன என்பதை அதிகாரபூர்வமாகப் பெற்று அவற்றைப் பார்வையிடாமலேயே அவற்றை ஏற்க முடியாது. அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று பிரதான வேட்பாளர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அது மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் நிபந்தனைகள் எதனையும் ஏற்கவும் முடியாது என்று வெட்டொன்று துண்டுரெண்டாகக் கூறிவிட்டனர்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் அநேகமானோர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். அரிதாகவே அவர்களில் சிலர் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற உன்னதமான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இது இந்த நாட்டின் அரசியல் வரலாற்று அனுபவம்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பார்கள். அதற்காகத் தேர்தல் அறிக்கைகளில் - தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமது கொள்கைகளைப் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். அந்தப் பிரகடனத்தில் பல்வேறு வாக்குறுதிகளும் நிறைந்திருக்கும்.

அதேபோன்று தங்களால் தெரிவு செய்யப்படவுள்ளவர்கள் தாங்கள் விரும்புகின்ற அல்லது தமது தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கத்தான் செய்வார்கள். தேர்தலில் இது சகஜம். அந்தக் கோரிக்கைகளை வேட்பாளர்கள் ஏற்கலாம். அல்லது நிராகரிக்கலாம். அது அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது.

அதேபோன்று வாக்காளர்களாகிய பொதுமக்களும் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் கொள்கைகளும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய முன்மொழிவுகளையும் ஏற்று வாக்களிக்கலாம். அல்லது அவற்றைப் புறந்தள்ளி வாக்களிக்காமல் விடலாம். அது அவர்களுடைய உரிமை.

ஆனால் இரு தரப்பாரிடையேயும் இயல்பானதோர் உறவு நிலை இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள் கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் வேட்பாளர்கள் என்ற ரீதியிலும் வாக்காளர்கள் என்ற ரீதியிலும் இருதரப்பினருக்கும் இடையில் கனவான் நிலையிலானதொரு புரிந்துணர்வு இருப்பது அவசியம்.

கடும்போக்கினால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை

வேட்பாளராக இருப்பவர் ஆட்சி உரிமைக்காகத் தெரிவு செய்யப்படலாம். அதேநேரம் அந்த ஆட்சி நிர்வாகத்தின் பலன்களுக்கு உரிய குடிமக்களாக வாக்காளர்களே இருப்பார்கள். அந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அவருடைய கடமையும் பொறுப்புமாகும். இதனால் ஒருவருக்கு ஒருவர் பகை உணர்வைக் கொண்டு காரியங்களை முன்னெடுக்கவோ வாழ்க்கை நடத்தவோ முடியாது. எனவே இருதரப்பாரும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ்த்தரப்புக்கும்  குறிப்பாக பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் இடையில் புரிந்துணர்வு அடிப்படையிலான ஓர் அரசியல் உறவைக் காண முடியவில்லை. அதேபோன்று அவருடைய மூத்த சகோதரரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமாகிய மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தமிழ்த் தரப்புக்கும் இடையிலும்கூட இதே நிலைதான் நிலவுகின்றது.

ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை நிபந்தனைகளாகக் குறிப்பிட்டு அந்த நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ சீறி சினந்ததொரு போக்கில் தெரிவித்துள்ளார். அந்த நிபந்தனைகள் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் தமக்கு இல்லை என்றும் கூறியுள்ள அவர், அவைகள் நாட்டை பிளவடையச் செய்யும் நிபந்தனைகள் என வரையறை செய்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து வெளிப்பாடானது, தமிழ்த்தரப்பை எதிரிகளாகக் கருதுகின்ற நிலைமையையே வெளிப்படுத்தியுள்ளது. இது ஜனாதிபதி என்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய அதியுயர்ந்த அரசியல் தலைவருக்கான தேர்தலில் கொண்டுள்ள ஒரு பிற்போக்கான நிலைப்பாடு என்றே கூற வேண்டும். ஜனாதிபதியானவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய அரச தலைவராவார். அவர் ஓர் இனத்துக்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கோ மதத்தைச் சேர்ந்தவருக்கோ உரியவரல்ல. அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய ஒரு பொதுத் தலைவர். அத்தகைய தன்மை கொண்ட ஒருவர் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே நிலையில் கருதத்தக்கவராக இருத்தல் வேண்டும். பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற ரீதியில் தமிழ்த் தரப்பு தொடர்பில் அவர் ஜனாதிபதி தேர்தல் நிலைமையில் அவர் கொண்டுள்ள நிலைப்பாடு ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. சர்வாதிகாரப் போக்கிலானது.  

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கோத்தபாய ராஜபக் ஷ அந்தக் கட்சியின் தலைவராகிய அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக் ஷவின் வழிநடத்தலில் செயற்படுகின்ற ஒருவராவார். கடும்போக்குடைய அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றால், என்ன நடக்குமோ என்று சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களது எதிர்காலம் குறித்து ஏற்கனவே அச்சமடைந்துள்ளார்கள்.  

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 13 அம்ச கோரிக்கைகளை பிரிவினை வாதக் கொள்கையுடைய நிபந்தனைகளாக நோக்கி அவற்றுக்கு பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள கடும் போக்கிலான கருத்துக்கள் சிறுபான்மை இன மக்களை மேலும் கிலிகொள்ளவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இது நாட்டின் நன்மையான எதிர்காலத்துக்குரிய சாதகமான அறிகுறியாகத் தென்படவில்லை.

பி. மாணிக்கவாசகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41