ஆடை இறக்குமதி தொகுதியொன்றுக்கு 75ரூபாவாக காணப்பட்ட  செஸ்வரியை 200ரூபாவாக அரசாங்கம் திடீரென அதிகரித்தமையையடுத்து புறக்கோட்டை ஆடை இறக்குமதியாளர் சங்கம் இன்று கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்தியது.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30மணியளவில் புறக்கோட்டை கெய்ஸர் வீதியில் ஆரம்பமான பேரணி முதலாம் குறுக்கு வீதியூடான பிரதான வீதியை அடைந்து மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தை அடைந்தது.

சுங்கநுழைவாயிலுக்கு எதிராக சுமார் ஒரு மணி நேரமாக ஒன்றுகூடியிருந்த ஆடை இறக்குமதியாளர் சங்கத்தினர் மற்றும் வணிகர்கள், தொழிலாளர்கள் , செஸ்வரியை குறைக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், எமது கேரிக்கைகள் நியாயமானவை என்பதை வலியுறுத்தும் பாதாகைகளை தாங்கியிருந்ததோடு கோஷங்களையும் எழுப்பினர்.

ஆடை இறக்குமதி சங்கத்தின் தலைவர் நஜிமுதீன், உபதலைவர் தியாகராஜா, செயலாளர் குமார பிரேமசரா உட்பட பலர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.