நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லிந்துலை ஊவாக்கலை 3 ஆம் இலக்க தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கியதால் குடியிருப்புகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் மண்சரிவு அபாயத்தின் காரணமாகவும் 12 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் இடம்பெயர்ந்து தோட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பெய்த கடும் மழையினால் 12 வீடுகளை கொண்ட லயன் தொகுதிக்கு முன்னால் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டதுடன் லயன் தொகுதிக்கு பின்னால் காணப்பட்ட மண்மேடு சரிந்து விழும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இக்குடியிருப்பு பகுதியில் வசித்த இவர்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் நுவரெலியா பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, இவர்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதேச செயலகத்தினூடாகவும் இராணுவ படையினர் ஊடாகவும் அத்தோட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களுக்கான உணவு பொருட்களை பிரதேச செயலகத்தினூடாக அப்பகுதி கிராம அலுவலர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கடும் மழையால் இக்குடியிருப்பு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்த போதிலும் அதிகாரிகள் இவர்களுக்கான எவ்வித மாற்று நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக இம்மக்கள் அச்சத்துடன் இக்குடியிருப்புகளிலே வாழ்ந்து வந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

- மு.இராமச்சந்திரன்