பீபா 2022 உலகக் கிண்ணம், 2023 ஆசிய கிண்ணம் தகுதிகாண் : இலங்கையை 3 க்கு 0 என வெற்றிகொண்டது லெபனான்

Published By: R. Kalaichelvan

16 Oct, 2019 | 10:14 AM
image

(நெவில் அன்தனி)

லெபனானுக்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற கத்தார் 2022 உலக கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான இணை தகுதிகாண் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்டப் போட்டியில் பின்கள வீரர்களின் தவறுகளால் 3 க்கு 0 என்ற கோல்கள் வித்தியாசததில் இலங்கை தோல்வியைத் தழுவியது.

மழை காரணமாக மைதானத்தின் சில பகுதிகளில் நீர் தேங்கியிருந்ததால் இரண்டு அணிகளும் வேகமாக விளையாடும் உத்தியை மாற்றிக்கொண்டு விளையாட நேரிட்டதால் போட்டியில் விறுவிறுப்பு குன்றி காணப்பட்டது.

தமது சொந்த மண்ணில் பொதுவாக திறமையை வெளிப்படுத்தும் இலங்கை அணியினர் இப் போட்டியிலும் திறமையாக விளையாடி எதிரணியினர்  கோல் மழை பொழிவதைக் கட்டுப்படுத்திய வண்ணம் இருந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் லெபானன் கோல் எல்லையையும் ஆக்கிரமிப்பதை அவதானிக்க முடிந்தது. ஆனால், முன்கள வீரர்களிடமோ, மத்திய கள வீரர்களிடமோ கோல் போடும் ஆற்றல்கள் இல்லாததால் இலங்கையினால் கோல் எதனையும் போட முடியாமல் போனது.

மேலும் தூரத்திலிருந்து கோலை நோக்கி அசுர வேகத்தில் பந்தை உதைக்கும் ஆற்றலும் இலங்கை வீரர்களிடம் இல்லாதது பெருங் குறையாகும். இது குறித்து பயிற்றுநர் றூமி பக்கீர் அலி கவனம் செலுத்தி வீரர்களுக்கு விசேட பயிற்சி வழங்குவது அவசியமாகும். ஏனேனில் இலங்கை வீரர்களில் பலம்வாய்ந்த எதிரணிகளின் பின்களத்தை ஊடறுத்து செல்லும் ஆற்றல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

செவ்வாய் இரவு நடைபெற்ற போட்டியின் முதலாவது பகுதியில் பின்கள வீரர்கள் பந்தைக் குறிவைப்பதற்குப் பதிலாக எதிரணி வீரர்களைக் குறிவைத்ததால் இலங்கை அணி இரண்டு பெனல்டிகளை தாரைவார்க்க நேரிட்டது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் ராஹிப் அத்தாயாவின் கால்களை முரணான வகையில் பின்கள வீரர் நிக்கலஸ் ஹர்ஷா பெர்னாண்டோ பதம்பார்த்ததால் லெபனானுக்கு முதலாவது பெனல்டி வழங்கப்பட்டது. அதனை அணித் தலைவர் ஹசன் மாத்துக் கோலாக்கினார்.

தொடர்ந்து 38ஆவது நிமிடத்தில் இதே தவறை பின்கள வீரர் சலன பெரேரா இழைக்க, இரண்டாவது பெனல்டியை ஹிலால் எல் ஹெல்வே நேர்த்தியாக புகுத்த, லெபனான் 2 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது சந்தர்ப்பத்திலும் ராஹிப் அத்தாயா முரணான வகையில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இலங்கை அணியினர் லெபனான் கோல் எல்லையை ஆக்கிரமித்த போதிலும் வீரர்களிடம் கோல் போடுவதற்கான பலமும் ஆற்றலும் இருக்கவில்லை.

இடைவேளையின் பின்னர் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் இலங்கையின் கோல் எல்லையின் வலது புற பெனல்டி எல்லையில் பந்தைத் தனது பாதத்தில் கட்டுப்படுத்திக்கொண்ட லெபனான் வீரர் ஹிலால் எல் ஹெல்வே மிகவும் அற்புதமாக செயற்பட்டு இடது காலால் உதைத்து அலாதியான கோல் ஒன்றைப் போட்டார். அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பின்கள வீரர்கள் எல் ஹெல்வேயை  இரு புறங்களிலும் சுற்றவளைத்திருந்தால் அந்தக் கோல் தடுக்கப்பட்டிருக்கும்.

இதனிடையே அனுபவசாலியான கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மிகத் திறமையாக செயற்பட்டு குறைந்தது 3 கோல் போடும் வாய்ப்புகளைத் தடுத்தார். அன்றேல் லெபனானின் கோல் எண்ணிக்கை 6ஆக உயர்ந்திருக்கும்.

இறதியில் லெபனான் 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இலங்கை அணி முதல் கட்டத்தில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. துர்க்மேனிஸ்தான் (2 க்கு 0), வட கொரியா (1 க்கு 0), தென் கொரியா (8 க்கு 0), லெபனான் (3 க்கு 0) ஆகிய நாடுகளிடம் இலங்கை தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக மொத்தம் 14 கோல்கள் போடப்பட்டுள்ளபோதிலும் இலங்கையினால் ஒரு கோலைத்தானும் போட முடியாமல் போயுள்ளது.

இலங்கை தனது இரண்டாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தான் அணியை கொப்டெக் விளைளயாட்டரங்கில் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58