சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் ஒருபெண், தனது கணவர் புதுமனைவியுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற கோபத்தில் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டின் எல்லையோரம் உள்ள சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் குறித்த பெண்ணுக்கு திருமணமாகி 10 வருடங்களாகிறது. குறித்த தம்பதியருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குறித்த பெண்ணின் கைபேசிக்கு அவரது கணவர் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், தான் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அவளுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு செல்வதாகவும் தன்;னை தேட வேண்டாம் எனவும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். அதனை பார்த்த மனைவி கோபத்தில் குமுறியுள்ளார்.

தனக்கு துரோகம் செய்த கணவனை பழிவாங்க நினைத்த அவர், தனது வீட்டின்மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார். இருப்பினும், அழகான வீடு எரிவதை கண்டு மனம் பொறுக்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார். அவரது சப்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர், தீயை அணைத்து கட்டுப்படுத்தியதால் வீடு ஓரளவுக்கு தப்பியுள்ளது.

இந்த தீயில் அவரது 5 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.