அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றியது அனுர வென்றால் புதிய அரசியலமைப்பு

Published By: R. Kalaichelvan

12 Oct, 2019 | 08:44 AM
image

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதாக 2015ஆம் ஆண்டு    ரணில் விக்கிரமசிங்க  வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி  புதிய அரசியலமைப்பை  உருவாக்கவேண்டும் என எண்ணுகிறது.  புதிதாக அடிப்டை உரிமைகளை   உள்ளடக்கிய  தேர்தல் முறை திருத்தங்களுடன்   தேசிய பிரச்சினை  தீர்வுடன்  புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம்.  தற்போதைய அரசியலமைப்பை மாற்றவேண்டியது அவசியம். முழுமையாக   புதிய அரசியலமைப்பு    அவசியமாகிறது. தேசிய பிரச்சினை தீர்வுக்காக மட்டுமல்ல  என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இவற்றை குறிப்பிட்டார்.  செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தது ஏன்?

பதில் 28 அமைப்புக்கள் உள்ளடங்கிய தேசிய மக்கள் சக்தியின் ஊடாக  மக்கள் விடுதலை முன்னணி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்றது. அரசியல்வாதிகள் சிவில் சமுகத்தினர் நிபுணர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட  மக்கள் கேந்திர நிலையமாக இந்த  தேசிய மக்கள் சக்தி உள்ளது.  20 வருடங்களின் பினனர் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்றோம். 1999  ஆம் ஆண்டு இறுதியாக ஜனாதிபதி  தேர்தலில் களமிறங்கினோம்.  கடந்த காலங்களில்  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை  அகற்ற முயற்சித்தோம். அதற்காக  பல வேட்பாளர்களுடன் சில நுட்பங்களை கையாண்டோம். ஆனால் எந்தவொரு வேட்பாளரும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் நாடு  பொருளாதார அரசியல் ரீதியில் பாரிய வீழ்ச்சிகண்டது. அதனை மாற்ற நாங்களே  நேரடியாக ஈடுபடுவோம் என   எண்ணியே  நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எமது தலைமை ஊடாக  புதிய முன்னணியை  உருவாக்கியிருக்கின்றோம்.

கேள்வி கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது கட்சியாக எடுத்த தீர்மானங்ள் குறித்து கவலையடைகின்றீர்களா?

பதில் ஒருபோதும் இல்லை. வரலாற்றில் நாங்கள் எடுத்த தீர்மானங்கள் அன்றைய கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் சரியானவையாகும். 2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை விற்கும் வேலைத்திட்டத்தை தோற்கடிக்க தீர்மானம் எடுத்தோம். 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை தோற்கடிக்க தீர்மானித்தோம். அது தொடர்பில் நாங்கள் கவலையடையவில்லை.

கேள்வி எனினும் உங்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஆட்சிகளில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ?

பதில் மக்கள் எதிர்பார்த்த  விடயங்களை அந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. எனினும் நடைபெறவிருந்த பாரிய சேதங்களை நாங்கள் தவிர்த்திருக்கின்றோம்.  2015 ஆம்  ஆண்டில் மீண்டும்  ராஜபக்ஷ ஆட்சி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதனை சிந்திக்கவேண்டும். மக்கள் எதி்ர்பார்த்த அனைத்து விடயங்களையும் நடக்கவில்லை. ஆனால் ஒப்பீட்டு ரீதியில் ஒருசில விடயங்களை எடுக்க முடிந்தது. குறிப்பாக  19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக  அதிகாரங்கள்  குறைக்கப்பட்டன.  ராஜபக்ஷ ஆட்சி  இருந்திருந்தால் அது நடந்திருக்காது.

கேள்வி 2015 ஆம்  ஆண்டின் பின்னரான மாற்றம் அவ்வளவு மோசனமானதல்ல என்று கூறுகின்றீர்களா?

பதில் அதாவது ராஜபக்ஷ ஆட்சி இருந்திருந்தால் நாடு இன்னும் அராஜக நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். குடும்ப  ஆட்சி மேலும் பலமடைந்திருக்கும். ஜனநாயகம்  இருந்திருக்காது. எனவே 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்தமை  நாம் பெற்ற வெற்றி என்று கருதுகின்றோம்.

கேள்வி அப்படியானால் கடந்த முறைகளை போன்று  இம்முறையும் ஒரு பிரதான   தரப்புடன் இணைந்து பயணித்திருக்கலாமே?

பதில் 2015 ஆம் ஆண்டில் மக்களின் மக்கள் ஆணை   உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. அதனை புறக்கணித்தே மைத்திரி – ரணில் நாட்டை நிர்வகித்தனர். திருடர்களை  பிடித்து  தண்டனை கொடுப்பதாக கூறினாரகள். திருட்டை நிறுத்துவதாக கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.  மாறாக வந்ததுமே   மத்திய வங்கி பிணைமுறி மோசடியை  செய்தனர். இந்த நாட்டு மக்களின் 1100 கோடி ரூபாவை அழித்தனர். அதனை மக்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே 2015 ஆம் ஆண்டு மக்கள் எதிர்பார்த்த அபிலாஷை நிறைவேறவி்ல்லை.  அதனை நிறைவேற்றவே  அனுரகுமார திசாநாயக்க இம்முறை களமிறங்கியுள்ளார்.

கேள்வி மக்கள் விடுதலை முன்னணியினால் வெற்றிபெற முடியாது என்ற கருத்து உள்ளது. அதனால் எந்த நம்பிக்கையில் உங்கள் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்?

பதில் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அனுர குமார திசாநாயக்கவை வேட்பாளராக அறிவித்தோம்.  அன்று இலட்சக்கணக்கான மக்கள் காலிமுகத்திடலுக்கு வந்தனர். அதனை நாட்டு மக்கள் கண்டனர். அதில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அனுர திசாநாயக்கவை வெற்றிபெற வையுங்கள் என்று மக்களிடம் கேட்கின்றோம். நாம் வெற்றிபெறவே வந்துள்ளோம். எமது வேட்பாளரை வெற்றிபெறவைக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்கள் வெற்றிபெறுவார். இல்லாவிடின் பழைய திருடர்களே மீண்டும் வருவார்கள்.

கேள்வி 2004 ஆம்   ஆண்டு  39 எம்.பி.க்கள். 2015 ஆ ஆம் ஆண்டில் 6 எம்.பி. க்கள். மக்கள் விடுதலை முன்னணிக்கு என்ன நடந்தது?

பதில் அரசியல் நிலைமைகளின் காரணமாக கட்சிகளின் எம்.பி. க்கள் குறையலாம். கூடலாம்.  அதற்காக எல்லாம் முடிந்தது என்று அர்த்தம் இல்லை. 1977 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களுக்கு குறைந்தது. ஆனால் பின்னர் சுதந்திரக் கட்சி நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்தது. ஐ.தே.க. எதிர்க்கட்சியில் இருந்தது. கூடும். குறையும். எண் கணிதம் மாறாலாம். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது.

கேள்வி கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? “

பதில் அவ்வாறு இல்லை. எமது கொள்கைகள் ஏனைய பிரதான கட்சிகளின் கொள்கைகளுடன் வித்தியாசமானவையாகும். அந்த இரண்டு தரப்புக்கும் ஒரே  கொள்கையே  உள்ளது. அதாவது பழைய திருடர்களும் புதிய திருடர்களுமே வந்துள்ளனர். அவர்களை ஒன்றாக வைத்து  தோற்கடிக்கவேண்டும். இதில் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவார்கள்.

கேள்வி பிரதான கட்சிகளின்  இரண்டு வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் இருவரும் குடும்ப ஆட்சியாளர்கள். இருவரும் புதியவர்கள் அல்ல. கோத்தபாய என்பவர் ராஜபக்ஷக்களின் ஒரு சகோதரர். சஜித் பிரேமதாச என்பவர் பிரேமதாசவின் மகன். இரண்டு தரப்பினரும் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். நாடு வீழ்ச்சி கண்டுள்ளது என்று இருவரும் கூறினால் அதற்கு அவர்களும் காரணமாவார்கள். அதனால் குடும்ப ஆட்சி நாட்டை கெடுக்கும். ராஜபக்ஷவின் ஆட்சியில் கோத்தபாய பாதுகாப்பு செயலர். அப்போதுதான் வௌ்ளை வேன் கலாசாரம் கடத்தல்கள்  பயம் என்பன ஏற்பட்டன. அதனால் அந்த தரப்பை மக்கள் தோற்கடிப்பர். அதேபோன்று பிரேமதாச யுகமும் எங்களுக்கு நினைவிருக்கின்றது. பிரேமாசவின் மகன் சஜித்.  ஆனால் அவரின் வருகையினால் எந்த மாற்றமும் இல்லை. காரணம்  அவர் வந்தாலும் பிரதமர் ரணில்தான். கட்சியின் தலைவரும் ரணில்தான். அதனால் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக அதிகாரத்துக்கு வரும் ஜனாதிபதிக்கு பாரிய அதிகாரங்கள் இல்லை. ஒரு அமைச்சைக் கூட வைத்திருக்க முடியாது. எனவே அந்த அரசிலும்  பிரதமர் உட்பட்ட அமைச்சரவையே அதிகாரம் செலுத்தும். சஜித் வென்றால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு இருந்த அதிகாரம் கூட   கிடைக்காது.

கேள்வி அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?

பதில் நாங்கள் ஜனாதிபதி  தேர்தலில் வெற்றிபெற்றால் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். நான்கரை வருடங்ளில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானால் குறித்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை  கலைத்து தேர்தலுக்கு சென்று  புதிய அரசை அமைக்க முடியும்.  நிபுணர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உருவாகும்.

கேள்வி நீ்ங்கள் கூறும் இந்த  சந்தர்ப்பம் சஜித் மற்றும் கோத்தபாயவுக்கு கிடைக்குமல்லவா?

பதில் இல்லை. சஜித் ஜனாதிபதியானாலும் இந்த அரசாங்கம் மாறாது. காரணம் ரணில் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சஜித் வந்தாலும் பாராளுமன்றம் கலையாது.

கேள்வி அனுர வெற்றிபெற்றாலும் உடனடியாக பாராளுமன்றை கலைக்க முடியாதே?

பதில் நான்கரை வருடங்களின் பின்னர் முடியும்.

கேள்வி அந்த சந்தர்ப்பம் ஏனைய பிரதான வேட்பாளர்களுக்கும்  உள்ளதே?

பதில் இல்லை.   ரணிலை தொடர்ந்து வைத்திருப்பதாக சஜித் வாக்குறுதி அளித்துள்ளார்.

கேள்வி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை  மாற்றவேண்டும் என்ற ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டுக்கு என்ன நடக்கும்?

பதில்: எமது வேட்பாளர்   ஜனாதிபதி ஆகியவுடன் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க முடியாது. அதற்கு   பாராளுமன்ற அதிகாரம் தேவையாகும்.   சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும்.  எனவே  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அந்த முறைமையை நீக்கவோம் என பொய் சொல்லவிரும்பவில்லை. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் அரசாங்கம் அமைப்போம்.  அந்த அரசின் முதலாவது வேலையாக  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவோம். பாராளுமன்ற அதிகாரமுள்ள ஆட்சி முறையை கொண்டுவருவோம்.

கேள்வி: தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளர் அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்போது வெளிவரும்.?

பதில்:  எமது விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி  பத்தரமுல்லையில்  வெளியிடப்படும்.

கேள்வி: இதனூடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்  உங்கள் அணுகுமுறை எவ்வாறிருக்கும்?

பதில்: மிகத் தெளிவாக இந்த நாட்டின் தமிழ், சிங்கள முஸ்லிம், மற்றும்   பௌத்த இந்து , கிறிஸ்தவ,  இஸ்லாம்,  வித்தியாசமின்றி அனைத்து மக்களினதம் உரிமைகளை   நாம் பாதுகாப்போம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும்.  அனைத்து மக்களையும் சமமாக பார்ப்போம்.அந்த கோட்பாடுகளை  அடிப்படையாக  கொண்டு  தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம். அதனை எமது தேசிய சக்தியின்  ஊடாக மட்டுமே செய்யமுடியும். மாறாக இரண்டு பிரதான கட்சிகளினால் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

கேள்வி: மேலும் இதில் சில விடயங்கள் உள்ளன. அதிகாரப்பகிர்வு, அரசியல் அதிகாரம், போன்றன உள்ளன. இவை தொடர்பில்?

பதில்:  மக்களுக்கு அதிராத்தைப் பகிரும் கொள்கையையே நாம் கொண்டுள்ளோம்.  கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ளவருக்கும் அம்பாந்தோட்டை சூரியவெவில் உள்ளவருக்கும்  ஒரே சமமான அதிகாரம் கிடைக்கவேண்டும்.  ஒருவர் தமிழர் என்பதால் குறைந்த அதிகாரமும்,  மற்றொருவர் சிங்களவர் என்பதால் கூடிய அதிகாரமும் வழங்கப்பட முடியாது.  பிரஜைகளைப் பலப்படுத்தும் கொள்கை எம்மிடம் உள்ளது. 

கேள்வி: இப்படி ஒரு தீர்வைக் கொடுப்போம் என்று கூறாமல் முன்னெச்சரிக்கையாக  பேசுகின்றீர்களா?

பதில்: அவ்வாறு இல்லை. நாம் பொய் கூறவில்லை.  வாக்குகளைப் பெறுவதற்காக பொய்களை கூற முடியாது. 2015ஆம் ஆண்டு  வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவ்வாறான பொய்த்தனமான வேலைகளை நாம் செய்யமாட்டோம். 

கேள்வி: மாகாணசபை முறைமை தொடர்பாக?

பதில்: மாகாணசபை முறைமை  நாம் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் அரசியலமைப்பில் இருக்கிறது.

கேள்வி; அதில் ஏதாவது மாற்றத்தை மக்கள் விடுதலை முன்னணி கோருகின்றதா?

பதில்: மக்கள் விடுதலை முன்னணி  புதிய அரசியலமைப்பை  உருவாக்கவேண்டும் என எண்ணுகிறது.  புதிதாக அடிப்டை உரிமைகளை   உள்ளடக்கிய  தேர்தல் முறை திருத்தங்களுடன்   தேசிய பிரச்சினை  தீர்வுடன்  புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம்.  தற்போதைய அரசியலமைப்பை மாற்றவேண்டியது அவசியம். முழுமையாக   புதிய அரசியலமைப்பு    அவசியமாகிறது. தேசிய பிரச்சினை தீர்வுக்காக மட்டுமல்ல.  ஏனைய பிரச்சினைகளையும் பார்க்கவேண்டியுள்ளது.

கேள்வி: மஹிந்த தரப்பு  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ சிறையில் இருக்கின்ற  இராணுவ வீரர்களை விடுவிப்பதாக கூறியிருக்கின்றார்.  அதேபோன்று சஜித் பிரேமதாஸ பாதுகாப்பு துறையை பொன்சேகாவுக்கு வழங்குவதாக கூறியிருக்கின்றார்.  இவை தொடர்பில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசியல் கைதிகளை  விடுவிக்கவேண்டுமென  15 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் கூறினோம். அதனை  இப்போதும் நாங்கள் கூறுகின்றோம். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர், சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதியாவார். அவர்கள் இருவரும் செய்த வேலைகள்  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.  அவர்கள் இருவரும் யுத்த மனநிலையிலேயே இருக்கின்றனர்.  யுத்த மனநிலையில் எமது நாட்டின்  பாதுகாப்பு பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மக்கள்  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாலேயே   தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.  இவை இரண்டும் வேறுபட்ட விடயங்கள்.  தேசிய ஒற்றுமை ஊடாக  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.  யுத்த மனநிலையுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. அதனூடாக மேலும் விரிசல்களே ஏற்படும்.  எனவே இரண்டு தரப்பினரும் பயங்கரமானவர்கள்தான். இராணுவ தலைமைத்துவம் என்பது நாட்டுக்கு பொருந்தாது. உலகம் ஜனநாயகத்தை நோக்கிப் பயணிக்கிறது. 

கேள்வி: தமிழ் தேசியக்கூட்டமைப்பு  உங்களுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் பேசப்படகின்றதா?

பதில்: தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அதிகமான எம்.பி.க்கள்  எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளனர்.   உத்தியோகப்பற்றற்ற நிலையில்  இந்த  பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.   அவர்களின் பக்கம் ஒரு பச்சை  வெளிச்சம் தெரிகிறது.  தமிழ் தேசியக்கூட்டமைப்பாக இந்த நடவடிக்கை  இடம்பெறவில்லை. ஆனால்  தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்த முடிவை எடுத்தாலும் தமிழ் மக்கள்  இரண்டு பிரதான கட்சிகளையும் நிராகரித்து எம்முடன் இணைந்துகொள்வார்கள்.  அதனால்தான் கூட்டமைப்பு இன்னும்  தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கின்றது.  நாம் அந்த விடயத்தில் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

கேள்வி:  வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர்   பிரச்சினைக்கு தீர்வு முறை என்ன?

பதில்:  யுத்தம் முடிந்ததும்  காணாமல்போனோரின் பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை அவசரமாக தீர்க்குமாறு   நாம் அன்றே கூறினோம்.  காணாமல்போனோர் விவகாரம் என்பது பாரிய  அளவில் மக்களை வருத்தும் செயற்பாடாகும்.  கணவனை இழந்த பெண்கள், தாய்மார், பிள்ளைகள் என  பலர் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.  அந்தப் பிரச்சினை ஆமை வேகத்திலேயே பார்க்கப்படுகின்றது. அதற்காக அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டாலும் அதனூடான  செயற்பாடுகளும் தாமதமடைந்தே காணப்படுகின்றன.  மாறாக  விரைவாக   மூன்று அல்லது ஆறுமாதங்களில்  இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும். அதற்காக நாம் முன்வருவோம்.

கேள்வி: பொறுப்புக்கூறல் விடயத்தில் உங்கள் வேட்பாளரின் நிலைப்பாடு என்ன?

பதில்:  உண்மையைக் கண்டறியும் ஒரு ஆணைக்குழு நிறுவப்பட்டு  இந்த விடயங்கள் ஆராயப்படும் என   2009ஆம் ஆண்டே நாங்கள் கூறினோம். அரசாங்கம் இன்னும் அதனை செய்யவில்லை.  ஐ.நா.வும் அதனை வலியுறுத்தியது.  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம்  நேர்மையாக  இந்த விடயத்தை அணுகவில்லை.  வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றின.

கேள்வி: சரி உங்கள் அணுகுமுறை என்ன?

பதில்: பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரதும் காயங்களை ஆற்றவேண்டும். அதற்கு ஒரு பொறிமுறை அவசியம். சில விடயங்களை  எந்த நிலைமையிலும் மீண்டும் கொண்டுவர முடியாது.    எனவே   உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஊடாக  என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.     யுத்தத்தின்போது கப்பம் பெற்றுக்கொண்ட விடயங்களும் உள்ளன.   பாலியல்  வன்முறை சம்பவங்களும் உள்ளன.   கிருஷாந்தி குமாரசுவாமி சம்பவத்தையும் கூறலாம்.  எப்படியும்  இங்கு உண்மைகள் கண்டறியப்படவேண்டும்.  அதன்பின்னர்  சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ  அல்லது  மன்னிப்பளிப்பதோ தீர்மானிக்கப்படவேண்டும். ஆனால் அரசாங்கம்  அதில் நேர்மையாக செயற்படவில்லை.

கேள்வி: அப்படியாயின் நீங்கள் வெற்றிபெற்றால் உண்மையை கண்டுபிடிப்பீர்களா?

பதில்: மிகத் தெளிவான முறையில் அந்த உறுதியை  வழங்குகின்றோம். உண்மை மற்றும் நல்லிணக்கம் என்ற வசனத்தைநாங்கள் பயன்படுத்துகின்றோம்.

கேள்வி: அந்த செயற்பாடு உங்கள் அரசியல் பயணத்திற்கு தடையாக அமைந்தால்

பதில்:   அப்படி இல்லை.    இது தொடர்பாக  நாம் 2009ஆம் ஆண்டே எமது யோசனைகளை முன்வைத்தோம்.  ஐ.நா. கூறுவதற்கு முன்னரே நாம் கூறிவிட்டோம். 

- ரொபட் அன்டனி -  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22