தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பகல் 12 மணி நிலைவரப்படி அ.தி.மு.க. கூட்டணி 130 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி 95 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு இடம்பெற்று முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. 

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதியம் 12 மணி நிலைவரப்படி அ.தி.மு.க. கூட்டணி 130 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி 95 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன. 

3 இடங்களில் அ.தி.மு.க.வும் இரண்டு இடங்களில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரத்தநாட்டில் தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தை 3642 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.

ஆர்.கே.நகரில் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். ஜெயலலிதா 27,484 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 16964 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வசந்திதேவி 1,302 வாக்குகளும் பெற்றுள்ளார்.

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். விளாத்திக்குளத்தில் அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 

ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பின்தங்கியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தே.மு.தி.க. அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 5325 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.